
'கோரை' என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். இது தேரிக்காடு போன்ற வறண்ட பகுதிகளில் வளரக்கூடிய தாவரம். கோரைக் கிழங்கானது நீர்ப் பரப்பான இடங்களில் எளிதில் கிடைக்கும். கசப்பு தன்மை உடையது. சீன, இந்திய மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
கோரைக்கிழங்கு புல் வகைச் சார்ந்த செடி வகை தாவரம். தாவரத்தின் வேர்க் கிழங்குகளே கோரைக்கிழங்கு எனப்படும். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
கோரைக்கிழங்கு காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கோரைக்கிழங்கு சிறுநீரைப் பெருக்கும். வியர்வையை அதிகமாக்கும். உடல் வெப்பத்தை அகற்றும்.
உடலை பலமாக்கி வலுப்பெறச் செய்யும் வயிற்று புழுக்களை கொல்லும் சக்தி கொண்டது. மாதவிடாயைத் தூண்டும். குழந்தைகளுக்கு செரிமான சக்தியை அதிகரிக்கும்.
இது ரத்தத்திலுள்ள அசுத்தங்களை அகற்றும் ஆற்றல் கொண்டது. நாட்பட்ட வயிற்று போக்கையும் நிறுத்த வல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தந்து உடல் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
கோரைக் கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு அரை தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, தசைவலி குணமாகும்.
கிழங்கு பொடியை பாலில் கலந்து உடலில் பூசி குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து பேஸ்ட்டாக்கி தேன் சேர்த்து ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியாகும்.
இந்த கோரைக்கிழங்கை உண்பதன் மூலம் புத்தி கூர்மை, தாது விருத்தி, உடல் பொலிவை கூட்ட முடியும். பச்சையாக கிழங்கை சுத்தம் செய்து விட்டு அரைத்து மார்பகத்தில் பூசி வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)