
நம் எல்லோர் வீட்டிலேயும் மதிய உணவில் பருப்பு இல்லாமல் இருக்கவே இருக்காது. பருப்பு கடைசல், சாம்பார், ரசம், கீரை கடைசல், கூட்டு என எல்லாவற்றிலும் இந்த பருப்பு வகைகள் சேர்க்கப்படுகிறது. நம் இந்தியர்களின் அன்றாட உணவில் பருப்பு இல்லாமல் சமையலே ஆகாது. பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. குழந்தைகளுக்கும் பருப்பு மிகவும் ஏற்ற ஒரு சத்தான உணவாக கருதப்படுகிறது.
ஆனால், அதே சமயத்தில் எல்லா விதமான பருப்புகளும் எல்லோருக்கும் ஒத்துக் கொள்கிறதா? என்று பார்த்தால் இல்லை. சில பேருக்கு சில பருப்பினால் வாயு பிரச்னைகள் உண்டாகின்றன. மேலும் ஒரு சிலருக்கு அஜீரணமும் ஏற்படுகிறது. எந்தெந்த பருப்பில் நன்மைகள் உண்டாகும், பிரச்னைகள் உண்டாகும். மேலும் எது உடம்பிற்கு நல்லது என்பதை பற்றி எல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம். (Lentils health benefits)
பாசிப்பருப்பு குடலுக்கு மிகவும் உகந்த பருப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இந்த பருப்பு லேசானது. மேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவே இருக்கின்றன. இந்த பருப்பு எளிதில் உடைந்து ஜீரணமாகக் கூடியது. அதனால்தான் மருத்துவர்கள் பெரும்பாலும் நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் பாசிப்பருப்பையே பரிந்துரைக்கிறார்கள்.
இது மற்ற பருப்பு வகைகளை விட மிக குறைவான வாயுவை உண்டாக்குகிறது குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் என அனைவருக்கும் இது ஏற்றது. மஞ்சள் பாசிப்பருப்பு மற்றும் பச்சை பயறு இரண்டுமே எளிதில் ஜீரணமாகக் கூடியது.
'மசூர் டால்' எளிதில் ஜீரணமாக கூடிய மற்றொரு பருப்பாகும். இந்த பருப்பு விரைவிலேயே வெந்து விடும் என்பதால் இதை ஊறவைக்க தேவையில்லை. இந்த பருப்பும் விரைவிலேயே செரிமானம் ஆகி விடும்.
இதில் இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்திருப்பதால் லேசான ஆனால் நிறைவான உணவை விரும்புவோருக்கு இது ஏற்றது. இருப்பினும், அதிக எண்ணெய் அல்லது மசாலாப் பொருட்களுடன் கலந்து இந்த பருப்பை சமைத்தால், சிலருக்கு வயிற்றில் லேசான வீக்கம் ஏற்படலாம்.
இந்தியாவில் பொதுவாக உண்ணப்படும் பருப்பு வகைகளில் இந்த பருப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக நாம் அன்றாடம் தயாரிக்கும் சாம்பாரில் இதை தான் சேர்க்கிறோம். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருந்தாலும், இந்த பருப்பானது பாசிப்பருப்பு மற்றும் மைசூர் பருப்பை விட கனமானது.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த பருப்பை நன்றாக வேக வைத்து உண்ணவில்லை என்றால், அவர்கள் வாயு அல்லது அமிலத்தன்மையை அனுபவிக்க நேரிடும். ஆகவே, இந்த பருப்பை சமைப்பதற்கு முன்னால் சிறிது நேரத்திற்கு ஊறவைத்து பிறகு நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் செரிமானம் எளிதாக இருக்கும்.
உளுத்தம் பருப்பு சத்தானது, ஆனால் பலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதில் கொழுப்பு மற்றும் சிக்கலான புரதங்கள் அதிகமாக உள்ளதால், வீக்கம் மற்றும் கனத்தை ஏற்படுத்தும். நம் தென்னிந்தியாவை பொறுத்தவரை நாம் இந்த உளுத்தம் பருப்பை இட்லி தோசைக்கு தான் அதிகமாக உபயோகிப்போம். ஆனால், வட இந்தியாவில் இந்த உளுத்தம் பருப்பை கூட டால் செய்து சாப்பிடுகிறார்கள்.
இந்தப் பருப்பை மிதமாகச் சாப்பிடுவது நல்லது. மேலும் செரிமானம் பலவீனமானவர்களுக்கு இது உகந்ததல்ல. இட்லி மற்றும் தோசை மாவில் பயன்படுத்தப்படும் போது நொதித்தல் காரணமாக எளிதில் ஜீரணமாகி விடும்.
கடலை பருப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகவே நீண்ட நேரத்திற்கு உங்கள் வயிறு நிரம்பி இருக்கும். ஆனால், இந்த பருப்பை ஜீரணிக்க கடினமாக இருக்கும். இந்த பருப்பை வேக வைப்பதற்கும் அதிக நேரம் எடுக்கும். அடிக்கடி சாப்பிட்டாலோ அல்லது சரியாக ஊற வைக்காமலும், நன்றாக வேக வைக்காமலும் சாப்பிட்டாலோ வாயு ஏற்படலாம்.
இஞ்சி, சீரகம், பெருங்காயம் மற்றும் ஓமம் போன்ற செரிமானத்திற்கு உதவும் மசாலாப் பொருட்களை இந்த பருப்புடன் கலந்து சமைத்து சாப்பிட்டால், அசௌகரியத்தை குறைக்கலாம்.
ஆகவே, பாதுகாப்பான லேசான, சத்தான மற்றும் வயிற்றிற்கு மென்மையான பருப்பு எதுவென்றால் அது பாசி பருப்பு மற்றும் பச்சை பயறு தான். இது இந்திய சமையலறைகளில் முதன்மையான மற்றும் ஆரோக்கியமான பருப்பாகவும் கருதப்படுகிறது. பச்சை பயறை சமைக்கும் போது ஊறவைத்து சமைக்க வேண்டும்.
அதிகபட்ச நன்மைக்காக எளிய மற்றும் எளிதில் செரிமானமாகக் கூடிய மசாலாப் பொருட்களை இந்த பருப்புடன் சேர்த்து சாப்பிடவும்.