தேமல் என்பது ஒருவித பூஞ்சையினால் வரும் சரும பாதிப்பு. இதை பிரச்சனை என கொள்ள தேவையில்லை. ஏனெனில், இது பரவாது, ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு ஒட்டாது. உணவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகம் காணப்படுகிறது. ஏனெனில், நேரடி சூரிய ஒளிப்படும் இடங்களில் வியர்வை உற்பத்தி அதிகமாவதால் ஏற்படும் பூஞ்சை தொற்று இது.
இது உடல், முடி, நகம் போன்ற இடங்களில் நம்மோடு சேர்ந்து வளரும் ஒரு பூஞ்சை. இது உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு, வியர்வை அதிகம் உள்ளவர்களுக்கு, அனலான இடத்தில் வேலை பண்ணுபவர்கள், உடலில் ரோமங்கள் அதிகம் உள்ளோர்க்கு வர வாய்ப்பு அதிகம். சிறியோர் முதல் பெரியவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
இந்த தேமல், MALASSESIA FURFUR என்ற பூஞ்சையால் வரக்கூடியது. இது படர் தாமரை போல் படர்ந்து, அறிகுறிகளை ஏற்படுத்தாத காரணத்தினால், பல வருடங்கள் ஒருவரது உடலில் இருக்கும். பிரதானமாக இது தலையிலுள்ள பொடுகில் அதிகம் காணப்படுகிறது.
முதுகு மற்றும் இடுக்கு பாகங்களில்அதிகம் காணப்படும். வெண்மையாக உள்ளோர்க்கு கருப்பு திட்டு (தேமல்), கருத்த நிறம் கொண்டோர்க்கு வெள்ளை நிற திட்டுகளாக காணப்படும்.
படர்தாமரை வேறு, தேமல் வேறு. அதேபோல் வெள்ளை திட்டுகள் இருந்தாலே வெண்புள்ளிகள் (VITILIGO) என்று நினைப்பர். அது கிடையாது. இதை கண்டறிய பரிசோதனையாக சரும மருத்துவரிடம் காட்டும் போது அவர்கள் கண்ணால் பார்த்தாலே சொல்லி விடுவார்கள்.
சில சமயங்களில் தேமல் உள்ள பகுதியை சிறிது சுரண்டி பரிசோதனைக்கு அனுப்புவர். அதைக் கொண்டு தேமல் வகையை உறுதி செய்து கொண்டு மருந்துகள், க்ரீம்கள் எழுதி கொடுப்பர். வாயால் உட்கொள்ளும் மருந்துகள் வாரம் ஒரு முறையோ, இருமுறையோ சாப்பிட சொல்வர். சுய சுத்தம் பேண வேண்டும். தினமும் இருமுறை குளித்தல், தலையை தினமும் அலசுதல் அவசியம். வியர்வை தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இது பெருமளவு பரவாது. அவரவர் உடலில் தோன்றும் தொற்று என்பதால் தனியாக துணிகளை அலசுதல் போன்றவை தேவைப்படாது.
உணவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. எனவே, சமச்சீரான சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் போதுமானது.
உடற்பருமன் முக்கிய காரணம் என்பதால் எடையை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
எந்தவித சரும உபாதைகளும் சரியான போஷாக்கு இல்லையெனில் மறுபடியும் வர வாய்ப்பு இருப்பதால் மருத்துவர் சொல்லும் மருந்து, க்ரீம்களுடன் சுத்தம் பேணி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தேமல் வராது.
தேமலுக்கு கை வைத்தியம் ஆக ஏதாவது செய்து அதை பெரிதாக்கிக் கொள்ளக் கூடாது. ஆரம்ப கட்டத்திலேயே நோய்களை சரியாக கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள நலமாக இருக்கலாம்.