ஃபிளவனாய்டு என்பது முன்பு வைட்டமின் P என்று அழைக்கப்பட்டு வந்தது. இது அடர் நிறம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழ வகைகளில் காணப்படும் ஒரு தாவர வகைக் கூட்டுப் பொருளாகும். இது இயற்கை முறையில் உண்டாக்கப்படுவது. நம் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்பட்டு நாள்பட்ட வியாதிகள் உருவாகும் அபாயத்திலிருந்து காக்க உதவுகிறது.
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் நோயை குணப்படுத்தவும், உடலில் பல்வேறு காரணங்களால் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்கவும் துணை புரிகிறது. இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்து இதய ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது.
ஃபிளவனாய்டுகளிலிருந்து நம் உடலுக்குக் கிடைக்கும் மற்ற ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஃபிளவனாய்டுகள் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும், அக்கிருமிகள் உண்டாக்கும் நோயிலிருந்து குணமடையவும் உதவி புரிவதோடு, உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றன.
கேன்சர் நோய் பரவச் செய்யும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, சில வகைக் கேன்சர்நோய்கள் உண்டாகும் அபாயத்திலிருந்து உடலைக் காக்கின்றன. இவற்றிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது மூளை நரம்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவு புரிகிறது. மூளையின் செல்களுக்குச் செல்லும் நரம்புகளில் இரத்த ஓட்டத்தைச் சிறப்பாக்கி நரம்புகளில் சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
ஃபிளவனாய்டுகள், அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுகளால் சருமத்தில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. வெயில் சூட்டினால் உண்டாகும் சன் பர்ன் (sunburn) மற்றும் சருமப் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கவும், சருமத்திற்கு முழு ஆரோக்கியம் தரவும் உதவி புரிகின்றன.
பில்பெரீஸ் மற்றும் சிட்ரஸ் வகைப் பழங்களில் காணப்படும் சில வகைப் ஃபிளவனாய்டுகள் பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகின்றன. வயதான காரணத்தினால் கண்களில் உண்டாகும் காட்டராக்ட் (cataracts) மற்றும் மாக்குலர் (macular) சிதைவு போன்ற நோய்களின் தாக்கத்தைத் தள்ளிப்போகவும் உதவிபுரிகின்றன.
வாழைப்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு, வெள்ளரி, தக்காளி, பச்சை, மஞ்சள், சிவப்பு நிறம் கொண்ட குடைமிளகாய்கள், கோஸ், பீன்ஸ் போன்ற பயோ ஃபிளவனாய்டுகள் (Bioflavonoids) நிறைந்த தாவர உணவுகளை நாமும் அடிக்கடி உட்கொண்டு அவற்றிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பெற்று நலமுடன் வாழ்வோம்.