

உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் (Lipoma) என்பவை தோலுக்கு அடியில் உருவாகும் மென்மையான, புற்றுநோயற்ற கொழுப்பு திசுகளின் வளர்ச்சியாகும். இவை பொதுவாக வலி இல்லாதவை, நகர்த்தக் கூடியவை. முதுகு, தோள், கழுத்து, கைகள் போன்ற இடங்களில் வரலாம்.
1) கொழுப்பு கட்டிகள் (Fatty lump under skin) வருவதற்கான காரணங்கள்:
கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்வதால் ஏற்படுகிறது. இது மரபு வழி சார்ந்ததாகவும் இருக்கலாம். அடிபட்ட இடத்தில் கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து கட்டியாக மாறலாம்.
அதிக உடல் பருமன் ஒரு காரணமாக இருக்கலாம். 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகம் வரலாம்.
2) அறிகுறிகள்:
தோலுக்கு அடியில் மென்மையான, உருண்டையான கட்டி. ரப்பர் போன்று வட்ட வடிவில் அல்லது நீள் வட்டமாக இருக்கும். தொடும்பொழுது நகரும். இவை பொதுவாக வலியற்றது. ஆனால் அளவு பெரிதாகி நரம்பை அழுத்தினால் வலி ஏற்படலாம்.
உடலின் பிற பகுதிகளான முதுகு, கழுத்து, கைகள், தோள்கள், தொடைகள் போன்ற பகுதிகளில் காணப்படும்.
அரிதான சந்தர்ப்பங்களில் லிபோசர்கோமா போன்ற புற்றுநோய் கட்டிகள் கொழுப்பு கட்டியைப் போல தோன்றலாம். எனவே சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
3) சிகிச்சை:
பெரும்பாலானவை பாதிப்பில்லாதவை. பெரிய கட்டிகள் அல்லது அதனால் அசௌகரியம் ஏற்பட்டால் மருத்துவர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம்.
கட்டியை தவறாமல் கண்காணித்து, அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகலாம்.
கட்டி வலித்தால் அல்லது வீங்கினால், கட்டி வேகமாக வளர்ந்தால், கட்டியின் நிறம் அல்லது தோலில் மாற்றம் தெரிந்தால், அதிகமாக நரம்புகளை அழுத்துவதாக உணர்ந்தால் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.
4) பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியங்கள்:
வீட்டிலேயே எளிமையான முறையில் கொழுப்பு கட்டிகளை கரைக்க முடியும். காட்டன் துணியில் சிறிதளவு கல் உப்பை வைத்து ஒரு சிறு துணியால் முடிச்சு போல் கட்டிக் கொள்ளவும். தோசை கல்லில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அதில் இந்த சிறு துணி மூட்டையை வைத்து தோய்த்து, பொறுக்கும் சூட்டில் கொழுப்பு கட்டிகள் மேல் ஒத்தடம் கொடுத்து வர விரைவில் கரைந்து விடும்.
சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் கொடிவேலி எண்ணெய்யை வாங்கி, கொழுப்பு கட்டிகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து வர சில நாட்களில் கட்டிகள் மறைந்துவிடும். இந்த கொடிவேலி தைலம் மசாஜ் எந்த பக்க விளைவுகளும் இல்லாதவை.
உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்குவதால் கூட இந்த கொழுப்பு கட்டிகள் தோன்றக்கூடும். எனவே இயற்கை உபாதைகளை அடக்காமல் இருப்பது கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.
ஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. மேலும் இவற்றில் உள்ள அமிலத்தன்மை உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும். எனவே கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.