சென்னையில் கல்லூரி மாணவிகள் விடுதி ஒன்றில் அவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் பல்லி விழுந்திருந்ததாகவும், அந்த உணவை உட்கொண்ட பல மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் என்று ஏற்பட்டதாகவும் செய்தியைப் படிக்க நேர்ந்தது.
பொதுவாகவே உணவில் கரப்பான் பூச்சியோ, பல்லியோ விழுந்திருக்குமானால், அதைப் பார்ப்பவர்கள் உடனே அருவருப்படைவார்கள். அந்த உணர்வாலேயே அவர்கள் மயக்க நிலை கொள்வார்கள்; வாந்தி எடுக்கவும் செய்வார்கள். அவர்கள் மட்டுமல்ல, இத்தகைய உணவை சாப்பிட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவர்கள், அதைத் தாம் சாப்பிடாவிட்டாலும், அருவருப்பு அடைகிறார்கள். இது உணர்வுபூர்வமான முதல் காரணம்.
அடுத்து அந்த பல்லியின் விஷத்தன்மை. பல்லி விழுந்திருப்பதை அறியாமலேயே அந்த உணவை சாப்பிட்டவர்கள் மயங்கி விழுவதோ, வாந்தி எடுப்பதோ செய்வதற்கான இரண்டாவது காரணம் இந்த விஷத்தன்மைதான்.
அதற்குப் பிறகு பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் நலமடைந்தார்கள் என்ற தொடர் செய்தி ஆறுதலைத் தருகிறது.
சமைக்கப்பட்ட பொருட்களோடு பல்லி சேருவதற்கு என்ன காரணம்? அந்தப் பொருட்களைக் கொள்முதல் செய்தபோதே அது கலந்துவிட்டிருந்ததா? சமையலறையின் மேல் விதானம் அல்லது அசுத்தமான இண்டு, இடுக்குகளில் அது வாசம் செய்து, தயாரிக்கப்பட்டிருந்த சூடான உணவுப் பொருளில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதா? அல்லது பொல்லாதவர்கள் யாரேனும் செய்த போக்கிரித்தனமா?
காரணம் பலவாறாக ஊகிக்கப்பட்டாலும், உணவு தயாரிக்கப்படும் இடத்தின் சுகாதாரக் குறைவுதான் அவற்றில் பிரதானமாகத் தெரிகிறது.
பொதுவாகவே ஒரு ஓட்டலுக்கு சாப்பிடச் செல்கிறோம் என்றால், அந்த ஓட்டலின் சமையலறையைப் பார்க்கக் கூடாது என்பார்கள். ஏனென்றால், அந்த அறையில் புகை மண்டியிருக்கும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருக்கும், காய்கறிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும், ஒரு ஓரத்தில் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருப்பார்கள், தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் மணத்தையும் மீறி மெலிதான துர்நாற்றம் சூழ்ந்திருக்கும், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் ஆண்கள் உஷ்ணம் கருதி மேலாடை அணிந்திருக்க மாட்டார்கள், அவர்கள் உடலிலிருந்து வியர்வைப் பெருகிக் கொண்டிருக்கும், அந்த அறை தேவையான வெளிச்சமின்றியும், கரிப்பிடித்தலுமாக இருண்டிருக்கும்....
ஆனால், தற்போது சராசரிக்கும் மேற்பட்ட பல ஓட்டல் சமையலறைகளில், இந்த முறைகேடுகள் இருப்பதில்லை என்பது உண்மைதான். எல்லாவற்றிற்கும் மேலாக அரசு சுகாதாரத்துறையின் தர, நற்சான்றிதழ், வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும் விதி இருக்கிறது.
பொதுவாக மாணவர் விடுதி, பணியாளர்கள் விடுதி போன்ற இடங்களில் அவர்களுக்கு சமையல் செய்து தருவதை சில ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்வது வழக்கம். அவர்கள் தங்கள் பணியில் காட்டும் அக்கறையின்மையினாலும், அலட்சியப் போக்கினாலும் உணவில் பல்லி விழுவதுபோன்ற அவலங்கள் நடைபெறுகின்றன.
இதுபோன்ற சம்பவங்களுக்கு வெகு எளிதாக ஒப்பந்தக்காரரை தண்டித்து விடலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த அனுபவம், அதே விடுதியில் அடுத்து உணவு அருந்தும்போது மீண்டும் நினைவுக்கு வருமே! வெகுகாலத்துக்கு இந்த அருவருப்பான சம்பவம் மறக்காதே!
இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு, தன் குடும்பத்தாருக்கு உணவு தயாரிப்பதானால் தாம் எவ்வளவு அக்கறையுடன் செய்வோமோ அதுபோன்ற ஆத்மார்த்த ஈடுபாட்டுடன் உணவு தயாரிக்கப்பட வேண்டும். இது ஒப்பந்தக்காரர் முதல் சமையலறையைக் கழுவிவிடும் கீழ்நிலைப் பணியாளர்வரை ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிய வேண்டும். சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் முறைவைத்து சமையலறையில் எல்லா அம்சங்களையும் பரிசோதிக்க வேண்டும், அவ்வப்போது குறைகளைக் களைந்து, தேவைப்பட்டால் உரிய திருத்தங்களையும், கண்டிப்பான மாற்றங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும்.
உடலையும், உயிரையும் வளர்ப்பதற்குத்தான் உணவே தவிர, நோயையும், ஆரோக்கியக் குறைவையும் ஏற்படுத்த அல்ல என்பதை சம்பந்தப்பட்ட அனைவருமே புரிந்துகொள்ள வேண்டும்.