
முதுகு வலி என்பது உடலின் பின்புறத்தில் கழுத்தின் அடிப்பகுதியிலிருந்து பிட்டத்தின் மேல் பகுதி வரை உணரும் அசௌகரியமாகும். இது பல காரணங்களால் வருகிறது. தசை திரிபு, வட்டு தளர்ச்சி, கீல்வாதம் போன்றவை முதுகு வலிக்கான பொதுவான காரணங்களாகும்.
அறிகுறிகள்:
a) கீழ் முதுகில் மந்தமான வலி உணர்வு, சில சமயங்களில் குத்தலுடன் கூடிய கடும் வலியும் ஏற்படும். இது முதுகு முதல் கால் வரை பரவக்கூடும். நேராக நிமிர்ந்து நிற்க முடியாமல் வலியை உணரலாம்.
b) தினசரி செயல்பாடுகளை செய்வதில் சிரமம் உண்டாகலாம். தசை பிடிப்பு மற்றும் இறுக்கத்தை உணரலாம். வலி காரணமாக தூக்கம் கெடலாம்.
காரணங்கள்:
a) சில சமயங்களில் சேதமடைந்த வட்டு அருகில் உள்ள நரம்புகளில் அழுத்தி கீழ் முதுகு வலி மற்றும் கூர்மையான பிட்டம் மற்றும் காலின் ஒரு பக்கத்தில் வலியை ஏற்படுத்தும்.
b) தசைகள் பலவீனமடைந்து முதுகுப் பிடிப்பு ஏற்படுவதன் காரணமாகவும் முதுகு வலி ஏற்படலாம்.
c) உடல் பருமன் காரணமாகவும், உடல் உழைப்பின்றி அதிக நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறையாலும் முதுகு வலி ஏற்படும்.
d) பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் அதிகரித்த முதுகு சுமை காரணமாகவோ, மாதவிடாய் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களாலோ முதுகு வலி ஏற்படலாம்.
e) சில சமயங்களில் தொற்று, எலும்பு முறிவு, கடுமையான நரம்பு சுருக்கம் அல்லது புற்றுநோய் போன்ற காரணங்களால் முதுகு வலி ஏற்படலாம்.
f) மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி காரணமாகவும் முதுகு வலி உண்டாகும்.
g) உடற்பயிற்சி இல்லாமை, நீண்ட நேரம் ஒரே பொசிஷனில் உட்கார்ந்து இருப்பது, மோசமான தோரணை, நீண்ட நேர கணினி பயன்பாடு போன்றவை முதுகு வலியை ஏற்படுத்தலாம்.
h) தசை நார்கள் அல்லது தசைநார் நீட்சி, தசைநார் கிழிதல் போன்ற காரணங்களாலும் வலி உண்டாகலாம்.
தீர்வுகள்:
a) பக்கவாட்டில் படுத்துக்கொண்டு இரண்டு கால்களுக்கு இடையில் தலையணை வைத்து உறங்கலாம். கால்களின் முட்டிப் பகுதிக்கு அடியிலும் தலையணை வைத்து தூங்குங்கள்.
b) உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஐடியல் எடையிலிருந்து நான்கைந்து கிலோவுக்குள் மட்டுமே இருக்க பாருங்கள்.
c) டிஸ்க்களில் ரத்தம் பாய்வதை நிகோடின் தடுக்கிறது. இதனால் முதுகில் உள்ள தண்டுவடம் சிதைவுக்குள்ளாகிறது. எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள்.
d) இடுப்பை விட சற்றே தாழ்வான நிலையில் முட்டுகளை வைத்தபடி உட்காருங்கள்.
e) வலி அதிகமாக இருக்கும் பொழுது ஓய்வெடுப்பது நல்லது. வலி ஏற்படும் சமயம் வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.
f) மருத்துவர் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள் செய்து தசைகளை வலுவடையச் செய்யலாம். வலி அதிகமாக இருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம்.
g) எடை அதிகம் உள்ள பொருட்களை ஒழுங்கான முறையில் தூக்குங்கள். இதன் மூலம் முதுகு வலியை வரவிடாமல் செய்யலாம்.
h) மசாஜ் சிகிச்சை முதுகு தசைகளை தளர்த்தவும், பாதிக்கப்பட்ட பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
i) இரண்டு வாரங்களுக்குப் பிறகும் வலி தொடர்ந்து இருந்தால் தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.