
மங்குஸ்தான் பழம் தெரியுமா? வெப்ப மண்டலப் பழமாகிய மங்குஸ்தான், பழங்களின் ராணியென்று அழைக்கப்படுகிறது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. மலைப்பகுதிகளில் அதிகம் விளையக் கூடியது. குளு-குளு குற்றால சீசனுக்கு சென்றிருக்கையில், அங்கே இருந்த கடைகளில் பல்வேறு வகையான பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கடையில் நல்ல கூட்டம். ஒவ்வொரு பழமும், "வாங்கு!- வாங்கு!" என வரவேற்றது. அவைகளில், மங்குஸ்தானும் ஒன்றாகும். மங்குஸ்தான் பற்றி நான் கேட்கையில், அநேக வருடங்களாக, பழ வியாபாரம் செய்து வரும் அநுபவமுள்ள கடைக்காரர் கூறிய விபரங்கள்:
மங்குஸ்தான் பழத்தின் தோற்றம்
அசப்பில், மாதுளம் பழத்தைப் போன்றும், ஊதா நிற தோற்றத்திலும் இருக்கும் மங்குஸ்தான் பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். தோல் பகுதியை பிளந்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு 'சூலம்புளி' என்ற பெயரும் உண்டு.
மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ மற்றும் ஆரோக்கியமான நன்மைகள்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்கள், பல்வலி, தொற்றுநோய் கிருமிகள், மற்றும் பூஞ்சைகளை அழிக்க மக்கள் பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாள்பட்ட புண்கள், காய்ச்சல், ரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றை குணமாக்கவும் மங்குஸ்தானைப் பயன்படுத்தி வந்தனர்.
மங்குஸ்தான் பழம், உடல் உள்ளுருப்புகளின் வீக்கத்தைக் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை கட்டுப்படுத்தவும், பாக்டீரியா வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. நார்ச்சத்து மற்றும் விட்டமின் "சி" நிறைந்தது மங்குஸ்தான் பழம்.
மேலும் சீதபேதி, ரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். செரிமானத்தை சீராக்கும். மங்குஸ்தான் பழம், உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
புற்று நோய் அபாயத்தைக் குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் மங்குஸ்தான் பழம் உதவும். வயிற்று வலியைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது மங்குஸ்தான் பழம். கம்ப்யூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். அவர்களின் கண்களின் எரிச்சலை போக்கும் தன்மையுடையது மங்குஸ்தான் பழம்.
உபரி தகவல்கள்
மங்குஸ்தான் பழம், குற்றாலம் போன்ற நீர் அருவிகள் நிறைந்த இடங்கள், மற்றும் கோடை மலை வாசஸ்தலங்களில் அதிகம் காணப்படுகின்றன. மங்குஸ்தான் பழத்தின் விலை சற்று அதிகமென்றாலும், விற்பனை அமோகம்தான். ஆனி-ஆடி-ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் என்பதால், எங்கு பார்த்தாலும் மங்குஸ்தான் பழம் கிடைக்கும். மங்குஸ்தான் வாங்கி சாப்பிடுங்க! ஆரோக்கியமா இருங்க!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)