கொடுக்காய்ப்புளி என்றதுமே ஒரு சிலருக்கு அவர்களின் பள்ளி பருவங்கள் நினைவிற்கு வந்திருக்கும். பொதுவாக புளி என்றால் புளிப்பாக இருக்கும். ஆனால் கொடுக்காய்ப்புளியின் சுவை லேசான இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடையது.
பழந்தமிழர்களால் பல நோய்களுக்கு மருந்தாக இந்த கொடுக்காய்ப்புளி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில இடங்களை தவிர வேறு எங்கும் இந்த மரங்கள் காணப்படுவதில்லை. நாம் இந்த பதிவில் கொடுக்காய்ப்புளியின் பல்வேறு பயன்களை பற்றி காண்போம்.
கொடுக்காய்ப்புளி:
இது சீனி புளியங்காய், கோண புளியங்காய், கொடுக்காய்ப்புளி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. சங்க இலக்கிய நூலான குறுந்தொகையில் 274 வது பாடலில் ஆசிரியர் உருத்திரனார் கொடுக்காய்ப்புளி பற்றி குறிப்பிட்டுள்ளார். கொடுக்காய்ப்புளி மரம் வெப்ப மண்டல மரமாகும். குறுகிய காலத்தில் சீக்கிரம் வளரக்கூடிய மரமாகும். எல்லா வகையான மண்ணிலும் செழிப்பாக வளரும். பச்சை நிறத்தில் உள்ள காய் பழுத்ததும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிவிடும். உள்ளே சதைப்பகுதி வெள்ளை நிறத்திலும், கருப்பு விதைகளை உடையது.
கொடுக்காய்ப்புளி பயன்கள்:
கொடுக்காய்ப்புளி இலை, காய், பூ உடலில் ஏற்படும் பல வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதன் இலைகள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகிறது.
கொடுக்காய்ப்புளியில் வைட்டமின் B1 (தயாமின்) இருப்பதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. மன அழுத்தத்தினால் உண்டாகும் பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த வைட்டமின் B1 மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் B2 சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது. இதனால் 30 வயதை கடந்தவர்களுக்கு முகத்தில் ஏற்படும் மங்கு பிரச்சனையை குறைப்பதிலும், சருமத்தில் ஏற்படும் பலவகையான பாதிப்புகளுக்கும் கொடுக்காப்புளி சிறந்த தீர்வாக உள்ளது.
மேலும் கொடுக்காப்புளியில் உள்ள வைட்டமின் C முகத்தில் ஏற்படும் முதுமை தோற்றத்தை குறைக்கிறது. கொடுக்காப்புளியை உணவில் சேர்ப்பதன் மூலம் முகப்பொலிவு கிடைக்கும்.
ஆப்பிளுக்கு இணையான பழமாக பார்க்கப்படும் கொடுக்காப்புளியில் வைட்டமின் C அதிகமாக உள்ளதால், ஆன்டி ஆக்ஸிஜென்டாக செயல்படுவதுடன் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதனால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட இந்த கொடுக்காய்ப்புளி உதவுகிறது.
இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவை சேர்க்கிறது. பற்களில் ஏற்படும் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இதனால் பல்வலி, ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவது போன்றவை தடுக்கப்படும்.
வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சர், வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், மலச்சிக்கல், செரிமானம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த காய் சிறந்த தீர்வாக இருக்கிறது. இதில் உள்ள நீர்ச்சத்து இவ்வகையான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கல்லீரல் சிறப்பாக செயல்படுவதற்கு இது உதவி புரிகிறது. இந்த பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் கல்லீரல் பாதிப்படையாமல் தடுக்கிறது.
குறிப்பு: கொடுக்காய்ப்புளியில் ஆக்சலேட் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மேலும் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் கொடுக்காய்ப்புளியை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.