
உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். தற்போது சுமார் 800 மில்லியன் மக்கள் உடல் பருமனுடன் வாழ்கின்றனர். இதனால் பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் ஆயுளையும் கணிசமாக பாதிக்கும்.
உடற்பருமன் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் உடல் நலப் பிரச்சனைகள்:
நீரிழிவு நோய்:
டயாபடீஸ் ஏற்படுவதற்கு உடல் பருமன் மிக முக்கியக் காரணம் ஆகும். வயிற்றுப் பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இன்சுலினின் செயல்பாட்டைப் பாதிக்கும். இதனால் அதிக இன்சுலின் உற்பத்தி செய்யப்படும் போது கணையம் சோர்வடைகிறது. காலப்போக்கில் உயர் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதனால் நீரிழிவு நோய் உண்டாகும்.
இதய நோய் மற்றும் பக்கவாதம்:
உடல் பருமனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவையும் அதிகரிக்கிறது. இவை இரண்டும் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணிகளாகும். இதனால் இதய செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
மூட்டுவலி:
அதிகமான உடல் எடை, கை கால் மூட்டுகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கைகள், முழங்கால்கள், முதுகெலும்பு, இடுப்பு, ஆகிய பகுதிகளில் வலியும், வீக்கமும் ஏற்படும். ஒல்லியாக இருப்பவர்களைவிட அதிக உடல் எடையுடன் இருப்பவர்களுக்குத் தான் மூட்டுவலி ஏற்படுகிறது. விரைவில் மூட்டுத் தேய்மானம் உண்டாகிறது. எடை கூடும்போது முழங்கால் மூட்டுகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி வலியும் அதிகரிக்கிறது.
சுவாசப் பிரச்சனைகள்:
உடல் பருமன் உள்ளவர்கள் தூங்கும் போது குறட்டை விடுவார்கள். தூக்கத்தில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற அபாயங்களும் ஏற்படலாம்.
செரிமானப் பிரச்சனைகள்:
உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதால் பித்தப்பையில் கற்களை உண்டாக்கும். குடல் இயக்கமும் பாதிக்கப்பட்டு செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும்.
சிறுநீரக நோய்கள்:
உடல் பருமன் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் இணைவதால் சிறுநீரக நோய்கள் அதிகரிக்கும். சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கருவுறுதல் பிரச்சினைகள்:
உடல் பருமனாக உள்ள பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சனையை ஏற்படுத்தும். கர்ப்ப ரீதியான சிக்கல்களுக்கும் வழி வகுக்கும்.
புற்றுநோய் அபாயம்:
உடற்பருமன் மார்பகம், பெருங்குடல், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கணையப் புற்று நோய்கள் உட்பட பல புற்றுநோய்களின் அபாயத்தை ஏற்படுத்தும்.
மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உடற்பருமன்:
உடல் பருமன் உடல்ரீதியான பிரச்சினைகளை மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமான உடல் எடை கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது உடல் பருமன் உள்ளவர்கள் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளை அதிகமாக அனுபவிக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. அவர்கள் பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதனால் உடல் பருமன் மூளையின் செயல்பாட்டின் பாதித்து மனச்சோர்வுக்கு வித்திடுகிறது. சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் மூளையின் பயன்பாட்டை எதிர்மறையாக பாதிக்கும்.
உடல் பருமன் உள்ளவர்கள் பொதுவாக தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பர். தங்கள் உடல் தோற்றம் குறித்த அதிருப்தி இருப்பதால் குறைந்த சுயமரியாதையும் மனநல சவால்களையும் கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படுகிறது.
எனவே அனைவரும் தம் உயரத்திற்கேற்ற சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி, சரிவிகித உணவு, நல்ல பழக்க வழக்கங்கள், அமைதியான மனநிலை ஆகியவற்றை கடைபிடித்தால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.