உலகம் முழுவதும் வீட்டுக்குள் வசிக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் இடையிடையேப் பறந்து கொண்டிருக்கும் இந்த வீட்டு ஈ (Housefly) சைக்ளோரர்பாவின் துணை வரிசையைச் சேர்ந்த இருசிறகிப் பூச்சிகளில் ஒன்றாகும்.
சாம்பல் முதல் கருப்பு நிறம் வரை, மார்பில் நான்கு அடர்வண்ண, நீளக் கோடுகளுடன், சற்று மயிரிழைகள் கொண்ட உடலுடன் இருக்கும் வீட்டு ஈக்கள் பொதுவாக 6 முதல் 7 மில்லி மீட்டர் நீளமானதாகவும், 13 முதல் 15 மில்லி மீட்டர் வரை இறக்கையுடன் அகலம் கொண்டதாக இருக்கும். பெண் ஈக்கள் ஆண் ஈக்களை விடப் பெரிய சிறகுகள் கொண்டவை.
ஆண் ஈக்கள் ஒப்பீட்டளவில் நீண்ட கால்கள் கொண்டவை. பெரிதான ஈயின் தலையில் கூட்டுக் கண்கள் அமைந்துள்ளன. இவை தலையின் இரு பகுதிகளிலும் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் 4,000 நுண்கண்கள் இருக்கின்றன. இவை நெருக்கமாக இருக்கின்றன. இவற்றின் உதவியால் பின் பக்கமுள்ளவற்றையும் ஈயால் பார்க்க முடியும். ஈயால் பகலில் பார்க்க முடியுமே தவிர, இரவில் எதையும் பார்க்க இயலாது. இரண்டு கண்களுக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி இருக்கும். இவ்விடைவெளி ஆண் ஈக்குக் குறுகியும் பெண் ஈக்கு அகன்றும் இருக்கும்.
ஈக்கு தாடைகள் ஏதும் இல்லாததால் இவை யாரையும் கடிப்பதில்லை. வீட்டு ஈக்கள், தான் உண்ணக் கருதும் கடினமான பொருட்கள் மீது தன் தட்டையான இரு உதடுகள் மூலம் உமிழ் நீரை உமிழ்கின்றன. உமிழ் நீரில் உண்ணும் பொருட்கள் கரையும் வரை அதைத் தேய்த்து, உமிழ் நீரில் பொருள்கள் நன்கு கரைந்த பின்னர் அதைத் தன் உறிஞ்சியால் உறிஞ்சி தன் தீனிப் பையில் சேமித்துக் கொள்ளும். தான் ஓய்வாக இருக்கும் போது, மாடு அசை போடுவது போல் அப்பையிலுள்ளவற்றை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும். இவ்வாறு உண்ணும் போது அத்திரவ உணவு அங்குமிங்குமாகச் சிதறி விழும். இதனால் ஈ இருக்குமிடம் அசுத்தமாகி விடும்.
இதன் கால்களின் நுனிப் பகுதியில் கொக்கி போன்ற உறுப்புகள் உள்ளன. இக்கால்களிலும் உணர்கொம்புகளிலும் மெல்லிய மயிரிழைகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும், ஈ எங்கு அமர்கிறதோ அவ்விடத்தில் உள்ள அசுத்தங்களில் காணும் நோய்க்கிருமிகள் அம்மயிரிழைகளில் ஒட்டிக் கொள்ளும். அதற்கு அம்மயிரிழைகளில் உள்ள ஒருவித பிசுபிசுப்பும் பெருந்துணை செய்கிறது.
பெண் ஈ வழக்கமாக ஒரு முறை மட்டுமே இணைசேரும் என்றாலும் விந்துக்களை பின்னரும் பயன்படுத்தச் சேமித்துக் கொள்கிறன. இவை உணவுக் கழிவுகள், அழுகியப் பிணம், மலம் போன்ற சிதைந்து போகும் கரிமப் பொருட்களில் சுமார் 100 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த முட்டைகளில் இருந்து கால்கள் இல்லாத வெள்ளை நிறப் புழுக்கள் வெளிவருகின்றன. இரண்டு முதல் ஐந்து நாட்கள் வளர்ச்சிக்குப் பின்னர், இவை உருமாற்றம் அடைந்து, சுமார் 8 மில்லி மீட்டர்கள் நீளமான சிவப்பு - பழுப்பு நிறக் கூட்டுப்புழுக்களாக ஆகின்றன.
வயதுவந்த ஈக்கள் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை வாழ்கின்றன. ஆனால், இவை குளிர்காலத்தில் ஓய்வுறக்கம் கொள்கின்றன. வளர்ந்த ஈக்கள் பலவிதமான திரவ அல்லது கூழ்மப் பொருட்களையோ, இவற்றின் உமிழ்நீரால் கரைக்கப்பட்டத் திடப்பொருட்களையோ உணவாகக் கொள்கின்றன.
இவை தங்கள் உடலிலும், மலத்திலும் நோய்க்கிருமிகளை பரப்பும் வாய்ப்பு உள்ளது. இவை உணவை மாசுபடுத்தக்கூடியனவாகவும், உணவு வழி நோய்த்தொற்றுகளைக் கொண்டு வருவனவாகவும், அதே நேரத்தில், உடல் ரீதியாக எரிச்சலூட்டக்கூடியனவாகவும் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக, இவை தீங்குயிர்களாகக் கருதப்படுகின்றன.
டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, இளம்பிள்ளைவாதம், தொற்றுத் தோல்நோய் , அடைப்பான் நோய், டூலரீமியா நோய், தொழுநோய் மற்றும் காசநோய் உள்ளிட்ட குறைந்தது 65 நோய்களை மனிதர்களுக்குப் பரப்புவதாக வலுவாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஈக்கள் எங்கு ஓய்வெடுக்கிறதோ அங்கெல்லாம் மீண்டும் எழுந்து வெளியேறி, அதன் மூலம் நோய்க்கிருமிகளை இயந்திரத்தனமாகப் பரப்புகின்றன. எனவே, இவைகளை வீட்டுக்குள் கட்டுப்படுத்துவது அவசியமானது.
உணவு ஆதாரங்கள் குறைவாக இருந்தால் ஈக்கள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்ய முடியாது. உரம், குப்பை, புல் வெட்டுக்கள், களைக் குவியல்கள் அல்லது பிற அழுகும் கரிமப் பொருட்கள் போன்ற பொருட்களைக் குவிக்க அனுமதிக்காதீர்கள்.