
புகைப்பிடித்தல் என்பது உடலுக்குத் தீங்கான, ஆபத்து விளைவிக்கும் ஒரு பழக்கம் என்று தெரிந்திருந்தும் பலரும் மன அழுத்தத்தைக் கையாள புகைக்கு அடிமையாகிறார்கள். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களில் ஒரு சிலரே வெற்றி அடைகிறார்கள். புகைப்பிடிப்பதை திடீரெனக் கைவிடுவதால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும் அதே சமயத்தில் சில தீங்குகளும் ஏற்படும். அவற்றை எப்படி எதிர் கொள்ளலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
1. புகைப்பிடிப்பதை நிறுத்திய இருபதே நிமிடங்களில் உயர் ரத்த அழுத்த அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும்.
2. எட்டே மணி நேரத்தில் ரத்த ஓட்டத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு படிப்படியாக குறைந்து ஆக்ஸிஜன் அளவை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்.
3. புகைப்பிடிப்பதால் உடலில் நிகோடின் பரவி இருக்கும். அதை நிறுத்திய இரண்டு நாட்களில் நிக்கோடின் உடலை விட்டு வெளியேறிவிடும். இதனால் சுவை மற்றும் வாசனை உணர்வு முன்பு போலவே இயல்பாக இருக்கும்.
4. நான்கு நாட்களிலேயே மூச்சுக் குழாய்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றம் தெரியும். அவற்றிற்கு நல்ல ஓய்வு கிடைத்து ஆற்றலுடன் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
5. இரண்டு வாரங்களில் உடலில் ரத்த ஓட்டம் மேம்படும். மேலும் அடுத்த பத்து வாரங்களுக்கு ரத்த ஓட்டம் சிறப்பான முறையில் செயல்படும்.
6. புகைப்பிடித்தலை நிறுத்தி ஒன்பது மாதங்களில் அனைத்து சுவாசக் கோளாறுகளும் விலகிவிடும். நுரையீரலின் செயல் திறன் கிட்டத்தட்ட பத்து சதவீதம் அதிகரிக்கும்.
7. ஐந்து ஆண்டுகளில், புகைப்பிடிக்காத ஒருவரின் இதயம் மற்றும் நுரையீரலைப் போலவே ஆரோக்கியமாக செயல்படும். மேலும் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயங்கள் குறைந்து விடும்.
புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் உடலில் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகள்:
திடீரென புகைப்பிடிப்பதை நிறுத்தும்போது உடல் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிகள் எடுப்பதால் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அந்த அறிகுறிகள் விரைவிலேயே மறைந்துவிடும்.
1. செரிமான மாற்றங்கள்
புகைப்பதை உடனே திடீரென நிறுத்தும் போது உடனடி விளைவுகளாக அஜீரணம் நெஞ்செரிச்சல் ஏற்படும். அத்துடன் வாயுத்தொல்லை, லேசான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் குமட்டல் ஆகியவையும் ஏற்படலாம்.
2. சுவாச மாற்றங்கள்
புகைப்பிடிக்கும் பழக்கத்தால் மாசுபட்டிருந்த சுவாச அமைப்பு புகைப்பதை நிறுத்தும்போது தன்னை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடும். நுரையீரல் சளி மற்றும் நச்சுக்களை வெளியேற்றத் தொடங்கும் போது இருமல், சளி, தொண்டை கரகரப்பு மற்றும் பேசும்போது குரலில் மாற்றங்கள் ஏற்படும். தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, வாய்ப்புண்கள் கூட வரலாம்.
3. ரத்த ஓட்டத்தில் மாற்றங்கள்
தற்போது ரத்த ஓட்டம் சமநிலையாக நடைபெறுவதால் தலைசுற்றல், தசை இறுக்கம், உடலில் நீர் தேங்குதல் மற்றும் விரல்களில் கூச்ச உணர்வு ஆகிய பக்க விளைவுகள் தோன்றலாம்.
4. உளவியல் மற்றும் மனநிலை மாற்றங்கள்
திடீரென புகைப்பதை நிறுத்தும் போது எரிச்சல், மனச்சோர்வு, பதட்டம், அமைதியின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.
5. மாற்றங்களை எதிர்கொள்ளும் விதங்கள்
புகைப்பிடிப்பதை நிறுத்தும்போது உடலுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டாலும் அவை தற்காலிகமானவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிறையத் தண்ணீர் குடித்து சமச்சீரான உணவை உட்கொள்ளும் போது மலச்சிக்கல் போன்றவற்றை நிர்வகிக்க உதவும்.
புகைப்பதை நிறுத்துவது உயிரைக் காப்பாற்றும் ஒரு அற்புதமான வழி. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் தங்களது முடிவில் உறுதியாக இருந்து புகைப்பிடிக்காத வாழ்க்கையை ஒருவர் தொடர வேண்டும்.
புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றும் போது நடைப் பயிற்சியில் ஈடுபடலாம். நண்பர்களை அழைத்து பேசலாம். பிடித்த இசையை கேட்கலாம் அல்லது தியானம் யோகா போன்றவற்றை செய்யலாம்.
தமிழாக்கம்: எஸ். விஜயலட்சுமி