
உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செரிமான மண்டலத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களை தவறாக தாக்குவதால் குடல் அழற்சி நோய் (IBD) ஏற்படுகிறது. பொதுவாக இந்த நோய் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை தாக்கினாலும், பதினைந்து முதல் 30 வயது உட்பட்டவர்களை அதிகம் தாக்குகிறது. அதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குடல் அழற்சி நோய் ஏற்படுவதன் காரணங்கள்:
நோய் எதிர்ப்பு அமைப்பின் தவறான தாக்குதல்:
மனிதர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்றவற்றுக்கு எதிராக செயல்பட்டு மனிதர்களில் உடலைக் காக்கிறது. ஆனால் அதற்குப் பதிலாக செரிமான மண்டலத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களை நோய் எதிர்ப்பு அமைப்பு தவறாக தாக்குவதால் குடல் அழற்சி ஏற்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
மரபியல்:
இந்த நோய்க்கு மரபியல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெற்றோர் உடன் பிறந்தவர்கள் அல்லது முன்னோர் போன்றவர்களுக்கு இந்த நோய் இருந்தால் குடும்பத்தில் பிறந்த மற்றவர்களையும் பாதிக்கலாம்.
புகைப்பிடித்தல்:
புகைப்பிடித்தல் குடல் அழற்சி நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. சொல்லப்போனால் நோயை இன்னும் மோசமாக்குகிறது.
உணவு முறைகள்:
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள், நிறைய நார்ச்சத்து கொண்ட உணவுகள், கிரீஸ் வகை உணவுகள் இந்த நோயின் ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.
பானங்கள்:
மதுபானங்கள், காஃபின் கலந்த பானங்கள், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் செயற்கை குளிர் பானங்கள் பாலில் தயாரிக்கப்பட்ட பானங்கள் போன்றவை.
மருந்துகள்:
ஸ்டிராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், வாய்வழி கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்புக்கான சில மருந்துகள் இந்த நோயை ஏற்படுத்தலாம்.
குடல் நுண்ணுயிரிகள்:
நமது குடலில் வாழும் ட்ரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்கள் இதற்கு காரணமாக அமைகின்றன. உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு இந்த சில வகையான குடல் பாக்டீரியாக்களுக்கு எதிர்வினை ஆற்றுவதால் இந்த நோய் உண்டாகிறது.
தொழில்மயமாக்கல்:
தொழில்மயமாக்கல் அதிகம் உள்ள நாடுகளில் இந்த நோய் அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. வேகமான வாழ்க்கை முறை மன அழுத்தம் தரும் பணி மற்றும் வாழ்வியல் முறைகள் இதற்கு காரணமாக அமைகின்றன.
அறிகுறிகள்:
கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்றில் தொடும்போது அதிகமான வலி, ஆசனவாயில் வலி, ரத்த சோகை, இரத்தக் கட்டிகள், கண்களில் வலி மற்றும் எரிச்சல், சிறுநீரகக் கற்கள், வாய்ப்புண்கள், கல்லீரல் நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, வீங்கிய மூட்டுகள், சருமத்தில் ஏற்படும் புண்கள் மற்றும் தடிப்புகள், பலவீனமான எலும்புகள் முக்கியமாக ஆஸ்டியோபோரோசிஸ். தசைப்பிடிப்பு, குடலில் ஏற்படும் வீக்கம், மலக்குடல் இரத்தப்போக்கு, எடை இழப்பு, ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சாதது, சோர்வு, பசியின்மை.
எதிர்கொள்வது எப்படி?
இது வாழ்நாள் முழுவதும் நிர்வகிக்கப்பட வேண்டிய ஒரு நோயாகும். இது பெருங்குடல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ண வேண்டும். குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகள் நல்லது. இவை பெரும்பாலும் ஜீரணிக்க எளிதாக இருக்கும்.
உணவு மேலாண்மையைக் கடைபிடிக்க வேண்டும். சிறிய அளவில் அடிக்கடி உணவுகளை உண்ணுதல் செரிமான அமைப்புக்கு எளிதாக இருக்கும். ஏராளமான திரவங்களை, குறிப்பாக அதிக தண்ணீரைக் குடிக்கவும். மது மற்றும் காஃபின் அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும்.
பால் பொருட்களை கட்டுப்படுத்துதல் வேண்டும். IBD உள்ள பலர் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்கள். கொழுப்பு நிறைந்த உணவுகள் வயிற்றுப்போக்கை மோசமாக்கும்.
மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அழற்சி எதிர்ப்பு மருந்துகள் குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான எதிர்வினையை அடக்குகின்றன.
வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் உறிஞ்சுதல் குறைபாடு அல்லது உணவு கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்.
மன அழுத்தம் பெரும்பாலும் IBD அறிகுறிகளை மோசமாக்கலாம். லேசான உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம், தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் தசைப் பதற்றம் மற்றும் இதய துடிப்பு போன்ற உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த உதவும். போதுமான தூக்கம், பொழுதுபோக்குகள் மற்றும் மகிழ்ச்சிகரமான செயல்பாடுகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.