
இளம் வயதிலேயே ரத்தத்தில் அதிகளவு கொலஸ்டிரால் சேர்ந்து விடுகிறது. இந்த நேரத்தில் நாம் எந்த வயது முதல் இதனை சரியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், மருத்துவரை எப்போது அணுக வேண்டும் என்றும் தெரிந்து கொள்வது நல்லதாகும்.
நம்முடைய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவு என்பது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். இது குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்காமல் இருப்பது அவசியமாகும். இப்போதைய உணவு பழக்கவழக்கங்களின் காரணமாக இளம் வயதிலேயே ரத்தத்தில் அதிகளவு கொலஸ்டிரால் சேர்ந்து விடுகிறது. இந்த நேரத்தில் நாம் எந்த வயது முதல் இதனை சரியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், மருத்துவரை எப்போது அணுக வேண்டும் என்றும் தெரிந்து கொள்வது நல்லதாகும்.
கொலஸ்டிரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருளாகும். இது உடலில் பல விதமான இயக்கங்களுக்கு பயன்படும் வகையில் ரத்தத்தில் காணப்படுகிறது. ஆனால், கொலஸ்டிரால் அதிகளவில் ரத்தத்தில் இருப்பது ஆபத்தாகும். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, அதன் செயல்பாட்டையே தடுக்கும் அபாயம் உண்டு என்பதை பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.
எப்போதும் உடலில் உள்ள அதிகளவு கொலஸ்டிராலின் நிலை ஆரம்ப கட்டத்தில் தெரியவராது. அது தீவிரம் அடையும்போது தான் சில காரணிகள் மூலம் நமக்கு உணர்த்தும். எனவே, எப்போதும் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவை கண்காணித்து வருவது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூத்த இதய நோய் மருத்துவர் பிரவீன் குல்கர்னி, ஒருவர் தனது 20 வயது முதல் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவை தொடர்ந்துத் கண்காணிக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள ஹார்ட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. குழந்தைகளைப் பொருத்தவரை 9 வயது முதல் கொலஸ்ட்ரால் சேதனை முதலில் செய்து பார்க்கலாம். அதனைத் தொடர்ந்து 17 வயது முதல் 20 வயது வரை ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவை சோதனை செய்து பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
ஏனென்றால், அதிக கொலஸ்டிராலுக்கு வெளிக்காட்டும் குணம் மிகக்குறைவு என்பதால், அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக 19 வயது நிரம்பியவருக்கு, 170 மில்லிகிராம் / டெசிலிட்டர் என்ற அளவில் மொத்த கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும். மேலும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவு 200க்கும் குறைவாக இருப்பது நல்லது. இது 200 முதல் 239 வரையிலும் இருக்கலாம். ஆனால், அது அளவின் உச்ச எல்லையின் அருகில் இருக்கும் என்பதால், 200க்கும் கீழ் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.
பெரும்பாலும், குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் ரத்தத்தில் அதிகளவு கொழுப்பு இருந்தால், உங்களுக்கும் கொலஸ்டிரால் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அப்படி ஒரு சூழல் இருந்தால், உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு, அளவில் மாற்றங்கள் இருந்தால், மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், குடும்பத்தில் யாருக்கேனும் நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தாலும், உங்களை பரிசோதனை செய்து கொள்வது நல்லதாகும். வரும் முன் காப்போம் என்பதுபோல, நோய் வரும் முன் அதில் இருந்து தப்பித்துக்கொள்ள இது உதவும்.