ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தேசிய மலருக்கு ஆனி மாதம் சீசன் காலம்!

Lotus
Lotus
Published on

இந்தியாவின் தேசிய மலரான தாமரை, "கமல்" அல்லது "பத்மினி" என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான மலர் மற்றும் தெய்வீக அழகு மற்றும் தூய்மையின் சின்னமாகும். காய்கறிகள், பழங்களுக்கு சீசன் இருப்பது போல் பூக்களில் தாமரைப்பூக்கு ஆனி மாதம் தான் சீசன். தாமரை, இரட்டை விதையிலை கொண்ட நீர்வாழ் பல்லாண்டு தாவரம். ஓடுகின்ற நீரில் தாமரை மலர் வளர்வதில்லை . இதன் அறிவியல் பெயர் "நெலும்போ நூசிபேராவேர்". மருத நிலத்திற்கு உரிய பூ தாமரை.

தாமரை மலர்களில், வைட்டமின் பி, சி, புரோடீன், இரும்புசத்துகள் காணப்படுகின்றன. அதிலும் தாமிர சத்து அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது. செந்தாமரை மூல உஷ்ணத்திற்கு பெரிதும் பயன்படக்கூடியது. கல்தாமரையின் இலையை காயவைத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை என நீரில் ஒரு சிட்டிகை அளவு கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கும், மூளை பலம் பெறுவதற்கும் உதவும்.

இலைகள், விதைகள், பூக்கள், பழம் மற்றும் வேர்த்தண்டுக்கிழங்குகள் போன்ற தாமரையின் அனைத்து பகுதிகளும் உண்ணக்கூடியவை மற்றும் மருத்துவ நன்மைகள் கொண்டவை. நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் வாழ்நாளையும் நீட்டிக்கும் என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

தாமரை மலர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சீனர்கள் தாமரை மலர்களை உணவாக விரும்பி உண்கின்றனர். அதேநேரம் தாமரையின் விதைகளிலும் பல மருத்துவ நன்மைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. வெண் தாமரை பூவுக்கு மூளையை மேம்படுத்தும் திறன், இதய நோய்களை குணப்படுத்தும் ஆற்றல், கண்களை கூர்மையாக வைக்கும் திறனும் உள்ளது என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தியானமும், உள் ஒளி பிரபஞ்ச தியானமும்!
Lotus

தாமரை இதழ்கள், சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின்னர் இதை வடிகட்டி அப்படியே குடிக்கலாம். இந்த தாமரை இதழ் டீயை தினமும் இரவு ஒரு டம்ளர் குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். மேலும் இதயம் வலிமை பெறும்.

தாமரை, பல வீடுகளில் உட்கொள்ளப்படும் ஒரு உண்ணக்கூடிய மலர். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இதயம் மற்றும் கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது. பாரம்பரிய இந்திய மருத்துவம் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க தாமரை பயன்படுத்தப்படுகிறது. இது காய்ச்சல், சளி மற்றும் இருமல் மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றிற்கும் உதவும்.

பாரம்பரிய மருத்துவத்தில் உலர்ந்த தாமரை மலர்கள் இரத்த போக்கு கோளாறுகளை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மாதவிடாயின் போது அதிகப்படியான இரத்த இழப்பைக் கட்டுப்படுத்துகின்றன. வயிற்றுப்போக்கை நிர்வகிக்கவும் இது உதவுகிறது.

தாமரை விதைகளில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற உயிரியல் கலவைகள் உள்ளடங்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக புரதம், நார்ச்சத்து, நன்மை பயக்கும் ஆக்சிஜனேற்றங்கள், விட்டமின் பி, இ, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. இவை நம் உடல் செயல்பாடுகளை சிறப்பாகப் பராமரிக்க பெரிதளவில் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
விமானப் பயணம் பாதுகாப்பாய் இருக்க சில முக்கிய குறிப்புகள்!
Lotus

தாமரை விதைகளில் விரைவாக வயதாவதைத் தடுக்கும் கெம்பெரோல் மற்றும் குவார்சிட்டின்( Kaempferol & Quercetin) கலவைகள் உள்ளன. இது செல்கள் மற்றும் திசுக்களின் சேதத்தைக் குறைக்கிறது. இதன் மூலமாக தாமரை விதைகள் தோல் பராமரிப்பில் பங்காற்றி விரைவான முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, சருமத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதில் காணப்படும் அதிக அளவான பொட்டாசியம் தாது, ரத்த அழுத்த அளவை சீராக்கி இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்த விதைகளில் உள்ள ஆக்சிஜனேற்றம், ஃபிளாவனாய்டுகள் போன்றவை உடலில் அழுத்தத்தைக் குறைத்து, இதய பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

தாமரை பூவை எந்த சூழ்நிலையிலும் 30-35 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் வைத்திருப்பது அதன் தண்டு கொடி தான். தாமரைப்பூவை சுற்றி ஜீரோ டிகிரி வெப்பம் இருந்தாலும் சரி பூவின் வெப்ப நிலை மாறாது. 66 வகை பழங்கள் மற்றும் காய்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் முதுமை அடைவதைத் தடுக்கும் ஆற்றல் தாமரை தண்டில் அதிகம் என்று மதிப்பிட்டுள்ளனர். தாமரைத் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப் பொருட்களும் உள்ளன. நீருக்கடியில் வளர்வதால் இது குளிர்ச்சியானது.

தாமரையின் எந்தப் பகுதியையும் - இதழ்கள், பூக்கள், விதை போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com