கடுக்காய் சித்த வைத்தியத்தில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நம் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தரக்கூடிய ஒரு பொருள் என்றால் அது கடுக்காய்தான். உடலுக்கு உறுதி மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் தருவது கடுக்காய். உடலுக்கு கடுக்காய் தரும் மருத்துவப் பயன்கள் குறித்து பார்ப்போம்.
பக்கவிளைவுகளை குறைக்க: கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்திற்கு பெயர் திரிபலா. இந்த மருந்தை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக, ஆங்கில மருந்துக்கள் நிறைய உட்கொண்டதால் ஏற்படும், பக்க விளைவுகளைக் குறைக்க இது உதவுகிறது.
உடல் வலிமை பெற: நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொண்டு அதிலிருந்து இரண்டு கிராம் அளவு காலை, இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.
பல் நோய்கள் தீர: கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து வைத்துக்கொண்டு அதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
மூல எரிச்சல் தீர: கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர, மூல எரிச்சல் மற்றும் புண் ஆகியவை ஆறும்.
ஜீரண சக்தி அதிகரிக்க: மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
இருமல் குணமாக: கடுக்காய்த் தோல், திப்பிலி சம எடை எடுத்து இடித்து தூள் செய்து 2 கிராம் தூளை தேனில் சேர்த்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வர, இருமல் குணமாகும்.
வாதம், பித்தம்: கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாத வலி, பித்த நோய்கள் குணமாகும்.
தலைவலி: வேப்பம்பட்டை, கடுக்காய் (கொட்டை நீக்கியது), கோரைக்கிழங்கு, நிலவேம்பு சம எடை எடுத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு 400 மி.லி. நீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்கு காய்ச்சி ஒரு நாளைக்கு 3 வேளை வீதம் தேன் கலந்து சாப்பிட தலைவலி குணமாகும்.
உடல் எடையைக் குறைக்க: கடுக்காய்த் தோல், தான்றித்தோல், நெல்லி வற்றல் சம எடை எடுத்து சுத்தம் செய்து இடித்து வஸ்திரகாயஞ் செய்து அதில் அரை தேக்கரண்டி அளவு கொள்ளுக் குடிநீருடன் காலை, மாலை என இருவேளை சாப்பிட உடல் எடை குறையும்.
கரப்பான் நோய்க்கு (எக்ஸிமா): கடுக்காய்த் தோலை சூரணித்து அரை தேக்கரண்டி காலை, மாலை பாலுடன் உட்கொண்டு அச்சூரணத்தையே வெந்நீரில் கலந்து உடலில் பூசி ஸ்நானம் செய்து வந்தால் எக்ஸிமா குணமாகும். வாரம் ஒரு முறையாவது கடுக்காய் சாப்பிடுவோம், ஆரோக்கியம் நிலைக்க வாழ்வோம்.