ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 21ம் தேதியை சர்வதேச தியான தினமாக அறிவித்துள்ளது. இது தியானத்தின் மூலம் மனம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக அனுசரிக்கப்படும் வருடாந்திர நிகழ்வாக இருக்கும்.
தியானப் பயிற்சியானது மக்கள் தங்கள் உள்நிலைகளுடன் இணைவதற்கும், உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், அதிக விழிப்புணர்வை வளர்க்கவும் உதவுகிறது. இது ஒரு எளிய, ஆனால் சக்தி வாய்ந்த கருவியாகும். இது தனிப்பட்ட மற்றும் கூட்டு ஆரோக்கியத்திற்கு ஆழமான நன்மைகளை வழங்குகிறது. 2024 ஆண்டிற்கான ‘தீம்‘ ‘உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தியானம்’ என்பதாகும்.
தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்வதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்:
உணர்ச்சி நல்வாழ்வு: ஒரு விரிப்பில் அமர்ந்து கண்களை மூடி 20 நிமிடங்கள் தியானம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். தினந்தோறும் இந்த தியானப் பயிற்சி செய்வதன் மூலம் மனதிற்கும் உடலுக்கும் அமைதி கிட்டும். தியானத்தின் முதல் பயனாக மன அழுத்தம் குறையும். பதற்றத்தை ஏற்படுத்தும் கார்டிசோலின் அளவை குறைக்க தியானம் உதவுகிறது. மனதை அமைதிப்படுத்தி பதற்றத்தை குறைக்க வழி வகுக்கிறது. மனச்சோர்வு மற்றும் கவலையின் அறிகுறிகளை குறைக்கும். மேம்பட்ட மனநிலை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு வழி செய்யும்.
கவனம் மற்றும் செறிவு: தினந்தோறும் தியானம் செய்யும்போது அது கவனத்தை அதிகரிக்கும். அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும். பணிகளில் கவனம் செலுத்துவது எளிமையாகும்.
சுய விழிப்புணர்வு மேம்படுதல்: தினசரி தியானம் செய்வது ஒருவர் தன்னை பற்றிய சிறந்த புரிதலை வளர்க்கிறது. தனி நபர்கள் தங்கள் சிந்தனை முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களை அடையாளம் காண உதவுகிறது. சுய விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது வாழ்வு வளம் பெற உதவுகிறது.
படைப்பாற்றலை அதிகரிக்கிறது: தெளிவான மனம் படைப்பாற்றல் மற்றும் புதிய யோசனைகளை அதிகரிக்க வழி செய்கிறது. தற்போதைய தருண விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் திருப்தியாக மாறுகிறது. தேவையில்லாத சிந்தனைகளைக் குறைக்கிறது. இதனால் கலைஞர்களுக்கு தங்களது படைப்பாற்றலை அதிகரித்துக் கொண்டு சிறப்பான படைப்புகளை வழங்க முடிகிறது.
தூக்க மேம்பாடு: தூக்கத்தின் தரம் அதிகரிக்கும். வழக்கமாக தியானம் செய்யும்போது அது மனதை அமைதிப்படுத்தி இரவில் தூங்கும்போது நிம்மதியான உறக்கம் மற்றும் ஆழமான உறக்கத்திற்கு வழி வகுக்கிறது.
மன உறுதி: வழக்கமான பயிற்சி மன உறுதியை உருவாக்குகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள் மற்றும் பின்னடைவுகளை சிறப்பாக சமாளிக்க உதவுகிறது. அவற்றை சந்திக்க அச்சமோ, தயக்கமோ இல்லாமல் சிக்கல்களை எளிதாக எதிர்கொள்ள தியானம் உதவுகிறது.
உடல் ஆரோக்கியம்: தினமும் செய்யும் சீரான தியானப் பயிற்சி ஒருவரது உடல்நிலையை மிகவும் ஆரோக்கியமாக வைக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம் மேம்பட்ட நோய் எதிர்ப்புச் செயல்பாடு மற்றும் சிறந்த இருதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. மேலும், தியானம் நேர்மறையான மனநிலையை ஊக்குவிப்பதால் ஒருவர் தன்னுடைய குடும்பத்திலும் பணியிடத்திலும் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு ஆக்கபூர்வமான சிந்தனைகளில் கவனம் செலுத்த உதவுகிறது. சில ஆய்வுகள் தியானம், உடல் வலி மற்றும் அசௌகரிய உணர்வைக் குறைக்கும் என்று கூறுகின்றன. மேம்பட்ட கவனம் நினைவகத்தை சிறப்பாக்குகிறது. சீரான இரத்த ஓட்டத்தைத் தருகிறது.
உறவு மேலாண்மை: தியானம் செய்யும் நபர்கள் நிதானம் மற்றும் பொறுமையை கடைப்பிடிப்பார்கள். பக்குவமான மனநிலை பிறர் மீது அனுதாபம் கொள்ளவும், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை போன்ற நேர்மறை குணங்களால் நல்ல உறவு மேலாண்மையை கடைப்பிடிப்பார்கள். இத்தனை நன்மைகளைத் தரும் தியானத்தை தினமும் 20 நிமிடங்கள் நாமும் செய்து பலன் பெறுவோம்.