தலையெழுத்தை மாற்றும் பெரியோர்கள் ஆசிர்வாதம்!

Blessings from elders
Blessings from elders
Published on

முற்காலத்தில் வயதில் பெரியவர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்கள் காலில் விழுந்து வணங்குவது மரபாகக் கடைபிடிக்கப்பட்டது. தற்போது அது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. பெரியவர்களின் ஆசிர்வாதம் வாங்குவதற்கான காரணம் புராணங்களிலேயே விளக்கப்பட்டுள்ளது.

அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்களின் பூதவுடல் நம் கண்ணில் படவில்லை என்றாலும், இன்னும் இந்த பூமியில் உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த சிரஞ்சீவிகளில் ஒருவர் மார்கண்டேயர். பதினாறு வயதில் மரணம் என்ற வரத்தை வாங்கி வந்த இவரைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமானே காலனை காலால் உதைத்து மார்கண்டேயனைக் காத்தருளியது அநேகருக்குத் தெரிந்திருக்கும். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று?

மார்கண்டேயனுக்கு 16 வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும், அவனுக்கு அல்பாயுசுதான் என்றும் அவன் தந்தையான மிருகண்டமுனிவருக்குத் தெரியும். ஆகையால், மகனைக் காக்க விரும்பிய தந்தை, மகனுக்கு உபநயனம் செய்வித்தபோது, “பெரியோர்கள் எவரானாலும் அவர்களைக் கண்டவுடன் தயங்காது காலில் விழுந்து ஆசிகளை பெற்றுக்கொள்” என்று சொல்லியிருந்தார். மார்கண்டேயனும் அதைக் கடைபிடித்து வந்தான்.

ஒரு சமயம் அத்ரி, வசிஷ்டர், கவுதமர், காஷ்யபர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய சப்த ரிஷிகள் மிருகண்டு முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். அவர்களின் பாதங்களில் மார்கண்டேயன் பணிந்தான். அப்போது அவர்கள், ‘தீர்க்காயுஷ்மான் பவ’ (தீர்க்காயுளுடன் வாழ்க) என்று வாழ்த்தினார்கள்.

இதையும் படியுங்கள்:
பிரபஞ்சத்தை வெல்லும் சக்தி தரும் மௌன விரதம்!
Blessings from elders

பிறகுதான் அவர்களுக்குப் புரிந்தது. அவனுக்கு 16வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. ஆனால், அனுதினமும் சத்தியத்தையே பேசும் சப்த ரிஷிகளின் வாக்கு பொய்க்காது அல்லவா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் சொல்வதற்காக செல்கிறார்கள். மார்கண்டேயனும் அவர்களுடன் சென்றான். சத்தியலோகம் சென்றவன், பிரம்மாவின் காலிலும் விழுந்து ஆசி பெற்றான். விதியை எழுதிய அவரும், அவனை ‘தீர்க்காயுஷ்மான் பவ’ என்று வாழ்த்தி விட்டார்.

இப்படிப் பல பெரியவர்கள் அவனுக்கு ஆசி வழங்க, அவை அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது. பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமை அல்லவா? ஆகவே, சிவபெருமானே தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாது, அவன் என்றும் 16 வயது சிரஞ்சீவியாகவே வாழ வரம் தருகிறார்.

இதையும் படியுங்கள்:
நட்பின் ஆழத்தை அதிகரிக்க கடைப்பிடிக்க வேண்டிய 7 உத்திகள்!
Blessings from elders

பெரியோர்கள் காலில் விழுந்து வணங்குவது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களைக் கண்டால் தவறாது காலில் விழுந்து வணங்குவார். எனவே, வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களைக் கண்டால் அவர்கள் பாதம் பணிந்து வணங்கி அவர்களது ஆசியைப் பெற வேண்டும். அது உங்களைக் காக்கும் அரண் மட்டுமல்ல, உங்களது தலையெழுத்தையே மாற்றிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com