
ஆண்கள் பொதுவாக முப்பது வயதைத் தாண்டும் போதே அவர்களின் வயிறு மேடுபோல் உப்பி தொப்பை உருவாவதற்கான அறிகுறியைக் காட்ட ஆரம்பித்து விடும். இதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.அரிசியும் சப்பாத்தியும் அவர்களின் பிளேட்டை ஆக்ர மிக்கும்போது அதிலுள்ள அதிகளவு கார்போஹைட்ரேட்கள் சர்க்கரையின் அளவை உடலில் அதிகரிக்கச் செய்கின்றன. தேவைக்கு அதிகமான குளுகோஸ் கொழுப்பாக மாறி வயிற்றை சுற்றியுள்ள பகுதியில் சேமித்து வைக்கப்படுகின்றன.
2.குறைந்த அளவு இறைச்சி மற்றும் ப்ரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்வது வயிற்றுப் பகுதி தசைகளின் வளர்ச்சியில் குறைபாடுகளை உண்டு பண்ணுகின்றன. அந்த வெற்றிடத்தை கொழுப்புகள் நிரப்பிக் கொள்கின்றன.
3. தற்கால உணவு முறையில் சர்க்கரையும் எண்ணெயும் அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களே அதிக இடம் பிடிக்கின்றன. இவை குடல் இயக்கங்களில் கோளாறை உண்டு பண்ணி வீக்கங்கள் உண்டாக வழி வகுக்கின்றன. இதனால் தீமை தரும் பாக்ட்டீரியாக்கள் வளர்ச்சியடைந்து வயிற்றில் தொப்பை உருவாக காரணமாகின்றன.
4. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் மற்றும் டெஸ்ட்டோஸ்டெரோன் ஹார்மோன் உற்பத்தி அளவில் குறையும்போது கொழுப்புகள் வயிற்றுப் பக்கம் சேர்ந்து தொப்பையை உருவாக்குகின்றன..
5.அபாயகரமான முறையில் வயிற்றின் உள் பகுதிகளில் கொழுப்பு சேர்வது பரம்பரையாக நடக்கக் கூடிய ஒரு நிகழ்வாகவும் இருக்கலாம். தொப்பை உருவாக இதுவும் ஒரு காரணியாகலாம்.
6.காரில் அமர்ந்து அலுவலகம் செல்லுதல், அங்கு அலுவலக நாற்காலியில் அமர்ந்து கணினி திரையை பார்த்தபடி வேலையில் ஈடுபடுவது என உடல் அசைவு ஏதுமின்றி நாளை கழிக்கும்போது எரிக்கப்படாத கலோரிகள் வயிற்றை சுற்றி தங்கி விடுகின்றன.
7.தினசரி ஸ்ட்ரெஸ் காரணமாக கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். உடலானது அதிகப்படியான ஹார்மோனை வயிற்றை சுற்றியுள்ள பகுதியில் கொழுப்பாக சேமித்து வைத்துவிடும்.
8.குடல் பகுதியில் வீக்கம், கெட்ட பாக்ட்டீரியாக்களின் ஆக்கிரமிப்பு, வயிற்றில் உணவுகள் நொதித்து விடுதல் போன்ற காரணங்களாலும் வயிறு நிரந்தரமாக உப்பி தொப்பையாகிவிடும். ஆரோக்கியமற்ற குடல் பகுதி மெட்டபாலிஸத்தையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.
9.வயிற்றை சுற்றியுள்ள பகுதியில் கொழுப்பு சேர்வதென்பது ஒரு மேம்போக்கான விஷயம் அல்ல. அது உள்ளுறுப்புகளையும் பாதித்து நாளடைவில் பல வகையான நோய்கள் உற்பத்தியாகும் அபாயத்தையும் உண்டுபண்ணும்.
எனவே, இள வயது முதலே ஆரோக்கியமான உணவியல் முறைகளைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோம்.