தற்காலங்களில் சிறுகுழந்தை முதல் முதியோர் வரை அனைவருமே ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். உடல் நோய்க்கு உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நாம், மனநோய்க்கு எந்த சிகிச்சையையும் எடுத்துக் கொள்வதில்லை. தயக்கம் காட்டுகிறோம்.
மன அழுத்தம் நமது உடலையும் மனதையும் எச்சரிக்கும் ஒரு தூண்டுதலாகும். நாம் வெளிப்புற அழுத்தங்களுக்கு அதிக இடமளிக்கும்போது, நமக்கு இயல்பான வாழ்க்கை சாத்தியப்படாமல் போகிறது. இப்போக்கு இன்றைய இளைஞர்களிடையேயும் தற்போது அதிகரித்து வருவது வேதனைக்குரியது.
ஒரு குறிப்பிட்ட அளவிலான மன அழுத்தம் நம்மை ஊக்கத்துடன் செயலாற்றுவதற்கு உதவுகிறது. நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றைப் பற்றி தீவிரமான கவலைகளை நாம் வளர்த்துக் கொள்ளும் போது, நமக்கு மன அழுத்தமும், அதைத் தொடர்ந்து மன உளைச்சலும் ஏற்படுகின்றன.
மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடும். தனி மனிதன் வாழ்வில் வறுமை, குடும்ப உறவுகளிடையே ஏற்படும் சரியான புரிதலின்மை, பணியிடத்தில் அதிக பணிச் சுமை, உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், முதுமையில் வாழ்க்கைத் துணையை இழந்து தனிமையில் தவித்தல், நிதிநிலை தொடர்பானக் கவலைகள், உடலியல் தொல்லைகள், குடும்பத்தில் நடைபெறும் வன்முறைகள் போன்றவை ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படக் கூறப்படும் பொதுவான காரணங்களாகும்.
ஒரு நபரின் மன அழுத்தம், அவரின் வயதுக்கேற்பவும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனுக்கேற்பவும் மாறுபடலாம். நமக்கு மன அழுத்தம் ஏற்பட காரணம் எதுவாகினும், நம் உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளைத்தான் வெளிப்படுத்துகிறது. படபடப்பும், இதயத் துடிப்பும் அதிகரித்தல், மூச்சு வாங்குதல், நடுக்கம், குளிர், வியர்த்து போகுதல், இறுக்கமான தசைகள், பற்களை கடித்தல், வயிற்று உபாதைகள், செய்யும் செயல்களில் ஈடுபாடின்மை, தன்னம்பிக்கையுடன் முடிவெடுப்பதில் சிரமப்படுதல், தேவையற்ற கவலைகள், அதீத பயம், நடத்தையில் அடிக்கடி மாற்றங்கள், போதை பொருட்களின் பயன்பாட்டுக்கு அடிமையாகுதல், அதிக தலைவலி, அதீத தூக்கம், பல நேரங்களில் தூக்கமின்மை, செரிமாணக் கோளாறுகள், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல், முதுகுவலி, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புக்களின் அளவு குறைதல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல், உடல் பருமன் அதிகரித்தல், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் மன அழுத்தத்தால் ஒருவருக்கு ஏற்படலாம்.
எனவே, ஒருவர் தனது முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அதிலிருந்து விரைவில் வெளியே வர வேண்டும். இதன் பாதிப்பு அதிகமாகும் போது, வாழ்வில் நம்பிக்கை இழப்பவர்கள் தற்கொலைக்குக் கூட முயல்வதுண்டு. எனவே,பாதிக்கப்பட்டவர்களின் நலன் விரும்பிகள் இவர்களை தனிமையில் இருக்க அனுமதிக்கக் கூடாது.
மன அழுத்தத்தை நிர்வகிப்பது என்பது அதை ஏற்படுத்தும் காரணங்களை ஆராய்வதில் தொடங்குகிறது. ஆனால் இது அவ்வளவு எளிதான செயலல்ல. மன அழுத்தத்திற்கான காரணங்களையும், சாத்தியமான தீர்வுகளையும் முறையாக பதிவுசெய்து வருவது நல்லது. தீர்வுகளை நடைமுறைப்படுத்த முயலும்போது மன அழுத்தம் மெல்ல, மெல்ல குறைந்து பாதிக்கப்பட்டவரால் சகஜ நிலைக்கு எளிதில் திரும்ப முடியும்.
நமக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை செய்வது, மனதை இலகுவாக வைத்திருக்க முயற்சி செய்வது, நம்மை அமைதிப்படுத்தும் சூழ்நிலையில் இருப்பது,விருப்பமான இசையைக் கேட்பது, முடிந்த அளவு இயற்கையோடு நேரத்தை செலவிடுவது, பக்திப் பயணம், இறைபக்தி, நல்ல புத்தகங்களை படிப்பது,வாழ்வில் நமக்கு விருப்பமில்லாத பல்வேறு சூழ்நிலைகளிலும் சமரசம் செய்து கொள்வது, யோகாசனம், நடைப்பயிற்சி ஆகியவை பொதுவாக நமது மன அழுத்தத்தை குறைக்கும்.
மன அழுத்தத்தை உருவாக்கும் பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து சிந்திப்பதையும், அதீதமான கற்பனையையும் நாம் தவிர்க்க வேண்டும். நமக்கு பிடித்த பணிகளில் நாம் நம் கவனத்தை செலுத்துவது பயன் தரும். யாரோடு இருந்தால் நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோமோ, அவர்களுடன் நம்முடைய நேரத்தை செலவிடுதல் பயன் தரும். நம்பிக்கையான நண்பர்களுடன் நமது பிரச்சினைகளை பகிர்ந்துகொள்வது நமது மன அழுத்தத்தின் தீவிரத்தை குறைக்கும். பிரச்னைக்கான தீர்வினையும் அவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் நமக்கு அளிக்கக் கூடும். இது நமது மன அழுத்தத்தை காலப்போக்கில் குறைக்கும்.
அன்றாடம் கிடைக்கும் போதுமான உறக்கம் நமது மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும். வரும் துன்பத்திற்கெல்லாம் அஞ்சினால் நாம் நம் வாழ்வை முழுமையாக வாழமுடியாது. இன்பம் வரும் போது மகிழும் நாம், துன்பம் வரும்போது வாழ்வின் ஒரு பகுதியாக அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுவது அவசியம்.
தற்காலிகமாக இருக்கும் மன அழுத்தம் தொடர்ந்து நம்மை கலக்கமடைய செய்யும்போது, நல்ல மன ஆலோசகரின் வழிக்காட்டுதலை பெறுவதில் சுணக்கம் காட்டக்கூடாது. மனிதனுக்கு உடல்நலத்துடன், மன நலனும் முக்கியம் என்பதை இனியாவது புரிந்து கொண்டு நல்வாழ்வு வாழத் தொடங்குவோம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)