மன அழுத்தம் என்பது, கிட்டத்தட்ட அனைவருக்கும், வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். சில நேரங்களில் நாம் வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக்கொள்வதால் மன அழுத்தத்தை அடையாளம் காண முடிவதில்லை. இன்றைய கால கட்டத்தில் கிட்டதட்ட அனைத்து வயதினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள்.
பெரும்பாலும், மன அழுத்தங்கள் நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள். திடீரென வேலையை இழந்தாலோ அல்லது குடும்பததில் மிகவும் வேண்டிய ஒருவரின் மரணத்தினாலோ அல்லது நெருங்கியவரிடம் எதிர்பாராத விதத்தில் சண்டை போடுவதாலோ நமக்கு இந்த மன அழுத்தம் ஏற்படலாம்.
மன அழுத்தங்களுக்கு நாம் எதிர்வினையாக செயல்படும் போது அது குறைவதற்கான வாய்ப்பு வரும். உதாரணத்திற்கு, நீங்கள் தற்சமயம் செய்யும் வேலை பிடிக்காமல் வெறுப்பு அதிகமாக இருந்தால் அந்த வேலையை விடும் போது நீங்கள் relax ஆக, மன அழுத்தம் நீங்கி இருக்க முடியும். மன அழுத்தம் முதலில் மனதில் ஏற்பட்டாலும், அது உடலில் வலுவான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தம் முதலில் தூக்கமின்மையில் தொடங்கி, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் என ஒவ்வொன்றாக பல பிரச்னைகளை அள்ளி அள்ளிக் கொடுத்து, இதய நோய்கள் வரை கொண்டு வந்து நிறுத்திவிடும். திடீரென ஏற்படும் கடுமையான மன அழுத்தம், மாரடைப்புக்கான குறுகிய கால அபாயத்தை அதிகரிக்கிறது. நீண்ட காலத்திற்கு இருக்கும் அதிக மன அழுத்தம் நாள்பட்ட மன அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இது கரோனரி தமனி நோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
மன அழுத்தத்தை எவ்வாறு நிர்வகிப்பது?
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு சில விஷயங்களை நம்மால் மாற்றவோ அல்லது நீக்கவோ முடியும். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களின் வேலை அட்டவணையை மாற்றிக்கொள்ளலாம், கடினமான நபர்களையோ அல்லது விரும்பத்தகாத சூழ்நிலைகளையோ தவிர்க்கலாம்.
ஆனால் பல சந்தர்ப்பங்களில் மன அழுத்தத்தை நீக்குவது சாத்தியமில்லை. இந்த சூழ்நிலையில், உங்கள் மன அழுத்த எதிர்வினையை நீங்கள் மாற்ற வேண்டும். உங்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும் சில வழிகள் இங்கே:
1. உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மன அழுத்தத்திற்கு உங்கள் எதிர்வினையை நீங்கள் கட்டுப்படுத்தலாம் மற்றும் நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளலாம்.
மன அழுத்தத்தை மோசமாக்கும் உங்கள் 'சிந்தனை பழக்கங்களை' அடையாளம் கண்டு அவற்றை அழிக்க முயற்சி செய்ய வேண்டும்.
இங்கே சில உதாரணங்கள்:
* உண்மைகளை கூர்ந்து கவனிக்காமலேயே, அது மிகவும் மோசமாக இருக்கும் என்று உடனடியாக முடிவு செய்தல்.
* நல்லதைப் பார்க்காமல், கெட்ட பகுதிகளை மட்டும் பார்ப்பது
* உங்களுடையது அல்லாத பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவது.
இத்தகைய எதிர்மறை எண்ணங்களை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை மாற்ற வேண்டும்.
2. செல்லப்பிராணி வளர்ப்பில் நீங்கள் ஆர்வம் கொண்டிருந்தால் அதன் மூலமாக உங்கள் மன அழுத்தத்தை குறைக்க முடியும். இது மனநிலையை மேம்படுத்தவும் செய்யும். உங்கள் செல்லப்பிராணியை நீங்கள் கட்டிப்பிடிக்கும் போது அல்லது தொடும் போது உங்கள் மன அழுத்தம் குறைந்து மன அமைதி கிடைக்கும்.
3. தியானம் செய்வதன் மூலம் நீங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி குழப்பமான எண்ணங்களை அமைதியாக்க செய்யலாம். இது மனதில் அமைதியை உண்டு செய்யும். சமநிலை உணர்வை அளிக்கும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு இரண்டிற்கும் உதவும்.
4. மருந்தில்லாமல் அனைத்து வயதினரும் இசை மூலம் கோபம், அழுத்தம் மற்றும் கவலையை போக்கலாம். உங்களுக்கு பிடித்த இசையை திரும்ப திரும்ப கேட்கும் போது உங்கள் மனம் அமைதி பெறும்.
5. நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தால், உங்கள் உடலின் சிறிய அசைவுகள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். இதனால் மனநிலை மாற்றம் ஏற்படும். வழக்கமான உடற்பயிற்சி, கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பொதுவான நிலைகளின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதால் உங்கள் மனமும் நன்றாக இருக்கும். உடற்பயிற்சி மற்றும் பிற உடல் செயல்பாடுகள் எண்டோர்பின்களை உருவாக்குகின்றன. மேலும் தூங்கும் திறனையும் மேம்படுத்துகின்றன.
6. நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை, நெருங்கிய உறவினரோடும், நண்பர்களோடும் மற்றும் குடும்பத்தினரோடும் சேர்ந்து களிப்பாக கழிக்க வேண்டும். மனதில் இருக்கும் பிரச்னையை நமக்கு வேண்டிய ஒருவரிடம் சொல்வதால் மனம் அமைதி பெறும். பிரச்னைகான தீர்வும் கிடைக்கும்.
இந்த 6 எளிய முறைகளை முடிந்த அளவிற்கு கடைபிடிக்கும் போது உங்களின் மனம் அமைதி பெற்று மன அழுத்தம் குறையும்.