
பிரபல உடற்பயிற்சியாளர் வினோத் சன்னா, அனந்த் அம்பானி, ஜான் ஆபிரகாம், ஹர்ஷவர்தன் ரானே, ஷேகர் ரவ்ஜியானி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பயிற்சி அளித்தவர். குறிப்பாக, அனந்த் அம்பானியின் 18 மாதங்களில் 108 கிலோ எடை இழப்புக்கு உதவியவர் ஆவார். வினோத், தனது முழுமையான உடற்பயிற்சி மற்றும் எடை இழப்பு அணுகுமுறையை சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். சமீபத்திய பதிவு ஒன்றில், உங்கள் உடலுக்கு மொபிலிட்டி பயிற்சி தேவை என்பதற்கான மூன்று அறிகுறிகளை அவர் பகிர்ந்துள்ளார். இந்த பயிற்சிகள் உங்கள் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, காயங்களைத் தடுக்க உதவும்.
வினோத் சன்னா தனது பதிவில், “உங்கள் தசைகள் இறுக்கமாக இல்லை... அவை உங்களை எச்சரிக்கின்றன. மொபிலிட்டி பயிற்சி உங்கள் உடலின் உண்மையான திறனை வெளிப்படுத்தும் முக்கிய பகுதியாகும். தினமும் 10 நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினால் உங்கள் உடல் மேம்படும்,” என்று குறிப்பிட்டார். அவர் பகிர்ந்த மூன்று அறிகுறிகள் இதோ:
உங்கள் தொடைத் தசைகள் அல்லது இடுப்பு எப்போதும் இறுக்கமாக உணர்கிறதா? ஸ்ட்ரெச்சிங் செய்த பிறகும் இந்த இறுக்கம் நீடித்தால், உங்கள் உடலுக்கு மொபிலிட்டி பயிற்சி தேவை என்பது ஒரு அறிகுறியாகும். இதற்கு வினோத் பரிந்துரைக்கும் பயிற்சிகள்:
தவளை ஸ்ட்ரெச் (Frog Stretch): இடுப்பு மற்றும் தொடை தசைகளை நீட்ட உதவும்.
கேட்-கோ ஸ்ட்ரெச் (Cat-Cow): முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும்.
ஹிப் ராக்கிங் (Hip Rocking): இடுப்பு இயக்கத்தை மேம்படுத்த உதவும்.
நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்த பிறகு தோள்கள் வளைந்து அல்லது முதுகில் வலி ஏற்படுகிறதா? இது உங்கள் உடலுக்கு மொபிலிட்டி பயிற்சி தேவை என்பதற்கான மற்றொரு அறிகுறி.
இதற்கு பரிந்துரைக்கப்படும் பயிற்சிகள்:
கோப்ரா போஸ் (Bhujangasana): முதுகெலும்பு மற்றும் மார்பு தசைகளை நீட்ட உதவும்.
ஒரு கை மற்றும் எதிர் கால் நீட்டுதல் (Bird Dog Raise): உடல் சமநிலை மற்றும் முதுகு வலிமையை மேம்படுத்தும்.
ஸ்குவாட் செய்யும்போது ஆழமாக செல்ல முடியவில்லையா? அல்லது லன்ஜஸ் போன்ற அடிப்படை பயிற்சிகளின் போது முழங்கால்களில் அழுத்தம் உணர்கிறீர்களா? இவை உங்கள் உடலுக்கு மொபிலிட்டி பயிற்சி தேவை என்பதை காட்டுகின்றன. இதற்கு வினோத் பரிந்துரைக்கும் பயிற்சிகள்:
முழங்கால் ராக்கிங் (Knee Rocking): முழங்கால் இயக்கத்தை மேம்படுத்தும்.
ஹிப் ஃப்ளெக்ஸர் ஸ்ட்ரெச் (Hip Flexor Stretch): இடுப்பு தசைகளை நீட்ட உதவும்.
கணுக்கால் மொபிலிட்டி (Ankle Mobility): கணுக்கால் இயக்கத்தை மேம்படுத்தும்.
வினோத் சன்னா, “புத்திசாலித்தனமாக பயிற்சி செய்யுங்கள், கடினமாக அல்ல,” என்று அறிவுறுத்துகிறார். உங்கள் தினசரி உடற்பயிற்சி வழக்கத்தில் 10 நிமிட மொபிலிட்டி பயிற்சியை சேர்த்தால், உங்கள் உடல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, சிறந்த பதிப்பாக உங்களை மாற்றலாம்.
சிறந்த பயிற்சியாளரைத் தேர்ந்தெடுங்கள்; முறையாக கற்று பயிற்சி செய்யுங்கள்; ஆரோக்கியம் பேணுங்கள்!