
காலை எழுந்ததும் காபி(Coffee) இல்லாமல் இருக்க முடியாது என்னும் நிலையில் பலர் இருக்கிறோம். காபி அருந்துவது உடலுக்கு நன்மையா தீமையா? என்னும் விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தேடித்தேடி காப்பியை அருந்தும் காப்பி பிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறதே தவிர குறையவில்லை.
குறிப்பாக காபியில் உள்ள காஃபின் என்ற வேதிப்பொருள் உற்சாகம் தந்து கவனத்தையும், செயல்திறனையும் அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும் காபி குடிப்பது ஆரோக்கியமான பழக்கமா அல்லது நாம் கைவிட வேண்டிய ஒன்றா? என்பது குறித்து கருத்துக்கள் அன்று முதல் இன்று வரை வேறுபடுகின்றன.
ஆனால், காபியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளால் நோய்களை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு சக்தி, கல்லீரல் நோய்க்கு எதிராக பாதுகாப்பு, சில நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைத்தல் ஆகியவை காபியின் நன்மைகளாக உள்ளன.
பல்வேறு காரணங்களுக்காக காபி குடிப்பதை எதிர்த்தாலும் மது மற்றும் புகையிலையைப் போல அதன் பயன்பாடு கட்டுப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியமே. இருப்பினும், காபி குடிப்பது உண்மையில் நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்து காபி தொடர்ந்து குடிக்கலாம் என உறுதி செய்கிறது. முக்கியமாக நம்மை தற்போது அதிகமாக அச்சுறுத்தும் புற்றுநோயை வராமல் தடுக்க உதவுகிறது எனும் ஆய்வு கவனத்தை ஈர்க்கிறது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் (American Journal of Epidemiology) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் தொடர்பாக காபி குடிப்பதால் ஏற்படும் நேர்மறையான விளைவுகளை ஒரு புதிய ஆய்வு குறிப்பிடுகிறது.
முந்தைய ஆய்வுகள் பல வாழ்க்கை முறைகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் இந்த வகையான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகக் காட்டியுள்ள நிலையில், காபி (Coffee) குடிப்பது அந்த ஆபத்தை கணிசமாகக் குறைக்கும் கண்டுபிடிப்புகள் தெளிவாக இருந்தன. இந்த விளைவுக்கு காரணம் காஃபின் அல்ல, மாறாக காபியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், பாலிபினால்கள் மற்றும் பல புற்றுநோய் தடுப்பு பொருட்கள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது.
ஆய்வில், ஒரு நாளைக்கு குறைந்தது 4 கப் காபி குடிப்பவர்களுக்கு வாய்வழி அல்லது தொண்டை புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 49% குறைவாக இருந்ததாக தகவல்கள் கூறினாலும், மேலும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் எனும் கருத்தும் நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் எல்லை மீறினால் எதுவும் ஆபத்து தானே? காபிக்கு அடிமையானவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்:
ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம்களுக்கு மேல் காஃபின் உட்கொள்ளக்கூடாது என்று FDA பரிந்துரைக்கிறது .
இது மூன்று முதல் நான்கு கப் காபிக்கு சமம். அதிகப்படியான காஃபினின் பொதுவான பக்க விளைவுகளாக தூக்கத்தில் சிரமம், பதட்டம் மற்றும் வயிற்று வலி ஆகியவைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும் காபியில் அதிகமாக சர்க்கரை, கிரீம் அல்லது சர்க்கரை சார்ந்த இனிப்புகளைச் சேர்ப்பது சில உடல் நல அபாயங்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சர்க்கரை-இனிப்பு பானங்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கிறது.
பொதுவாகவே சர்க்கரை கொண்ட பானங்கள் மூலம் அதிகப்படியான கலோரி உட்கொள்ளல், எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன என்பதற்கு சான்றுகள் உள்ளதால் நமக்குப் பிடித்த காபியின் சர்க்கரை மற்றும் கலோரிகளின் அளவைப் புரிந்து தேவையான அளவில் மட்டுமே அருந்துவது ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)