
சரியான உணவுப் பழக்கம் கண்களின் ஆரோக்கியத்தை (Eye Health) பேணுகின்றன. குறிப்பிட்ட வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கண்பார்வை மங்குதல், கண்புரை மற்றும் வயது தொடர்பான மாக்குலர் சிதைவு இரவு குருட்டு தன்மை போன்ற பிரச்னைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் கண்களின் திறனை பாதுகாக்க நாம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளும் அறிவியல் ரீதியான அதனுடைய ஆழமான பங்குகள் குறித்தும் இப்பதிவில் காண்போம்
1. லூட்டின் (Lutein) மற்றும் ஜியாக்சாண்டின் (Zeaxanthin)
கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகளான லூட்டின் மற்றும் ஜியாக் சாண்டின் இரண்டும் விழித்திரையின் மையப் பகுதியான மாகுலாவில் (Macula) அதிக செறிவுடன் காணப்பட்டு நீல ஒளியை (Blue Light) வடிகட்டி, விழித்திரையைப் பாதுகாக்கின்றன. மேலும், இவை மாகுலர் சிதைவு (AMD) மற்றும் கண்புரை உருவாகும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பசலைக்கீரை ,கேல் கீரை முட்டை, புரோக்கோலி பட்டாணி ஆகியவை லூட்டின் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவற்றின் மிகச் சிறந்த மூலங்களாக உள்ளன.
2. வைட்டமின் ஏ (Vitamin A) மற்றும் பீட்டா கரோட்டின் (Beta-Carotene)
வைட்டமின் ஏ விழிவெண்படலத்தைப் (Cornea) பாதுகாத்து, கண்ணுக்குள் வெளிச்சத்தைப் பிடிக்கும் ரோடாப்சின் (Rhodopsin) என்ற புரதத்தை உருவாக்க உதவி கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ குறைபாடினால் இரவு குருட்டுத்தன்மை ஏற்படுகிறது. உடலால் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படும் ஒரு ஊட்டச்சத்து தான் பீட்டா கரோட்டின். கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, பூசணிக்காய், ஆட்டு ஈரல் ஆகியவற்றில் வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுகிறது
3. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (Omega-3 Fatty Acids)
விழித்திரையின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் உள்ள டி.ஹெச்.ஏ (DHA) என்ற மூலக்கூறு மிகவும் அவசியம். வறண்ட கண்(Dry Eye Syndrome) ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் குறைவினால் உண்டாகிறது.
கண்ணீரை உற்பத்தி செய்யும் சுரப்பிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, கண்ணில் ஏற்படும் வீக்கத்தைக் (Inflammation) குறைக்கவும், மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைக்கவும் உதவும் டி ஹெச் ஏ மூலக்கூறு கொழுப்பு நிறைந்த மீன்கள், ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகளில் நிறைந்து காணப்படுகின்றன.
4. வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் (Zinc)
வைட்டமின் சி வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் கண்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கு அவசியமானவை. ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யாப்பழம் ஆகியவற்றில் வைட்டமின் சி யும், பால், பால் பொருட்கள் பருப்புகளில் துத்தநாக சத்தும், வேர்க்கடலை, கீரை, அவகோடாவில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேற்கூறிய உணவுப் பொருட்களை சரிவிகித அளவில் சாப்பிட்டு கண்களின் ஆரோக்கியத்தை (Eye Health) பேணுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)