
மனிதர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் உண்மையான செல்வம் அவர்களது உடல் ஆரோக்கியம் தான். அனைவரும் செய்யக்கூடிய எளிமையான சக்தி வாய்ந்த உடற்பயிற்சிகளில் ஒன்று நடைப்பயிற்சி (walking). சில வருடங்களாக ஒரு நாளைக்கு பத்தாயிரம் அடிகள் நடப்பது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்பட்டு வருகிறது. சமீபத்தில், ஜப்பானில் இடைவெளி நடைப்பயிற்சி (Interval walking training) என்ற ஒரு மாற்று வழி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் குறைந்த நேரத்தில் அதிக அளவு நன்மையை உடலுக்கு தரலாம் என்கின்றன ஆய்வுகள். இரண்டில் எது உடலுக்கு அதிக நன்மைகளைத் தரும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
பத்தாயிரம் அடிகள் நடப்பதன் நன்மைகள்:
தினமும் தோராயமாக ஐந்து மைல் தூரம் நடந்தால் பத்தாயிரம் அடிகளைக் கடக்கலாம். இந்த நடைப்பயிற்சிக்கு ஜிம் செல்ல வேண்டியதில்லை. எந்த உபகரணங்களும் அவசியமில்லை. எந்த இடத்திலும், எந்த வயதிலும் இதைச் செய்யலாம். தினமும் இப்படி நடப்பதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயம் குறையும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. 2022ம் ஆண்டு இங்கிலாந்தில், 78,000 க்கும் மேற்பட்ட முதியவர்களை வைத்து ஒரு பரிசோதனை நடத்தப்பட்டதில், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 9800 அடிகள் நடப்பதால் அவர்கள் டிமென்சியா நோயின் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று தெரிந்தது. தினமும் சுமார் 3,800 அடிகள் நடந்தால் கூட 25 சதவீதத்துக்கு குறைவான டிமென்சியா ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று தெரிந்தது.
இந்த நடைப்பயிற்சியில் சில குறைபாடுகள் உள்ளன. அனைவராலும் தினசரி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. வயதானவர்களுக்கு மூட்டு வலி பிரச்சனைகள் இருக்கலாம். பரபரப்பான வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு இந்த நடைமுறை ஒத்து வருவதில்லை
ஜப்பானிய இடைவெளி நடைப்பயிற்சி முறை:
சமீபத்தில் ஜப்பானில் அறிமுகமான இடைவெளி நடைப்பயிற்சி முறைப்படி முதலில் மூன்று நிமிடங்கள் மெதுவாக ஒருவர் நடக்க வேண்டும். பிறகு மூன்று நிமிடங்கள் அலுவலகத்திற்கு அவசரமாக செல்வது போல விரைவான வேகத்தில் நடக்க வேண்டும். மீண்டும் மெதுவாக 3 நிமிடங்கள் என இந்த சுழற்சியை 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். இதனால் நேரம் மிச்சப்படுகிறது. மூட்டுகளில் அதிகளவு வலி இருக்காது. ரத்த அழுத்தம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது. இருதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மனநிலை மேம்பாடும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. சிறந்த தூக்கமும் கிடைக்கிறது.
ஹார்ட்வேர் மற்றும் ஸ்டான்ஃபோர்ட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர் சௌரப் சேத்தி உள்ளிட்ட பல நிபுணர்கள் இந்த ஜப்பானிய இடைவெளி நடைப்பயணத்தை பரிந்துரைக்கின்றனர்.
இதை ஆரம்பிக்கும் முன்னர் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை எளிதான நடைப்பயிற்சி மூலம் வார்ம் அப் செய்து கொள்ள வேண்டும். மூன்று நிமிட இடைவெளியில் மாறி மாறி வேகமாகவும் மெதுவாகவும் நடக்க வேண்டும். 30 நிமிடங்களில் பயனுள்ள பயிற்சி கிடைக்கும்.
இரண்டில் எது நல்லது?
உண்மையில் பத்தாயிரம் அடிகள் நடந்தாலும், ஜப்பானிய இடைவெளி நடைபயிற்சியை முயற்சி செய்தாலும் இரண்டுமே உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை தான். உணவு எடுத்துக் கொண்ட பின்பு 15 நிமிடக் குறுகிய நடைபயணம் (walking) மிகவும் முக்கியமானது. இதனால் செரிமானம், ரத்தச்சர்க்கரைக் கட்டுப்பாடு, வயிற்று உப்புசம் குறைதல் போன்றவை நிகழ்கின்றன. வேகமாக நடக்கும் போது அது உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதற்கும், எடை மேலாண்மைக்கும் பங்களிக்கின்றது.
அதே நேரத்தில் பத்தாயிரம் அடி நடைப் பயிற்சி சகிப்புத்தன்மையை வலுப்படுத்தி அறிவாற்றல் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றது. ஒவ்வொருவரும் அவரவருடைய வாழ்க்கை முறை, மற்றும் உடலின் தேவைகளுக்கு ஏற்ற நடைப்பயிற்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சத்தான உணவுப் பழக்கங்களுடன் தொடர்ந்து நடப்பது இதயத்தையும் மனதையும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.