மழைக்காலத்தில் குழந்தைக்கு சளி, காய்ச்சலா? தடுப்பது எப்படி?

குழந்தைகள் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க குடிநீர், உணவு மற்றும் கொசுக்களிடம் கவனிக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள் என்ன என்பதை விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.
Monsoon Child Health - மழைக்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம்
Monsoon Child Health - மழைக்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம்
Updated on
Q

டாக்டர்… மழை பெய்தாலே குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்துவிடுகிறது. மழையில் நனைந்ததால்தானா? இந்தக் காலத்தில் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவு, கொசுக்கள் - எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

A

மழை நேரடியாக காய்ச்சலை ஏற்படுத்தாது. ஆனால் மழைக்காலச் சூழல் சில கிருமிகள், கொசுக்கள் மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவும் நோய்களுக்கு ஏதுவாக அமைகிறது.” இந்த ஆண்டின் மழைக்காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்கு, மலேரியா, ஃப்ளு, உண்ணி காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் குறித்து சுகாதார துறை எச்சரிக்கைகள் செய்துள்ளது.

மழையால் அல்ல… கிருமிகளால் காய்ச்சல்

மழையில் நனைந்ததால் மட்டும் குழந்தைக்கு காய்ச்சல் வருவதில்லை. காய்ச்சல் பெரும்பாலும் வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் பல நோய்கள் ஒரே நேரத்தில் பரவுவதால், 'மழைக்காய்ச்சல்' என்று எல்லாவற்றையும் ஒரே காரணத்துக்குள் கொண்டுவர முடியாது.

குடிநீரில் கூடுதல் கவனம்

கனமழை அல்லது வெள்ளத்தின்போது குடிநீர் மாசுபடும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீரையே கொடுக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆறவைத்து பயன்படுத்தலாம். வெள்ளநீரைக் குடிப்பதற்கோ, பல் துலக்குவதற்கோ, உணவு தயாரிப்பதற்கோ பயன்படுத்தக்கூடாது.

உணவு பாதுகாப்பு மிக முக்கியம்

மழைக்காலத்தில் நீண்ட நேரம் வெளியே வைக்கப்பட்ட உணவுகள், சுத்தமற்ற இடங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள், பாதுகாப்பற்ற குடிநீர் ஆகியவை வயிற்றுப்போக்கு உள்ளிட்ட குடல் தொற்றுகளுக்கு வழிவகுக்கலாம். வீட்டில் தயாரித்த உணவைச் சூடாகவும் புதிதாகவும் கொடுப்பது நல்லது. பழங்கள், காய்கறிகளைச் சுத்தமான நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.

கொசுவுக்கு வீட்டில் இடமில்லை

மழைக்குப் பிறகு தேங்கும் சிறிய அளவு நீர்கூட கொசுக்கள் பெருகும் இடமாக மாறலாம். பூந்தொட்டித் தட்டுகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், திறந்த பாத்திரங்கள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை எப்போதும் மூடி வைக்கவும். தேவையற்ற நீர்த்தேக்கங்களை வாரத்திற்கு ஒருமுறையாவது காலி செய்து சுத்தம் செய்யவும்.

டெங்குவைத் தடுப்பது ஒவ்வொரு வீட்டிலும் முக்கியம்

டெங்கு பரப்பும் கொசு பகலிலும் கடிக்கக்கூடியது. எனவே 'இரவில் மட்டும் கொசுவலை போதும்' என்று நினைக்க வேண்டாம். குழந்தைகள் வெளியில் செல்லும்போது உடலை முடிந்தவரை மூடும் ஆடைகள் அணியலாம். வயதுக்கேற்ற கொசு விரட்டிகளை வழிகாட்டுதலின்படி பயன்படுத்தலாம். வீட்டில் கொசுக்கள் பெருகும் இடங்களை அழிப்பதே மிக முக்கியமான பாதுகாப்பு.

Monsoon Child Health - மழைக்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம்
Monsoon Child Health - மழைக்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம்

வெள்ளநீரை விளையாட்டு மைதானமாக்காதீர்கள்

தேங்கிய அல்லது வெள்ளநீரில் குழந்தைகள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலில் காயம் இருந்தால் மாசுபட்ட நீருடன் தொடர்பு ஏற்படுவது ஆபத்தானது. விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட நீர் மூலம் எலிக்காய்ச்சல் பரவலாம். வெள்ளநீரில் நடக்க வேண்டிய சூழலில் பாதுகாப்பான காலணிகளைப் பயன்படுத்தி, பின்னர் உடலையும் கால்களையும் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் அறிகுறி முதல் தடுப்பூசி வரை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியவை!
Monsoon Child Health - மழைக்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம்

காய்ச்சலை 'சாதாரண வைரஸ்' என்று விடாதீர்கள்

மழைக்காலத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு போன்றவை பல்வேறு நோய்களிலும் காணப்படலாம். தொடர் காய்ச்சல், குழந்தை சோர்ந்து காணப்படுதல், தண்ணீர் குடிக்க மறுத்தல், தொடர்ந்து வாந்தி, மூச்சுத்திணறல், சிறுநீர் குறைதல், வயிற்றுவலி, இரத்தப்போக்கு அல்லது உணர்வு மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீங்களாக மருந்துகளைத் தொடங்க வேண்டாம்.

மழைக்காலக் குடும்பப் பாதுகாப்பு விதிகள் இதோ!

பாதுகாப்பான குடிநீர், சுத்தமான உணவு, கைகளைச் சோப்பால் கழுவுதல், கொசு பெருகும் இடங்களை அழித்தல், வெள்ளநீரைத் தவிர்த்தல், குழந்தைகளின் தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்துதல், காய்ச்சலை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுதல் - இந்த எளிய பழக்கங்களே மழைக்கால நோய்களைத் தடுக்க உதவும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நீர்ச்சத்து குறையாமல் உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற சரியான நீர்ச்சத்து சிகிச்சை முக்கியம்.

இதையும் படியுங்கள்:
காய்ச்சல் குறைந்த பிறகுதான் குழந்தைகளுக்கு டெங்கு ஆபத்து! பெற்றோர் கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்!
Monsoon Child Health - மழைக்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம்

மழை குழந்தைகளின் எதிரி அல்ல… மழைக்கால அலட்சியம்தான் எதிரி.

மழையை ரசிக்கட்டும் குழந்தைகள். பெற்றோர் கவனமாக இருந்தால், மழைக்காலமும் ஆரோக்கியமான ஆனந்தமான காலமாகவே இருக்கும்!

logo
Kalki Online
kalkionline.com