
தும்பை, நல்வேளை அவுரி, அரிவாள்மனை பூண்டு, சிறுகுறிஞ்சான், நொச்சி, கீழாநெல்லி, திருநீற்றுப்பச்சை, பிரண்டை, கோவை, நாய் கடுகு, தைவேளை கொழிஞ்சி, கண்வலிக் கிழங்கு, பேய் மிரட்டி, மருதாணி, சீந்தில் கொடி, இன்சுலின் செடி, சீமை அகத்தி, வேலி பருத்தி, நித்ய கல்யாணி, தொட்டால் சிணுங்கி, நன்னாரி, சர்க்கரை கொல்லி, சிறியாநங்கை, ஐயம்பனா சதாவரி, துத்தி, அழிஞ்சில், நுணா, ஆவாரை, சர்க்கரை துளசி, நீர்முள்ளி, நெருஞ்சில், எலுமிச்சைப்புல், வாதநாராயணன், பூனைக் காலி, குண்டுமணி, சிலந்தி நாயகம், நாயுருவி, கல்யாண முருங்கை, கறிவேம்பு, எழுத்தாணி பூண்டு, காட்டாமணக்கு, பிரமந் தண்டு, அஸ்வகந்தா, எட்டி மரம், சர்ப்பகந்தி, மருந்துக்கூர்க்கன்.
இவையெல்லாம் என்ன தெரியுமா? இன்றைய குழந்தைகளுக்கு தெரியாத அரிய வகை மூலிகைகள். ஏன் சில பெரியவர்களுக்கும்தான் இதைக் குறித்த பயன்கள் தெரிவதில்லை. அந்தக் காலத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் யாருக்கு எந்த நோய் வந்தாலும் அதற்கான மூலிகையைக் கொண்டு கை வைத்தியம் செய்து குணப்படுத்தி விடுவார்கள்.
பக்க விளைவுகள் அற்ற, அதிக செலவும் இன்றி நம் வீட்டைச் சுற்றியும், தோட்டத்திலும் இருக்கும் இந்த மூலிகைகளைக் கொண்டே வைத்தியம் பார்த்தார்கள். வீட்டில் வளரும் மூலிகைகளை பறித்து உரலில் தட்டி அல்லது அம்மியில் அரைத்து கஷாயம் போட்டுக் கொடுக்க இன்று நம் வீடுகளில் பாட்டிகளும் இல்லை. ஆனால், இன்று எடுத்ததற்கெல்லாம் டாக்டரிடம் ஓடும் நாம், கை வைத்தியம் என்பதை மறந்தே போனோம்.
1) வில்வம்: காய்ச்சல், மஞ்சள் காமாலை, அனீமியா போன்றவற்றிற்கு சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக பயன்படக்கூடியது.
2) தும்பை: சளி, இருமல், தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை, ஒற்றைத் தலைவலி, காதில் சீழ் போன்ற பிரச்னைகளை குணப்படுத்த உதவும் சிறந்த மூலிகை. உடல் சூட்டை தணித்து, மலத்தை இளக்க உதவுகிறது.
3) சிறியாநங்கை: கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, சைனஸ், மலேரியா காய்ச்சல், விஷக்கடி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. விஷக்கடிக்கு சிறியாநங்கை இலையுடன் மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட விஷக்கடி இறங்கிவிடும். நீரிழிவு நோய்க்கு சிறியாநங்கை டீ அல்லது கஷாயம் பருகலாம்.
4) சீந்தில் கொடி: சித்த மருத்துவத்தில் கற்பக மூலிகையாக கருதப்படும் இவை காய்ச்சல், மந்தம், வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. கல்லீரலை பாதுகாக்கும்; இதயத்தை பலப்படுத்தும் என ஏகப்பட்ட மருத்துவ குணங்களைக் சீந்தில் கொடி கொண்டது.
5) முள் முருங்கை: கல்யாண முருங்கை என்று அழைக்கப்படும் இது பித்தத்தை போக்கும். முடி நரைக்காமல் இருக்க உதவும். காய்ச்சலை குறைக்கும். மாதவிடாய் தொல்லையை போக்கும். வீக்கங்களை குறைக்கும்.
6) சிறுகுறிஞ்சான்: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். பித்தத்தை சமன் செய்யும். நரம்புகளை பலப்படுத்தும். கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள பிளவனாய்டுகள் புற்றுநோயை தடுக்கும் தன்மை கொண்டவை. இது ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகளை கொண்டுள்ளது.
7) அவுரி இலை: தலைமுடி, சருமம், உடல் உறுப்புகள் என அனைத்துக்கும் நன்மை தரக்கூடிய மூலிகை இது. மஞ்சள் காமாலையை குணமாக்கும். வயிற்றில் உள்ள எல்லாவிதமான கெட்ட கிருமிகள், நுண்ணுயிரிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
8) தூதுவளை பழம்: தூதுவளையின் பழத்தை வத்தலாக காய வைத்து வதக்கி சாப்பிட கண் குறைபாடுகள் நீங்கும். பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிட சளி, இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு நல்லது. இலை, பூ, பழம் என தூதுவளையின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை. பழத்தை நீரில் கொதிக்க வைத்து குடிக்க மலச்சிக்கல் தீரும்.
9) அரிவாள்மனைப் பூண்டு: அரிவாள் மூக்கு பச்சிலை என அழைக்கப்படும் இதன் இலை, விதை, வேர் என அனைத்தும் மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. நரம்பு தளர்ச்சியை போக்கக்கூடியவை. ஞாபக சக்தியை அதிகரிக்கக் கூடியவை. வெட்டுக் காயங்கள், புண்கள், உடல் எரிச்சல் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகின்றன.
10) மஞ்சள் கரிசலாங்கண்ணி: காமாலை, கண் கோளாறு, கல்லீரல் கோளாறு போன்றவற்றிற்கு சிறந்தது. இந்த கீரையை சாப்பிட கல்லீரல் வலுப்படும்.