காலையில் மட்டும் குழந்தைக்கு காய்ச்சல் வருகிறதா? பதற வேண்டாம், இதைப் படியுங்கள்!

குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிடும்போது நீங்கள் செய்யும் அந்த ஒரு தவறு இதுதான்!
Child Fever | குழந்தை காய்ச்சல்
Child Fever | குழந்தை காய்ச்சல்AI Image
Updated on

ஒரு நாள் முகத்தில் சோகம் அப்ப மூன்று வயது சிறுவனை எனது கிளினிக்கிற்கு அழைத்து வந்தார் அவன் அம்மா. சுமார் பத்து நாட்களுக்குள் மூன்றாவது முறையாக குழந்தையை அழைத்து வருகிறார். காய்ச்சல் சரியாகவில்லை என்பது அவர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.

நானும் அவரை சமாதானப்படுத்தி சில வார்த்தைகள் சொல்லி விட்டு, பழைய பரிந்துரை சீட்டுகளை வாங்கி பார்த்தேன். முதல் முறை வரும்போது 102 டிகிரி காய்ச்சல் இருந்தது. செவிலியர் எழுதியிருந்தார். காய்ச்சலை தவிர மற்ற எந்த அறிகுறியும் இல்லை என்று வைரஸ் காய்ச்சல் என்று எழுதி இருந்தேன்.

இரண்டாவதாக நான்கு நாட்கள் இடைவெளி விட்டு மாலை ஆறரை மணிக்கு வந்திருக்கிறார் காலை ஏழரை மணிக்கு 101.5 காய்ச்சல் என்று தாயே அவரது கையெழுத்தில் எழுதி இருந்தார். ஆனால் செவிலியர் மாலை குழந்தையின் வெப்பநிலை 98.6 டிகிரி மட்டுமே. அதாவது காய்ச்சல் இல்லை.

Child Fever | குழந்தை காய்ச்சல்
Child Fever | குழந்தை காய்ச்சல்AI Image

நான் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்று அழைத்து வந்தால் ஒரு டிஜிட்டல் தெர்மோமீட்டர் வாங்கச் சொல்லி அதை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுக் கொடுத்து, வீட்டிலேயே ஆறு மணி நேர இடைவெளியில் உடல் வெப்பநிலையை அளவிட்டு எனது பரிந்துரைத் தாளிலேயே பின் பக்கம் தேதி, நேரம் குறிப்பிட்டு எழுதி வைக்க சொல்வேன்.

இந்தத் தாயும் அதே போல எழுதியிருந்தார். காலை வெப்பநிலை மட்டும் 101, 101.4 டிகிரி என அதிகமாகவே இருந்தது. மற்ற நேரங்களில் மதியம், மாலை இரவு அளவுகள் சாதாரண வெப்பநிலையில் இருந்தது.

“சரிம்மா, பத்து நாளா காய்ச்சல் இருக்கறதால இரத்தம், சிறுநீர் பரிசோதனை பண்ண வேண்டியிருக்கு என்று சொல்லி எழுதி அனுப்பினேன்.

“என்னவாக இருக்கும் ? காய்ச்சலைத் தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லையே” என்று யோசித்துக் கொண்டே அடுத்தடுத்த குழந்தைகளை பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தேன்.

லேப் ரிபோர்ட் வந்தது. எல்லாம் சரியாக இருந்தது. எதுவும் பிரச்னை இல்லை. மீண்டும் குழப்பம். காலையில் மட்டுமே வரும் காய்ச்சல் என்று எதுவுமில்லையே என்று சற்றே குழம்பிப் போனேன்.

“நீங்கள் எப்படி வெப்பநிலையை அளக்கிறீர்கள்? அக்குளிலா அல்லது வாயில் வைத்தா ?” என்று கேட்டேன்.

“டாக்டர் நீங்கதான் சொன்னீங்க... வாயில் வைத்து அளவிடுவது துல்லியமாக இருக்கும். அக்குளில் வியர்த்து இருந்தால் வெப்பநிலை சரியாக காட்டாது அல்லது 1 டிகிரி கூட்டிக் கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள். நான் வாயில் தான் செக் பண்ணுவேன் டாக்டர். பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவி விடுவேன் டாக்டர்.”

“காலைல எழுந்த உடனே பார்ப்பீங்களா?”

“இல்ல டாக்டர் அவன் பெரும்பாலும் எழும்போதே பசிக்குதுன்னு சொல்லி அழுவான், அதனால பால் காய்ச்சி ரெடியா வெச்சிருப்பேன். அதை கொடுத்தாதான் சமாதானம் ஆவான். அதுக்கப்புறம் தான் பார்ப்பேன் டாக்டர்” என்றார்.

இதையும் படியுங்கள்:
தொக்கம், உறம் எடுத்தல் விபரீதம்: ICU-வில் குழந்தை! பெற்றோரே உஷார்!
Child Fever | குழந்தை காய்ச்சல்

சட்டென பொறி தட்டியது. அவர் பாலை வெதுவெதுப்பாக கொடுத்தால் கூட உடல் வெப்பநிலையை விட அதிகமாக தான் இருக்கும். அதனால் அவர் தெர்மோமீட்டரை வாயில் வைத்து அளவிடும்போது காலை வெப்பநிலை மட்டும் அதிகமாக காட்டுகிறது என்று புரிந்து கொண்டேன். அவரிடம் சொன்னேன் பால் குடித்தவுடன் பார்க்காதீர்கள். ஒரு மணிநேரம் கழித்து அளந்து பாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.

மறுநாள் அந்த தாய் அலைபேசியில் அழைத்து “டாக்டர், காய்ச்சல் இல்லை” என்று சொன்னார்

இப்படித்தான் எந்த புத்தகத்திலும் இல்லாத பல பாடங்களை ஒவ்வொரு மருத்துவரும் தினமும் கற்று வருகிறோம்.

இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம், தேவையற்ற பயத்திலிருந்தும், மருத்துவமனைக்கு அடிக்கடி ஓடுவதிலிருந்தும் விடுபட்டு, குழந்தையின் உடல்நிலையை துல்லியமாக கண்காணித்து நிதானமான பெற்றோராக நீங்கள் மாற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com