
சிலர் எப்போதும் எடை கூடாமல் ஒரே மாதிரியாக இருப்பார்கள். அவர்கள் ஏதேனும் டயட்டில் இருக்கிறார்களா என்று நினைப்போம். ஆனால் உண்மை காரணம் என்ன தெரியுமா? அவர்களால் வயிறு நிறைய சாப்பிட முடியாத நிலை. காரணம் அவர்கள் வாயில் அல்லது நாக்கில் உள்ள புண்கள். இந்த புண்களின் எரிச்சல் காரணமாக அவர்கள் உணவையே சற்று குறைவாக தான் சாப்பிடுவார்கள்.
இது என்ன புதிய கண்டுபிடிப்பாக இருக்கிறதே என்று நினைப்பீர்கள். இது உண்மையும் கூட. வாயில் புண் இருப்பவர்களை கவனித்து பாருங்கள். ஏதேனும் காரமாகவோ அல்லது முறுக்கு போன்ற இத்தியாதிகளையோ சாப்பிடுவதற்கு அச்சப்படுவார்கள். ஜூஸ் அயிட்டங்களை அதிகம் விரும்புவர்.
எடையை பராமரிக்க வாயில் உள்ள புண் உதவுகிறது என்பது மருத்துவ ரீதியாக ஒரு தவறான கருத்தாகவும் தோணலாம். ஆனால், மவுத் அல்சர் எனப்படும் வாய்ப்புண்கள் தரும் வலி, எரிச்சல் நமது அன்றாட செயல்களுக்கு பின்னடைவை தந்து நமக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
வாருங்கள் இந்த பதிவில் மவுத் அல்சர் எனப்படும் வாய், உதடு மற்றும் நாக்கில் ஏற்படும் புண்கள் பற்றி காண்போம்.
வாய் புண்கள், கேன்கர் புண்கள் (canker sores) என்றும் அழைக்கப்படுகின்றன, இவை வாய், உதடுகள் அல்லது நாக்கின் உட்புறத்தில் தோன்றக்கூடிய வலிமிகுந்த புண்கள். அனைவருக்கும் இயல்பாக வரக்கூடிய இந்த பாதிப்பிற்கு சில பொதுவான வீட்டு வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெறலாம்.
தண்ணீரை சுட வைத்து அதில் கல் உப்பு போட்டு வெதுவெதுப்பானதும் ஒரு நாளைக்கு பல முறை புண்கள் மீது உப்புத் தண்ணீர் படும் படி வாயைக் கொப்பளிக்கவும். இதனால் எரிச்சல் இருக்கும்; எனினும் உப்பு புண்ணினை ஆற்றும்.
புண் தரும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க இருக்கவே இருக்கிறது கற்றாழை. புண்ணில் மென்மையான கற்றாழை ஜெல்லை தடவி விடவும்.
புண் குணமடைவதற்கும் வலியைக் குறைக்கவும் தேன் உகந்ததாகும். அடிக்கடி புண்கள் மீது சுத்தமான தேனைத் தடவவும்.
மணத்தக்காளி கீரை வாய்புண்ணுக்கு ஏற்றது என்பதால் அதை கசக்கி புண்கள் மீது தடவலாம். அல்லது கீரையை வாயில் போட்டு சுவைக்கலாம்.
வாய்ப்புண்கள் பொதுவானவை என்பதால் மருந்து சீட்டு இன்றியும் இதற்கான மருந்துகளை வாங்க முடியும். உதாரணமாக அந்தப் பகுதியை மரத்துப் போகச் செய்ய ஒராஜெல் அல்லது அன்பெசோல் (Orajel or Anbesol) போன்ற மேற்பூச்சு மருந்துகளை வாங்கி பயன்படுத்தலாம்.
ஹைட்ரஜன் பெராக்சைடு அல்லது குளோரெக்சிடின் (hydrogen peroxide or chlorhexidine) போன்ற பொருட்களைக் கொண்ட மவுத்வாஷ்களைப் பயன்படுத்தலாம்.
கடும் வலி குறைக்க இப்யூபுரூஃபன் அல்லது அசிடமினோஃபென் (ibuprofen or acetaminophen) போன்ற வலி நிவாரணிகள் கிடைக்கும் .
ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். கடைகளில் நாமாக சென்று கிடைக்கும் மருந்துகளை வாங்குவதை விட மருத்துவ பரிசோதனை மற்றும் பரிந்துரை பேரில் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது.
இந்த வாய்ப்புண்களை தடுக்கும் வழிகள் என்ன? குறிப்பாக முறையற்ற உணவு முறைகள் மற்றும் பதட்டமான வாழ்க்கை முறை மாறவேண்டும்.
காரமான அல்லது அமிலம் சார்ந்த உணவுகள், சிப்ஸ் போன்ற கூர்மையான உணவுகள் மற்றும் தேவையற்ற மன அழுத்தம் போன்ற புண்களைத் தூண்டும் காரணிகளைத் தவிர்க்கவும்.
எப்போதும் வாய் வழி சுகாதாரத்தை பேண வேண்டும். பற்களை இரவும் பகலும் துலக்கி சுத்தம் செய்யுங்கள்.
உடலுக்கு மட்டுமல்ல வாயையும் ஈரப்பதமாக வைத்திருக்கவும் புண்கள் ஏற்படாமல் தடுக்கவும் நிறைய தண்ணீர் குடித்து நீர்ச்சத்தை பெற வேண்டியது அவசியம்.
ஆனால் புண் தொடர்ச்சியாக நீடித்தால் அல்லது அடிக்கடி ஏற்பட்டாலும், வலி கடுமையாக இருந்தால் அல்லது சாப்பிடுவதில், குடிப்பதில் ,விழுங்குவதில் வெகு சிரமத்துடன் காய்ச்சல் ஏற்பட்டாலும், வீட்டு வைத்தியம் கடை மருந்துகளை எடுக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.