
நவீன மருத்துவ முறை சிகிச்சை வழங்கும் பெரிய மருத்துவமனைகள் அனைத்திலும் தற்போது எம். ஆர். ஐ. ஸ்கேன் வசதி இருக்கிறது. எம். ஆர். ஐ .என்பது மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங் என்று பொருள். MRI - MAGNETIC RESONANCE IMAGING அதாவது காந்தப் புலத்தில் அதிர்வை உண்டாக்கி அதன் வழியாக படம் பிடித்தல் என்பதாகும்.
எம். ஆர். ஐ என்பது நவீன மருத்துவத் துறையில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்கி வருகிறது. அதன் வழியாக பல நோய்களை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சையளிக்க முடிகிறது. பல அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும் கனகச்சிதமாகவும் வெற்றிகரமாக செய்து முடிக்கவும் முடிகிறது.
எம். ஆர். ஐ. என்னும் மின்சாரம் இந்த இயந்திரத்தில் பாய்ச்சப்படும் போது, அது அதி கடத்தல் காந்தமாக உருமாற்றம் பெறுகிறது. மனித உடலில் உள்ள அனைத்து செல்களிலும் நீர் இருக்கிறது. நீர் என்பது இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறும் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இணைந்து உருவாக்கும் கூட்டணியாகும்.
எம்.ஆர்.ஐ. இயந்திரத்தின் காந்தப் புலத்துக்குள் மனித உடல் படுத்த வாக்கில் காந்த புலத்துக்கு பக்கவாட்டில் நுழையும் போது, நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குள் இருக்கும் நீர் மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் அனைத்தும் எம். ஆர் ஐ. இயந்திரத்தின் காந்தப் புலத்துடன் ஒன்றுபட்டும் வரிசைப்பட்டும் இருக்கும்.
இப்போது எம். ஆர். ஐ. இயக்குநர் ரேடியோ அலைகளை குறிப்பிட்ட இடைவெளியில் உடல் மீது பாயச் செய்வார். இவ்வாறு மின்காந்த விசை பெற்ற ரேடியோ அலைகள் ஊடுறுவும் போது, ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் இந்த அலைகள் மூலம் சக்தியைப் பெற்று தனது முந்தைய சுழலும் நிலையில் இருந்து அடுத்த சுழலும் நிலைக்கு சற்று முன்னேறிச் செல்லும். ரேடியோ அலை பாய்ச்சுவது நிறுத்தப்படும் போது, தான் உள்வாங்கிய சக்தியை வெளியிட்டு விட்டு மீண்டும் பழைய மாதிரி எம்.ஆர்.ஐ காந்தத்தின் காந்தப் புலத்துடன் ஓர்மையில் ஓரணியில் நிற்க பழைய நிலைக்குத் திரும்பும்.
இவ்வாறு பழைய நிலைக்குத் திரும்ப அந்த ப்ரோடான்கள் வெளியிட்ட சக்தியைக் கொண்டும், ஏற்கெனவே இருந்த பழைய நிலையில் அதற்கு இருந்து சக்தியையும் முன்வைத்து கணினியானது நமது உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படமாக ஆக்கி கணினித் திரையில் கொண்டு வரும். இதன் வழியாக சிறுநீரகம், கல்லீரல், குடல், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள்,தசை, ஜவ்வு, மூளை ஆகியவற்றில் உள்ள மாற்றங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது. அதில் காணும் மாற்றங்களுக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடிகிறது.
எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தம் - திரவ ஹீலியத்தால் சூழப்பட்டிருக்கும். ஹீலியம் திரவ நிலையிலேயே இருப்பதற்கு எம். ஆர். ஐ இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதை ஆஃப் செய்தாலோ அல்லது திடீரென அது ஆஃப் ஆனாலோ திரவ ஹீலியம் - வாயு நிலையை அடையும். அப்போது அந்த அறைக்குள் வாயு நிலை ஹீலியம் கசிந்து, அறைக்குள் இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும்.
எம் ஆர் ஐ அறைக்குள் இரும்பு, ஸ்டீல் உள்ளிட்ட காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய சாதனங்களுடன் நுழைவது பேராபத்தை வரவழைக்கும் செயலாகும். எம் ஆர் ஐ அறைக்குள் எவரும் அந்த அறையின் இயக்குநரின் அனுமதியின்றி நுழைதல் கூடாது. நோயாளியாக உள்ளே நுழைபவரும் கட்டாயம் தங்கள் உடலில் உலோக ஆபரணங்கள், ஹேர் க்ளிப், ஹேர் பின் உள்ளிட்ட எந்த காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருளும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்ட பின்புதான் நுழைய வேண்டும்.
மருத்துவ ரீதியாக பேஸ் மேக்கர் போன்ற உபகரணங்கள் நோயாளிக்கு பொருத்தப்பட்டிருக்குமானால் அது குறித்து முன்கூட்டியே ஸ்கேன் எடுப்பவருக்கு தெரிவிக்க வேண்டும். எம். ஆர். ஐ. ஸ்கேன் இயந்திரங்கள் இயங்கும் அறையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய அடிப்படை அறிவு நம் அனைவருக்கும் மிகவும் அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)