

நம் முன்னோர்கள் இரும்பு, மண் சட்டியைத் தான் பிரதானமாக பயன்படுத்தினார்கள். இன்னும் சிலர் செம்பு, பித்தளைப் பாத்திரங்களையும் சமைக்க பயன்படுத்தினார்கள். அரசர்களோ வெள்ளி, தங்கத்தினாலான பாத்திரங்களில் சமைத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு எவர்சில்வர், அலுமினியம் போன்றவை புழக்கத்துக்கு வந்தது. இப்பொழுதோ நான்ஸ்டிக் பாத்திரங்களும், செராமிக் (பீங்கான்) பாத்திரங்களும் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நமது பாரம்பரிய சமையல் பாத்திரங்களான மண்பாண்டம், இரும்பு மற்றும் நவீன அலுமினியப் பாத்திரங்களை ஒப்பிடும்பொழுது ஒவ்வொன்றும் ஆரோக்கியத்தில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
மண்பாண்டம்:
உணவில் உள்ள ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துகளை தக்கவைத்து மெதுவாக சமைக்கிறது. இதில் கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் இயற்கையாகவே உணவில் கலக்கின்றன. மண்பாண்டங்களில் சமைப்பதால் உணவின் சுவையும் மணமும் கூடும். முக்கியமாக மண் பாத்திரத்தில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கிறது. ஆனால் சமைக்க அதிக நேரம் எடுக்கும். மண்பாண்டங்கள் எளிதில் உடைந்து விடும் என்பதால் இவற்றைக் கையாளும் போது மிகவும் கவனம் தேவை.
மண் ஒரு காரத்தன்மை (Alkaline) கொண்டது. இது உணவில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்குகிறது. இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானப் பிரச்சனகள் வராமல் தடுக்கிறது. அத்துடன் மண்ணில் உள்ள நுண்துளைகள் வழியாக வெப்பமும் காற்றும் சமமாகப் பரவுவதால், உணவின் ஊட்டச்சத்துக்கள் 100% முழுமையாக காக்கப்படுகிறது. இதில் வெப்பம் சீராகத் தங்குவதால் மிகக் குறைந்த அளவு எண்ணையைப் பயன்படுத்தி சமைக்க முடியும்.
இரும்பு பாத்திரம்:
சீரான வெப்பத்தை வழங்குகிறது. இரும்பு பாத்திரங்களில் சமைக்கும் போது உணவில் இரும்புச்சத்து சிறிதளவு சேர்வதால், ரத்த சோகை (Anemia) ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது. உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்த சோகை சரியாகும். குறிப்பாக ரத்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
ஆனால் இதில் தக்காளி, புளி போன்ற அதிக அமிலத்தன்மைக் கொண்ட உணவுகளை நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சமைத்தவுடன் அவற்றை உடனே வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம். ஏனெனில் இது உணவின் சுவையை மாற்றி, இரும்புச்சத்தை அளவுக்கு அதிகமாக உணவில் கலந்து விடக்கூடும்.
இரும்பு பாத்திரத்தில் துவர்ப்பு மிகுந்த உணவுகளை சமைக்க கூடாது. இவற்றை சரியாக பராமரிக்காவிட்டால் துருப்பிடிக்கும் அபாயம் உண்டு.
அலுமினிய பாத்திரம்:
விலை குறைவு, வெப்பமும் வேகமாகப் பரவும், சமையலும் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால் அலுமினியம் ஒரு வேதிவினைப் புரியும் உலோகம். குறிப்பாகத் தக்காளி, புளி, எலுமிச்சை போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளைச் சமைக்கும் போது அலுமினியம் மிக எளிதாக உணவில் கரைந்து விடும். உடலில் அலுமினியம் தொடர்ந்து சேர்வது நம் உடலில் நச்சுத்தன்மையை அதிகரித்து, நரம்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் மூளை செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. எனவே அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
அப்படியே அலுமினிய பாத்திரத்தில் சமைத்தாலும் அதில் சமைத்த உணவை நீண்ட நேரம் அதில் சேமித்து வைக்கக் கூடாது. அனோடைஸ்டு அலுமினியம் (Anodized Aluminium) பாத்திரங்கள் அமிலத்துடன் வினை புரிவதில்லை என்பதால் அவை பாதுகாப்பான மாற்றாகக் கருதப்படுகின்றன.
மொத்தத்தில் மண்பாண்டத்தில் சமைப்பது மிகச் சிறந்தது. இரும்பு பாத்திரம் ஆரோக்கியமானது. ஆனால் அதில் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை சமைப்பதை தவிர்ப்பது நல்லது. அலுமினிய பாத்திரத்தை சமையலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
இயன்றவரை இயற்கை தந்த மண் பத்திரங்களில் சமைப்பது ஆரோக்கியம் நிறைந்தது.