

பெண் பிள்ளைகள் பொதுவாக 13 வயது முதல் பூப்பெய்துவது வழக்கம். தற்போது மாறி வரும் சூழல் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் இவற்றால் சில பெண்கள் எட்டு வயது தொடங்கி 10 வயதுக்குள் பூப்பெய்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் நடக்கக் கூடிய மாற்றங்களையும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒரு முக்கியமான காலகட்டத்தை எதிர்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு எந்த வகையான உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் பூப்பெய்த உடன் அரைக்கீரை விதைகளை ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம். இது கருமுட்டையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பூப்பெய்த நாளில் இருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம்.
பூ பெய்திய மூன்றாவது நாளிலிருந்து பத்து நாட்கள் வரை கருப்பு உளுந்து, ராகி, எள்ளு இவற்றுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து கொடுக்கலாம். தினமும் நாட்டுக்கோழி முட்டை, நல்லெண்ணெய் கொடுப்பது மிகவும் நல்லது. சிகப்பு அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து பொடி செய்து இதில் நல்லெண்ணெய் சேர்த்து களி செய்து கொடுக்கலாம். கருப்பு உளுந்து கருமுட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
அடுத்த 15 நாட்களுக்கு சிவப்பு அரிசி, வெந்தயம் சேர்த்து தேங்காய் பாலுடன் கொடுக்கலாம். இதன் மூலம் ஹார்மோன்ஸ் சமநிலைப்படும். உடம்பை குளிர்ச்சியாக வைக்க உதவும்.
15 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை வெந்தயக் களி கொடுக்கலாம்.
இது மாதிரியான கொழுப்பு அமில உணவுகள் கருமுட்டைகள் வளர உதவுகிறது.
ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான்.
விளையாட்டுத்தனமாக இருந்த குழந்தை முதிர்ந்த பெண்ணாக தன்னை உரு மாற்றிக் கொள்வதன் அடையாளம் தான் இந்த நிகழ்வு.
இந்த நேரங்களில் உடல் எடையை அடிக்கடி பார்த்துக் கொள்ள வேண்டும்
கார்போஹைட்ரேட் உணவுகளை அதிக அளவில் கொடுக்கக் கூடாது. இதனால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் மாதவிடாய் தள்ளிப் போவது மற்றும் தைராய்டு பிரச்சனைகள் ஏற்பட வழி வகுக்கும். உடல் பருமன் இருந்தால் ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படும்.
இதனால் கருப்பையில் நீர்கட்டிகள் உருவாகும். எனவே பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிட வேண்டும். சத்துமாவு, கருப்பு உளுந்து களி மிகவும் சிறந்த உணவு.
சத்து மாவில் காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் இவற்றை சேர்த்து கொடுக்கலாம். இதன் மூலம் எலும்புகள் வலுவடையும்
ஈஸ்ட்ரோஜன் புரோஸ்டரோஜன் ஹார்மோனுக்கு கருப்பு உளுந்து அவசியம். சாப்பிடும் உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.
நாட்டு முட்டையை மஞ்சள் கருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். பொட்டுக்கடலை நாட்டுச்சர்க்கரை உடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ சாப்பிடலாம். அசைவ உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏதேனும் ஒரு கீரை வகைகளை வாரத்துக்கு மூன்று நாட்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் சுண்டைக்காய் எடுத்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். சில பெண்களுக்கு பூப்பெய்தி அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கலாம்.
இதனால் கவலைப்பட தேவையில்லை. சத்தான உணவுகளை கொடுக்கும் போது மேற்படி பிரச்சனை சரியாகும்.
எண்ணெய் பலகாரங்கள், ஸ்னாக்ஸ் வகைகளை அளவோடுவோடு சாப்பிட வேண்டும்.
பீட்சா, பர்கர், பானி பூரி, நூடுல்ஸ் போன்றவற்றை எப்போதாவது சாப்பிடலாம். சாப்பிடும் உணவுகளில் எச்சரிக்கை அவசியம்.
இது போன்று ஆறு மாதங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
இதன் மூலம் பெண்கள் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளைத் தடுத்து, மிகவும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.