
நாவல் பழத்தில், பழம் மட்டுமின்றி விதை, இலை, வேர் மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இவ்வாறு ஒரு தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ குணங்கள் கொண்டதை இயற்கை மருத்துவத்தில் 'சமூலம்' என்பர்.
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், விட்டமின் B, C மற்றும் 'அந்தோசயினின்கள்' போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஃப்ளூ, சளி போன்ற பொதுவான நோய்த்தொற்றுகளிலிருந்தும், தீவிர நோய்களிலிருந்தும் உடலைப் பாதுகாக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், செல்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
நாவல் பழத்தின் சிறப்பு அதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்தது என்பது தான். நாவல் பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். இதனால் இது ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது.
மேலும் ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்தை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தின் கடின தன்மை மாறி இலகுவாகும். அதோடு ரத்தத்தில் கலந்துள்ள வேதிப்பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
நாவல் பழத்தில் இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகையை (அனீமியா) தடுக்க உதவுகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாதவிடாய் காலங்களில் உள்ள பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சோர்வு, பலவீனம் போன்ற இரத்த சோகையின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவல் பழத்தை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண்கள், குடல் புண்கள் குணமாகும்.
கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நாவல் பழத்தில் இருப்பதால், இது எலும்புகளை வலுப்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இது மிகவும் அவசியம்.
இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்பான LDL அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பான HDL அளவை அதிகரிக்க உதவுகின்றன. இது இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து, இதயத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும். வியர்வையை பெருக்கி சரும நோய்கள் வராமல் தடுக்கும். உடல் சூட்டைக் குறைத்து பித்தத்தை தணிக்கும்,ஞாபக சக்தியை அதிகரிக்கும். கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
நாவல் பழத்தின் சதைப் பகுதியை காய வைத்து அரைத்த பொடி அல்லது நாவல் கொட்டை பொடி சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கினை நாவல் பழங்கள் கட்டுப்படுத்தும். உடல் சூட்டினை குறைக்கும்.
வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.
நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். மெலனின் செல்களை தூண்டுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது.
இது ஒரு பருவகாலப் பழம் என்பதால், கிடைக்கும் காலத்தில் (தமிழகத்தில் பொதுவாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அதிகம் கிடைக்கும்) அதன் முழுப் பலனையும் பெற்றுக்கொள்வது மிக நல்லதும் அவசியமும் ஆகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)