தேசிய ஊட்டச்சத்து வாரம் (செப்டம்பர் 1 முதல் 7 வரை) 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "சிறந்த வாழ்க்கைக்கு சரியாக சாப்பிடுங்கள்" என்பதாகும். இது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சத்தான உணவின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்த வாரத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தில் சமச்சீர் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகும்.
தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் முக்கியத்துவம்:
1982 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் நிறுவப்பட்டது. இது நல்ல ஆரோக்கியத்திற்கு சீரான உணவை உட்கொள்வதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
சத்தான உணவு பழக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்தின் பங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு தேர்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான சிறப்பு அம்சங்கள்:
இந்த ஆண்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆரோக்கியத்தில் சமச்சீர் ஊட்டச்சத்தின் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நிபுணர்களின் கருத்துக்களும், சமையல் செயல் விளக்கங்களும் நடத்தப்படும். ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்க கட்டுரைகள் மற்றும் பேச்சுகளில் பங்கேற்பதும், பள்ளி மற்றும் அமைப்பு அளவிலான கொண்டாட்டங்களில் ஆரோக்கியமான டிபன் நாட்கள், சுவரொட்டி போட்டிகள், உரைகள், ஊட்டச்சத்து பட்டறைகள் மற்றும் செய்முறை விளக்கங்கள் போன்ற செயல்பாடுகள் அடங்கும். அத்துடன் உணவு பழக்கங்களை மேம்படுத்துவதற்கான குறிப்புகளையும் பின்பற்றலாம்.
தொழில்நுட்ப ரீதியாக. பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய கவர்ச்சிகரமான சமூக ஊடகப் பிரச்சாரங்களுடன் இணைந்த மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும். முழுமையான பங்கேற்பையும், நீடித்த தாக்கத்தையும் உறுதி செய்வதற்கு உள்ளூர் தொழில்களுடன் கூட்டாண்மைகளுடன் இணைந்து சமையல் செயல் விளக்கங்கள், பேரணிகள், ஊட்டச்சத்து கண்காட்சிகள் மூலம் சமூக அடிப்படையிலான நடவடிக்கைகள் நடத்தப்படும்.
ஆரோக்கியமான உணவுக்கான 5 முக்கிய குறிப்புகள்:
ஆரோக்கியமான உணவு என்பது அனைத்து ஊட்டச்சத்துகள் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவை உட்கொள்வதாகும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் சரியான அளவில் இருக்க வேண்டும். குப்பை உணவுகளை தவிர்த்து, பருவகால உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவும்.
முழு தானியங்களான அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் தானியங்கள் போன்ற மாவுச் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது.
புதிய பழங்கள் மற்றும் உலர்ந்த பழ வகைகள் எடுத்துக் கொள்வது. உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம் மற்றும் புதிய பழங்கள் அல்லது அவற்றின் சாறுகளை (ஜூஸ்) எடுத்துக் கொள்வது அவசியம்.
புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது. பருப்பு வகைகள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எண்ணெய், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்வது.
கேக்குகள், உப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெண்ணெய் போன்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டியது அவசியம்.
காலை உணவை ஒருபோதும் தவிர்க்காமல் இருப்பதும், போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதும் அவசியம்.
ஆரோக்கியம் நிறைந்த இயற்கை உணவுகள்:
மஞ்சள் எனும் குர்குமின் நிறைந்த, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் சிறந்த மசாலா பொருள்.
தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமான பருப்பு வகைகள் இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளது. இவை செரிமானத்தையும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
கீரை வகைகள் குறைந்த கலோரி, நிறைந்த ஊட்டச்சத்து கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும், எலும்புகளை பலப்படுத்தும்.
நார்ச்சத்து மிகுந்த முழு தானியங்கள், பாதாம், அக்ரூட் போன்ற கொட்டை வகைகள், முழு ஆரோக்கிய உணவான தேங்காய், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகம் உள்ள கொண்டைக்கடலை, வெந்தய விதைகள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் விட்டமின் சி நிறைந்த நெல்லிக்கனிகள் போன்றவை வலுவான ஆக்சிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளன.
குடல் ஆரோக்கியத்திற்கு புரோபயாடிக் நிறைந்த தயிர் செரிமானத்தை எளிதாக்குவதுடன் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. இதில் கால்சியம் புரதம் போன்றவை அதிகம் உள்ளன.
இப்படி சத்துமிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)