

தற்போது ஸ்கின் டி டாக்ஸ், லிவர் டீடாக்ஸ் டிரிங்ஸ் என பல்வேறு பானங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால் நம்முடைய உடல் தானே உடலை சுத்தம் செய்து கொள்ளும். அடிப்படையிலேயே நமது உடலில் இருக்கும் உறுப்புகளான குடல், சிறுநீரகம், கல்லீரல், தோல் ஆகியவை கழிவுகளை சுத்திகரித்து (Detoxing) வெளியேற்றும் வேலையை செய்கின்றன. அந்த வகையில் நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. நிறைய தண்ணீர் குடிப்பது
தினந்தோறும் நிறைய தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொண்டால், உடல் இயற்கையாகவே சுத்தம் செய்து டி டாக்ஸ் செய்யும் வழிமுறைகளில் முதன்மையானது ஆகும். நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமத்துக்கும், சிறுநீரகங்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, இதனால் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளும் சிறுநீர் கழிவுகளும் முறையாக வெளியேறி உடல் தானாகவே சுத்தமடையும்.
2. ஜங்க் உணவை தவிர்த்தல்
உடலில் தேவையற்ற கழிவுகள் அதிகமாக சேராமல் இருப்பதற்கு ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். இல்லையெனில் தேவையில்லாமல் உடலின் உள்ளுறுப்புகளின் வேலையை அதிகரிப்பதோடு, அதிக அழுத்தத்தை கொடுத்து கழிவுகள் வெளியேறுவதை துரித உணவுகள் தடுத்துவிடும். வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடலுக்கு நன்மை பயப்பதோடு, நல்ல பாக்டீரியாக்கள் குடலில் இருப்பதை அதிகரிக்கும்.
3. உடற்பயிற்சி செய்தல்
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால், கல்லீரலில் மேல் பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்புகள் அதாவது கொழுப்பு கல்லீரல் கரைந்து விடும் என்பதால் உடலை டீ டாக்ஸ் செய்வதற்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமாகும் . இதனால் கல்லீரலின் செயல்பாடு இயற்கையாகவே அதிகரித்து அதன் வேலைகளை சீராக செய்வதோடு கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்றும் என்பதால் உடற்பயிற்சி செய்வதை மறக்க வேண்டாம்.
4. பிராணாயாமம்
பிரணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியை தினமும் காலையில் எழுந்ததும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இயற்கையான காற்றில் அமர்ந்து செய்வதால் நுரையீரலில் உள்ள மாசுக்கள் வெளியேறி உடல் டீடாக்ஸ் ஆகிறது. இதனால் நுரையீரல் பலமடைந்து சுவாசத்தையும் மேம்படுத்துகிறது.
மேற்கூறிய பழக்கவழக்கங்களை கடைபிடித்தாலே உடலில் உள்ள கழிவுகளை தானாகவே அது வெளியேற்றி உடல் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் என்பதால் இதற்காக எந்த ஒரு டீடாக்ஸ் பானங்களையும் பருகத் தேவையில்லை என்பது தான் மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)