

அதிக சிரமமின்றி, செலவுமின்றி, ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொண்டு, மரணத்தைத் தள்ளிப் போட உதவும் ஒரு அற்புதமான வழி தான் 'வாக்கிங்' எனும் நடைப்பயிற்சி. காலையிலோ, மாலையிலோ, மெதுவாகவோ, வேகமாகவோ, தினமுமோ, வாரம் நான்கு முறை நடைப்பயிற்சி சென்று வருகின்றவர்கள் மரணத்தை தள்ளி போட முடியும் என்கிறார்கள் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்.
உரிய அளவில், உரிய முறையில் தினமும் நடந்தால் பக்கவாதம் வருவதை, இதய நோய் வருவதை தவிர்க்க முடியும். இரவில் தூக்கம் வராமல் தவிப்பதை நிறுத்த முடியும் என்கிறார்கள்.
மணிக்கு 3 கிமீ வேகத்தில் மெதுவாகவும், ரிலாக்ஸாகவும் நடந்தாலே உடல் பருமனை குறைக்கலாம் என்கிறது கொலராடோ பல்கலைக்கழக ஆய்வு. வயது முதிர்ந்தவர்கள், நடக்கும் திறனை வைத்தே அவர்களது நோய்வாய்ப்பட்டுள்ள நிலைமைகளை கணித்து விடலாம். அவர்களின் மரணம் எப்போது என்பதை கூட கணித்து விட முடியும் என்கிறார்கள்!
சமமற்ற தளங்களில் நடக்கும் போது, அக்யூபிரஷரினால் பாதங்களில் சில பகுதிகளில் ஏற்படும் அழுத்தம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது என்கிறார்கள். வாக்கிங் போவதால் ஆக்ஸிஜன் சப்ளை அதிகரிக்கிறது, மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரித்து துடிப்புடனும், திறனுடனும் உழைக்க வழிவகை செய்கிறது. அதனால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு நடையே அவர்களின் ஆரோக்கியம் காக்கும் மருந்து என்கிறார்கள் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் தங்களது மரணத்தை தள்ளிப் போடுகிறார்கள் என்கிறார்கள்.
அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்களின் மூளையின் ஆக்கப்பூர்வமான சிந்தனை திறனை 60 சதவீதம் அதிகரிக்கிறது என்கிறார்கள் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பரிணாமக் கொள்கை கண்ட சார்லஸ் டார்வின், எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், இசை மேதை பீதேவன், தத்துவ மேதை நீட்சே போன்றவர்கள் தங்களது படைப்புகளை நடந்து கொண்டே சிந்திப்பார்களாம். ஆப்பிள் கம்ப்யூட்டர் ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூகர் பெர்க் போன்ற தொழில் ஜாம்பவான்கள் தங்களது மீட்டிங்களை நடந்து கொண்டே போடுவார்களாம்.
ஒருவர் மதியம் அல்லது மாலையில் முழு உணவை சாப்பிட்ட பிறகு பத்து நிமிடங்கள் நடந்தால், சர்க்கரை மெதுவாக இரத்தத்தில் வெளியேறும். இதன் விளைவாக, திடீரென சர்க்கரை அதிகரிக்கும் என்ற பயம் இல்லை. ஆனால் அதுமட்டுமல்ல. சாப்பிட்ட பிறகு நடப்பதால் பல நன்மைகள் உள்ளன. அதிக உணவை சாப்பிட்ட பிறகு படுத்துக் கொண்டால், அஜீரணம் ஏற்படும் அபாயம் உள்ளது. மாறாக, நீங்கள் நடந்தால், உங்கள் செரிமானம் அதிகரிக்கும். இதனுடன், அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படும் அபாயமும் குறையும்.
நடைபயிற்சி உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும் உடற்பயிற்சி சிறப்பு பங்கு வகிக்கிறது. திறந்த வெளியில் சிறிது நேரம் நடப்பது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் சுரப்பைக் குறைக்கிறது. சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் நடப்பது குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தருகிறது. நீரிழிவு நோய், வாயு, நெஞ்செரிச்சல் பிரச்சினைகள் இருந்தால், சாப்பிட்ட பிறகு நடப்பது நல்லது. சரியாக பசிக்காதவர்கள் மற்றும் கொழுப்பைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். முடிந்தால் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் இரண்டு முறை ஒரு சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
50க்கும் மேற்பட்ட வயதுடையவர்கள், தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் புத்துணர்வுடன் நடப்பது மிக மிக நல்லது. இதன்மூலம் உடலின் வளர்சிதை மாற்றங்கள் மேம்படுவதுடன், மூட்டுப்பிரச்னைகள் பெருமளவில் தடுக்கப்படும். இவ்வயதுடையவர்கள் நேரடியாக நடை போட தொடங்காமல் தினமும் வார்ம்-அப் செய்துவிட்டு பயிற்சியை தொடங்குவது அவசியம். இல்லாத பட்சத்தில், தசைப்பிடிப்பு மற்றும் காயங்கள் போன்றவை ஏற்படக்கூடும்.
நடைப்பயிற்சி செய்யும் போது நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவாறு, தரையை பார்க்காமல் இருபது அடி முன்னோக்கியவாறு நடங்கள். நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும், கைகளைத் தளர்வாகவும் வைத்திருங்கள்.
கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்ந்தவாறு நடங்கள். ஒரே நேர்கோட்டில் நடப்பதை உறுதி செய்யுங்கள்.
நடக்கும் போது இயல்பாக சுவாசியுங்கள். அப்போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து ஆக்ஸிஜனை அதிகமான அளவில் உட்செலுத்திக் கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிரைக்கும் அளவுக்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.