உடலின் செல்களைப் புதுப்பிக்கவும், ஹார்மோன் சுரப்பை சுரக்கச் செய்யவும் கொழுப்புச் சத்துக்களின் தேவை அவசியமாகிறது. இதற்காக நாம் உண்ணும் உணவு மூலம் பெறப்படும் கொழுப்பின் அளவு தேவைக்கு மேல் அதிகமாகும்போது, அவை இரத்த நாளங்களில் படிந்து ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களை உருவாக்கும் வாய்ப்பு உண்டாகிறது. உடலில் படியும் அதிகப்படி கொழுப்பு மற்றும் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பையும் மருத்துவ உதவியின்றி கரைக்க, உண்ணவேண்டிய இயற்கை உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பூண்டு: கெட்ட கொழுப்பையும் ட்ரெய்க்ளிசெரைட்களையும் குறைக்கும். இதிலுள்ள அல்லிஸின் என்ற பொருள் வீக்கத்தை குறைக்கக் கூடியது.
மஞ்சள்: இதிலுள்ள குர்குமின் என்ற பொருள் வீக்கத்தை வற்றச் செய்து கெட்ட கொழுப்பையும் குறைக்கக் கூடியது.
பட்டை: டைப்-2 வகை டயாபெட் நோயாளிகளின் கெட்ட கொழுப்பையும் ட்ரெய்க்ளிசெரைட்களையும் படிப்படியாகக் குறைக்கும்.
இஞ்சி: சுமாரான அளவு கெட்ட கொழுப்பை குறைக்கும்.
வெந்தயம்: இதிலுள்ள கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்து இரத்தத்தால் உறிஞ்சப்படும் அதிகப்படியான கொழுப்பை குறைப்பதுடன் கெட்ட கொழுப்பையும் குறைக்கிறது.
க்ரீன் டீ: இதிலுள்ள கேடாசின் என்னும் பொருள் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும் தன்மையுடையது.
ஹாதார்ன்: பெர்ரி வகையை சார்ந்த இந்தப் பழம் இதயத்தின் ஆரோக்கியதிற்காகவும் கொழுப்பின் அளவை சமன்படுத்தவும் தயாரிக்கபடும் மருந்துகளில் உபயோகிக்கப்படுகிறது.
கொத்தமல்லி விதைகள்: இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்தும் ஆன்டி ஆக்சிடன்ட்களும் கெட்ட கொழுப்பை குறைக்கின்றன.
பிஸ்தா, பாதாம், வால்நட் போன்ற கொட்டைகள் உடலுக்கு நல்ல கொழுப்பை அளிப்பவை. ஓட்ஸில் பீட்டா-க்ளூகன் என்ற ஒரு வகை கரையும் நார்ச்சத்து உள்ளதால், இது உண்ண ஏற்ற உணவு. ஆரஞ்சு, ஆப்பிள், பெர்ரி, வாழைப்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் உள்ளதால் அவையும் உண்பதற்கு ஏற்றவை. சோயா, டார்க் சாக்லேட், சன்னா போன்ற பருப்பு வகை ஆகியவற்றில் புரோட்டீன், நார்ச்சத்துகள் அடங்கியுள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிகப்படியான கொழுப்பை கட்டுக்குள் கொண்டு வர மேற்கூறிய உணவுகளை உண்பதுடன், நார்மல் உடற்பயிற்சியும் தேவை. குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரை கலந்தாலோசித்து தேவையான பரிசோதனைகளை எடுத்துக்கொள்வதும் உடலுக்கு நலம் பயக்கும்.