

நம் உடலின் ஆரோக்கியம் கெட்டுப்போக பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று நாள்ப்பட்ட மலச்சிக்கல். மலச் சிக்கல் நீங்க, மார்க்கெட்களில் பல வகையான மருந்து மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைப்பதுண்டு. இருந்தபோதும், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் மலச்சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளாக என்னென்ன கூறுகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.
நார்ச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்ளுதல், தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, கஷ்டப்பட்டு மலம் கழிப்பது போன்ற பழக்கங்கள், தொடர்ந்து மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகச் செய்யும் காரணிகளாகின்றன. மலச் சிக்கலுக்கு முறையான சிகிச்சை எடுக்காதிருந்தால் மூல நோய், மலக்குடல் இறக்கம் மற்றும் மலக்கட்டு போன்ற கோளாறுகள் உடலில் உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். இவற்றிற்கு நிவாரணமளிக்க, பிரிட்டிஷ் டயடெட்டிக் அஸோஸியேஷனை (BDA) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கிவி ஃபுரூட், ரை பிரட் (Rye bread) மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்த மினரல் வாட்டர் ஆகியவைகளை பரிந்துரை செய்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 2-3 கிவி பழங்கள் என்ற கணக்கில் நான்கு வாரங்கள் தொடர்ந்து உட்கொள்ளும்போது, அப்பழங்களிலுள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆக்டினிடின் (Actinidin) என்ற என்ஸைம் ஆகிய இரண்டும் இணைந்து, வயிறு மற்றும் சிறுகுடல் வழிசெல்லும் ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை சிறந்த முறையில் ஜீரணிக்க உதவி புரிகின்றன.
மேலும், ஒரு நாளில் 0.5 - 1.5 லிட்டர், அதிகளவு கனிமச் சத்துக்கள் நிறைந்த மினரல் வாட்டர் குடிப்பதும் மலச் சிக்கல் நீங்க உதவி புரியுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நீரில் கலந்திருக்கும் மக்னீசியம் மற்றும் சல்ஃபேட் போன்றவை, தண்ணீரை சிறுகுடலுக்குள் நிறைய இழுத்து, மலத்தை இளகச் செய்து சுலபமாக வெளியேற உதவுகின்றன.
ரை பிரட் ஸ்லைஸ்களை ஒரு நாளில் 6-8 வீதம் மூன்று வாரங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. இது பலருக்கு இயலாத ஒன்று என்பதால், கிவி பழம் (kiwi fruit benefits) உண்பதே, இயற்கை முறையில் மலச் சிக்கலுக்கு தீர்வு காண சிறப்பான சிகிச்சை முறை என தெரிகிறது.