உடல் முழுவதும் வியர்க்குருவால் அவதியா? தீர்வுகள் இதோ...

summer and natural remedies
natural remedies for summer prickly heat
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வெயில் காலம் வந்தாச்சு! சிலருக்கு உடல் முழுவதும் அள்ளிக் கொட்டியது போல் வியர்க்குரு வந்துவிடும். காட்டன் துணிகளை அணிந்தாலும் அரிப்பு மற்றும் எரிச்சல் அடங்காது. எனவே, கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கான சில தீர்வுகள் (natural remedies for summer) இதோ:

1. சீசனல் பழங்கள்

இந்தக் காலத்தில் கிடைக்கும் பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம். இளநீர் விலை அதிகம் என்று கவலைப்படுபவர்கள் தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை உடலின் நீர் இழப்பைச் சரி செய்வதுடன், வியர்க்குருவைப் போக்கவும் உதவும்.

2. குளிர்ச்சி தரும் நுங்கு

பனை நுங்கு வெயிலுக்கேற்ற சிறந்த உணவாகும். நுங்கிற்குள் இருக்கும் நீரை எடுத்து வியர்க்குருவில் தடவி வர, அது மெல்ல மறையும். மேலும், நுங்கைப் பொடியாக நறுக்கித் தயிர் சேர்த்து 'ராய்தா' போலவும் சாப்பிடலாம்.

3. வெட்டிவேர் அல்லது சந்தனம்

சந்தனத்தை உடல் முழுவதும் தடவிக் குளிக்கலாம். அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் பொடியைத் தேய்த்துக் குளிக்கலாம். சந்தனம் அல்லது வெட்டிவேர் பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து தேய்த்துக் குளித்தால், கிருமித் தொற்றால் ஏற்படும் அரிப்பு நீங்குவதுடன் வியர்க்குருவும் குணமாகும்.

4. ஐஸ்கட்டி ஒத்தடம்

அதிக அளவு தண்ணீர் குடிப்பதுடன், வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அதிகமாக வியர்க்கும்போது, ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி வியர்க்குரு உள்ள பகுதிகளில் ஒத்தி எடுத்தால் எரிச்சல் மற்றும் அரிப்பு குறையும்.

5. எண்ணெய் குளியல் மற்றும் அருகன் தைலம்

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'அருகன் தைலம்' (அருகம்புல் தைலம்) தேய்த்துக் குளிப்பது சிறந்தது. இது வெயிலால் ஏற்படும் முடி உதிர்தல், பொடுகு மற்றும் அரிப்பிற்குச் சிறந்த தீர்வாகும்.

குறிப்பாக, நல்லெண்ணெயைச் சிறிது சூடாக்கி அதில் மஞ்சள் தூள் மற்றும் ஒரு நசுக்கிய பூண்டு சேர்த்து, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் உடல் சூடு தணிந்து, மன அழுத்தம் குறைந்து சருமம் பொலிவாகும்.

6. பருப்பு மற்றும் காய் வகைகள்

பொரித்த உணவுகளைத் தவிர்த்து, குளிர்ச்சி தரக்கூடிய பாசிப்பருப்பு, வெந்தயம் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்களைச் சாப்பிடலாம். வெள்ளை பூசணி, சுரைக்காய், வெந்தயக்கீரை, புடலங்காய், பீர்க்கங்காய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

7. நீர்மோர் மற்றும் பானகம்

உடல் வெப்பத்தை உடனடியாகக் குறைக்கச் சீரகம், கொத்தமல்லி, உப்பு சேர்த்த மோர் மிகவும் சிறந்தது. அதேபோல், வெல்லத்தை நீரில் கரைத்து எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் பொடி கலந்து 'பானகம்' செய்து பருகினால் தொண்டைக்கு இதமாகவும், வெயிலுக்கு ஏற்ற பானமாகவும் இருக்கும்.

8. தளர்வான ஆடைகள்

இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். லினன் மற்றும் வெளிர் நிற ஆடைகள் (மஞ்சள், வெள்ளை, லாவெண்டர்) சூரிய ஒளியைப் பிரதிபலித்து வெப்பத்தைக் குறைக்கும். அடர் நிறங்கள் மற்றும் செயற்கை இழை (Synthetic) ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கு இதமான இளநீர்: இரவு நேரத்தில் பருகுவது okva?
summer and natural remedies

9. கற்றாழை ஜெல் (Aloe Vera)

கற்றாழை ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் ஜெல் பகுதியை எடுத்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com