

பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கும் இயற்கை பானம் எதுவென்றால் அது இளநீர் தான். அந்த வகையில் இளநீர் பலராலும் ஒரு அற்புத பானமாகக் கருதப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட காரணம் என்னவென்றால் இதில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் இளநீர் வியாபாரம் இந்தியாவில் அமோகமாகவே நடக்கும்.
கோடை வெப்பத்தைச் சமாளிக்க இது சிறந்த பானங்களில் ஒன்றாகும். மேலும் உடனடி ஆற்றலைத் தரும் ஒரு சக்திவாய்ந்த இயற்கை பானமாகவும் இது விளங்குகிறது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், பொட்டாசியம் போன்ற இயற்கை நொதிகள் மற்றும் தாதுக்களும் இருப்பதால், இது ஒரு மிகச்சிறந்த பானமாக விளங்குகிறது. இளநீரை நாளின் எந்த நேரத்திலும் பருகுவது நல்லது என்றாலும், அதைச் சரியான நேரத்தில் பருகுவது நீங்கள் பெறக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை நிச்சயமாக இரட்டிப்பாக்கும்.
அந்த வகையில் உடலுக்கு பல வழிகளில் நன்மை தரக்கூடிய இளநீரை இரவு நேரத்தில் அருந்தலாமா என்ற கேள்வி சிலருக்கு உண்டு. அதற்கான விடையை இப்போது பார்க்கலாம்.
கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தை தணிக்க இளநீர் சிறந்த தேர்வாக அமையும். இது உடல் வெப்பமடைவதை தடுத்து நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்.
அதேபோல் இரவு நேரங்களில் இளநீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக இருக்கும். குறிப்பாக பருவகால நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும். இளநீரில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்களும் அடங்கியுள்ளதால், கூந்தல் மற்றும் சருமத்திற்கும் வலுசேர்க்கும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன்பு இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும், நீரிழப்பை தடுக்கும்.
இளநீர் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்ததுள்ளது.
இளநீர் குடிப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது உடலில் இருக்கும் தொற்றுக்கிருமிகளை வெளியேற்ற உதவும். சிறுநீர் பாதை நோய்தொற்றுகளை தடுக்கவும் இளநீர் துணை புரியும்.
இளநீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் குடிப்பதால் அதன் ஆரோக்கிய நன்மைகள் இரட்டிப்பாகும். உணவுக்கு முன்பும், பின்பும் தூங்குவதற்கு முன்பும், உடற்பயிற்சிக்கு பின்பும் இளநீர் குடிப்பது உடலுக்கு நல்லது. இதனால் செரிமானம் மேம்பட்டு, உடல் நீரேற்றமாக இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கும். இதய துடிப்பை குறைத்து மனதை அமைதிப்படுத்தும்.
இதில் உள்ள நொதிகள் செரிமானத்திற்கு உதவுவதோடு, இரவு உணவிற்குப் பிறகு வயிற்றை இதமாக்கும். இது பொதுவாக குறைந்த கலோரி கொண்ட, உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கும் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும். இது செரிமானத்திற்கு உதவுகிறது. இது எலக்ட்ரோலைட்டுகள், குறிப்பாக மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் சிறந்த உறக்கத்தின் தரத்தை ஆதரிக்கிறது என்பதற்கு சில அனுபவப்பூர்வமான சான்றுகளும் உள்ளன. இருப்பினும், இது ஒரு இயற்கையான சிறுநீர்ப்பெருக்கியாகச் செயல்படுவதால், உறங்குவதற்கு முன்பு அதிக அளவில் அருந்தினால், அடிக்கடி கழிவறைக்குச் செல்ல நேரிடலாம்.
பொதுவாக ஆரோக்கியமான மனிதர்கள் இரவில் இளநீர் குடிக்கலாம், ஆனால் தூக்கம் தடைபடுவதைத் தவிர்க்க, படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது 1-2 மணி நேரத்திற்கு முன்பாவது அதிக அளவில் அருந்தாமல், மிதமான அளவில் குடிப்பது சிறந்தது.
இரவில் இளநீர் குடிப்பது என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றல்ல. கபம் அல்லது வாதம் மேலோங்கிய உடலமைப்பு கொண்டவர்களுக்கு, குறிப்பாக தவறான நேரத்தில்(இரவு) உட்கொண்டால், அது வயிற்று உப்புசம் அல்லது மந்தத்தன்மையைக் கூட ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மறக்க வேண்டாம்.
அதேபோல் சிறுநீரகப் பிரச்னை (Kidney diseases), சர்க்கரை நோய் (Diabetes), அதிக இரத்த அழுத்தம் மற்றும் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு (Nocturia) உள்ளவர்கள் இரவில் இளநீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
பொதுவாக ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் இளநீர் குடிப்பது போதுமானது. இருப்பினும் சர்க்கரை நோய் அல்லது குறிப்பிட்ட உடல்நலப்பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இளநீர் குடிப்பது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)