இன்றைய காலகட்டத்தில் சிறு வயதிலிருந்தே பற்கள் ஆட்டம் காண்பதுவும், சொத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகள் பற்களில் குடியிருப்பதும், பல் கூச்சம் அதிகமாகவும் காணப்படுகிறது. நம் முன்னோர்கள் பற்களை நன்றாகப் பராமரித்து நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அவர்கள் தினசரி பல் துலக்கப் பயன்படுத்திய சில வகை மூலிகை பச்சைக் குச்சிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற பழமொழியும், ‘ஆலப்போல், வேலப்போல், ஆலம் விழுதைப்போல்’ என்ற கவிஞர் வாலியின் வரிகளும், ஆலும், வேலும் மற்றும் கருவேல மரக்குச்சியின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.
2. ‘வேலுக்குப் பல்லிறுகும், வேம்புக்கு பல் துலங்கும், நாயுருவி கண்டால் வசீகரமாய் காண்' எனும் பதார்த்த குண சிந்தாமணி பாடல், வேலமரக் குச்சிகளில் பல் துலக்க பற்கள் உறுதியாகிக் கல்லுக்கு நிகராகத் திடமாகும் எனவும், வேப்பங்குச்சிகளில் பல் துலக்க பற்கள் தூய்மையாகும் எனவும், பச்சை நாயுருவி வேரால் பல் அழுக்குகள் நீங்கி பற்கள் அழகாகும் என்றும் வலியுறுத்துகிறது.
3. பல் துலக்குவதற்கு இந்த குச்சிகளைத் தவிர மா, தேக்கு, மருது, நாவல், விளா, நொச்சி, புங்கைமரக் குச்சிகளைப் பயன்படுத்தலாம். என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
குச்சிகளின் சுவையும் பலனும்: துவர்ப்பு சுவையுள்ள குச்சிகளால், ஈறுகளில் ஏற்படும் புண்கள், ஈறுகளில் இருந்து இரத்தம் வடிதல் போன்றவை குணமடைந்து, ஈறுகள் பலமடையும், பற்களும் பிரகாசமாக காட்சி அளிக்கும். கசப்பு சுவையுள்ள குச்சிகளால் பற்களில் குடியேறியுள்ள கிருமிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு பற்கள் ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் இருக்கும்.
பயன்படுத்தும் முறை: பசுமையான மரங்களிலிருந்து பூச்சி அரிக்காத நல்ல குச்சிகளை தேர்ந்தெடுத்து அவற்றை நீரால் கழுவி ஒரு பக்க நுனியை கடித்து ‘பிரஷ்' போல மாற்றிக் கொண்டு பல் துலக்க வேண்டும். ஓரிடத்தில் நிலையாக இருந்து கொண்டு பல் இடுக்குகளிலும், ஈறுகளிலும், குச்சியின் நுனியைக் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
வேப்பங் கொழுந்தால் ஈறுகளை மிருதுவாக தடவலாம். திரிபலா சூரணத்தால் வாய்கொப்பளிக்கலாம். அத்துடன் வைட்டமின் ‘சி' சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த கீரைகள், பால் பொருட்களை உட்கொள்வதால் பற்கள் பலமடையும்.
இயற்கை பற்பொடிகள்:
1. சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு, ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம்.
2. லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்து பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும்.
3. திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல்கூச்சம் நீங்கும். பற்களில் நோய் கிருமிகள் அண்டாது. கடுக்காய் பொடியால் பல் துலக்க ஈறுவலி, புண், ஈறிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும்.
பல் வலிக்கு எளிய இயற்கை மருந்துகள்: கொய்யா இலைகளை வாயிலிட்டு மென்று சாப்பிடலாம். சுக்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கி பற்களில் கடித்து சாப்பிடலாம். பழுத்த கத்தரிக்காயை பல இடங்களில் ஊசியால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி பல் வலிக்குக் கொடுக்கலாம்.
மேலும், தினமும் நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்து வந்தால் பற்களின் நலனுடன் சேர்ந்து உடல் நலனும் சிறப்படையும். ஆலம்பாலில் வாய்கொப்பளிக்க அசைகின்ற பல்லும் இறுகும் என்பதை ‘ஆலம்பால் மேக மறுத்தசையும் பல்லிறுகும்’ எனும் அகத்தியர் குணவாகடப் பாடல் உணர்த்துகிறது. ஓமநீரால் வாய்கொப்பளிக்க பற்களில் உள்ள கிருமிகள் மடியும்.
பயன்படுத்தக் கூடாதவை: செங்கல் தூள், மண், கரி, சாம்பல் போன்றவற்றை பல் துலக்கப் பயன்படுத்தாதீர்கள். அதற்கு மாறாக, அவ்வப்போது இயற்கையின் செல்வங்களான குச்சிகளையும், பற்பொடிகளையும் பயன்படுத்த முயற்சிப்போம்.