

தற்போதைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் கழுத்து வலி மற்றும் தலையின் பின்புறவலி (neck pain and high blood pressure) ஆகியவற்றை அனுபவித்து வருகின்றனர். இந்த வலிகள் பெரும்பாலும் நாம் அவற்றிற்கு கொடுக்கும் அதிக வேலைப்பளுவால் ஏற்படுகின்றன, என்று நினைத்திருப்போம். சில நேரங்களில் இந்த வலி தூக்கமின்மை, சோர்வு ஆகிய காரணங்களினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த வலியை தொடர்ச்சியாக உணர்ந்தாலோ, தினசரி அதை அனுபவித்தாலோ அதை சாதாரணமாக கருதி புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தான செயலாகும். இந்த வலி திடீரென்று உருவாகலாம் அல்லது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வரலாம். பலரும் இதை எலும்பு தேய்மானம் அல்லது தசை பிடிப்பு காரணமாக ஏற்படுகிறது என்று கூட நினைக்கிறார்கள். இதன் உண்மையான தீவிரத்தை பலரும் அறிவது இல்லை.
தலைவலி மற்றும் கழுத்து வலி ஆகியவை மற்ற சில காரணங்களாலும் ஏற்படலாம். குறிப்பாக உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். இந்த வலி எப்போது இயல்பானது? எப்போது இதற்கு எச்சரிக்கை தேவை? என்பதை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டாலோ, தொடர்ச்சியாக அதை அனுபவித்தாலோ, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இது போன்ற தருணங்களில் மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பெயரில் சில சோதனைகளை செய்து கொள்ளலாம்.
இரத்த அழுத்தம் இயல்பு நிலையை விட அதிகமாகும் பொழுது ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக அது தலையின் பின்புறம் மற்றும் கழுத்து வலியை ஏற்படுத்துகிறது. இந்த வலி பெரும்பாலும் படிப்படியாக உருவாகி நீண்ட நேரம் நீடிக்கும்.
இந்த வலியை சிலர் காலை நேரங்களிலோ அல்லது மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரங்களிலோ, அனுபவிக்கிறார்கள்.
அடிக்கடி வரும் தலைச்சுற்றல், சோர்வு அல்லது விரைவான இதயத் துடிப்பு ஆகிய அறிகுறிகளுடன் இந்த வலி இருந்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சரியான பராமரிப்பு எதிர்காலத்தில் நிகழ இருக்கும் பெரிய அபாயத்தில் இருந்து காப்பாற்றலாம்.
இது தவிர வேறு சில அறிகுறிகளையும் உயர் ரத்த அழுத்தத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம். இதில் படபடப்பு, சோர்வு மற்றும் மங்கலான பார்வை ஆகியவை அடங்கும். நீண்டகால உயர் இரத்த அழுத்தம் ஒருவரின் நினைவாற்றலை கூட பாதிக்கும். சில சமயங்களில் மங்கலான பார்வை அல்லது பிரகாசமான வெளிச்சத்தில் பார்ப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், கடுமையான உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கலாம்.
இந்த வலிகளில் இருந்து மீளுதல் எவ்வாறு?
• வாரம் இருமுறை உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்த்துக் கொள்ளவும். அவை மருத்துவர்கள் பரிந்துரைத்த சராசரி அளவில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்யவும்.
• தினசரி உணவில் குறைந்த அளவு உப்பினை பயன்படுத்துங்கள்.
• அதிக எண்ணெய் கொண்ட பலகாரங்களை தவிர்த்து விடுங்கள்.
•மன அழுத்தத்தைக் குறைக்க யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.
•போதுமான அளவில் தூங்கவும்.
•தினமும் உடற்பயிற்சி செய்யவும்.
• வலி தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)