

இன்றைய நவீன உலகில், "தூங்கா நகரம்" என்ற வார்த்தை நகரங்களுக்குப் பொருந்துதோ இல்லையோ, ஐடி (IT), பிபிஓ (BPO), மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பலருக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். உலகம் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கணினித் திரைக்கு முன்னால் கண் விழித்து வேலை பார்க்கும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
"நைட் ஷிப்ட் போனா அலவன்ஸ் அதிகம், டிராஃபிக் இருக்காது" என்று பல காரணங்களைச் சொல்லி நாம் இந்த வேலையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், இயற்கை விதிகளுக்கு மாறாக, இரவில் விழித்திருப்பதால் நம் உடல் என்னென்ன பாடுபடுகிறது தெரியுமா?
இயற்கையை மீறும் செயல்!
மனித உடல் என்பது பகலில் உழைக்கவும், இரவில் ஓய்வெடுக்கவும் படைக்கப்பட்டது. இதற்கு 'பயாலஜிக்கல் கிளாக்' (Biological Clock) என்று பெயர். நாம் எப்போதெல்லாம் இரவில் விழித்திருந்து வேலை பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் இந்த இயற்கைக் கடிகாரம் குழம்பிப் போகிறது. இதனால் உடலில் ஹார்மோன் சுரப்பதில் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. இதுவே அனைத்து நோய்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக அமைகிறது.
தூக்கமின்மையும், உடல் பருமனும்!
இரவில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆழ்ந்த, தொடர்ச்சியான தூக்கம் கிடைப்பது குதிரைக் கொம்புதான். பகலில் தூங்கினாலும், அது இரவுத் தூக்கத்திற்கு ஈடாகாது. இப்படித் தூக்கம் கெடுவதால், உடலில் பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்யத் தொடங்கும். இதனால், தேவையில்லாத நேரத்தில் பசி எடுக்கும். விளைவு? கண்டதையும் சாப்பிடுவோம்.
ஆனால், இரவு நேரத்தில் நமது செரிமான மண்டலம் மிகவும் மந்தமாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் சாப்பிடும் உணவை உடலால் எரிக்க முடியாது. எரிக்கப்படாத அந்தச் சக்தி, அப்படியே கொழுப்பாக மாறித் தொப்பையை உண்டாக்கும். பகலில் வேலை செய்பவர்களை விட, இரவில் வேலை செய்பவர்கள் மிகக் குறைந்த கலோரிகளைத்தான் எரிக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை.
ராத்திரி 2 மணிக்கோ, 3 மணிக்கோ பசித்தால் நாம் என்ன சாப்பிடுவோம்? நிச்சயம் இட்லி, தோசை கிடைக்காது. சிப்ஸ், பிஸ்கட், டீ, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்களைத்தான தேடுவோம். இந்த மாதிரி நேரங்கெட்ட நேரத்தில், அதுவும் சத்து இல்லாத குப்பை உணவுகளைச் சாப்பிடுவது, ரத்தத்தில் சர்க்கரை அளவை 'கிடுகிடு'வென ஏற்றும். இது நீரிழிவு நோய் வருவதற்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பது போலாகும். அதேபோல, அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் ரத்தக் கொதிப்பை வரவைக்கும்.
பெண்களுக்கு வரும் சிக்கல்கள்!
இரவு நேரப் பணி, ஆண்களை விடப் பெண்களை இன்னும் மோசமாகப் பாதிக்கிறது. தொடர்ந்து நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதில்லை. ஹார்மோன் மாற்றங்களால் தாங்க முடியாத வலி, அதீத ரத்தப்போக்கு போன்றவை ஏற்படும். இதைவிடக் கொடுமை, 'எண்டோமெட்ரியோசிஸ்' (Endometriosis) என்ற கருப்பைச் சம்பந்தப்பட்ட நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது கருத்தரிப்பதில் சிக்கலை உண்டாக்கி, மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
இதயத்திற்கு ஆபத்து!
ஏற்கெனவே தூக்கம் இல்லை, போதாதக்குறைக்கு வேலை டென்ஷன், கூடவே தவறான உணவுப் பழக்கம்... இவை மூன்றும் சேர்ந்தால் பாவம் இதயம் என்ன செய்யும்? இரவு நேரத்தில் விழித்திருக்கும்போது, 'கார்டிசோல்' என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இது இதயத்திற்கு அதிகப்படியான வேலைப்பளுவைக் கொடுக்கும். நீண்ட நாட்கள் இப்படியே தொடர்ந்தால், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரித்து, மாரடைப்பு வரும் அபாயம் மற்றவர்களை விட இவர்களுக்கு மிக அதிகம்.
"வேலை முக்கியம்தான், ஆனால் அதைவிட வாழ்க்கை முக்கியம் இல்லையா?" இரவு ஷிப்ட் வேலை பார்ப்பது தவிர்க்க முடியாதது என்றால், உங்கள் உடல்நலத்தில் நீங்கள் இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும். பகலில் தரமான தூக்கம், சத்தான காய்கறிகள் நிறைந்த உணவு, நேரத்துக்குச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது மற்றும் தவறாமல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது மட்டுமே உங்களைக் காப்பாற்றும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)