நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளில் பெரும்பாலான செடிகள் மருத்துவ குணம் வாய்ந்தவை ஆகும். அந்த வகையில் நித்திய கல்யாணி பூ ஆயுர்வேதத்தில் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த மலராக பார்க்கப்படுகிறது. வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இந்த பூவின் மருத்துவ பயன்கள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
நித்திய கல்யாணி:
சமஸ்கிருதத்தில் ஸதாபுஷ்பம் என்றும், தமிழில் சுடுகாட்டு மல்லி, பட்டி பூ, நித்திய கல்யாணி எனவும், பெங்காலியில் நயனதாரா எனவும் பலவகை பெயர்களில் அறியப்படுகிறது. இந்தச் செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். வெப்ப மண்டலங்களில் காணப்படும் இந்த செடி வறண்டப் பகுதிகளில் அதிக அளவு காணப்படும் செடியாக இருக்கிறது.
இந்த நித்திய கல்யாணி அதிக மருத்துவ குணம் வாய்ந்த செடி என்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதை பயிர் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
நித்திய கல்யாணியின் மருத்துவ பயன்கள்:
நீரிழிவு நோய் உள்ளவர்கள் நித்திய கல்யாணி இலையை தேநீர் செய்து குடிப்பது இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
நித்திய கல்யாணியின் வேர், தண்டு, இலை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை இருவேளையும் பொடியில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் உருவாவது தடுக்கப்படும். நித்திய கல்யாணி செடியில் இருந்து எடுக்கப்படும் வின்க்கிரிசுட்டீன் என்னும் ஆல்கலாய்டு, புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. இது புற்றுநோய்க்கான வேதி சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு லிட்டர் தண்ணீரில் 5 நித்திய கல்யாணி பூக்களை சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பசியின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் தீரும். இரத்த அழுத்த பிரச்சனை குறையும்.
நித்திய கல்யாணி செடியை அரைத்து அதை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி தைலம் போல் தயார் செய்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் புண்களின் மீது தடவி வர விரைவில் புண்கள் குணமாகும்.
குறிப்பு: ஒருவருக்கு நோயின் தீவிரம் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்துக் கொண்ட பிறகுதான் இந்த நித்திய கல்யாணியை மருந்தாக உட்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.