இன்றைய நவீன உலகில் சர்க்கரை நோய் என்பது பெரும்பாலானவர்களை பாதிக்கும் ஒரு நோயாக உள்ளது. இது ஒரு நாள்பட்ட நோயாகும். இந்த நோயால் உடலின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், இதய நோய், பக்கவாதம், சிறுநீரகம் செயலிழப்பு, கண் பிரச்சினைகள் போன்றவை ஏற்படக்கூடும்.
சர்க்கரை நோய் எவ்வாறு வருகிறது?
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக இன்சுலின் குறைபாடு முதல் இடத்தில் உள்ளது. இன்சுலின் என்பது கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் செல்ல உதவுகிறது. கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது, அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
மரபணு ரீதியாகவும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. குடும்பத்தில் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படலாம்.
வயது அதிகரிக்கும்போது உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சர்க்கரை நோய் உண்டாகும். அதிகமாக உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தாலும் இந்த நோய் வரலாம். மேலும், அதிக சர்க்கரை, கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்பவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
சர்க்கரை நோயால் ஏற்படும் பிரச்சனைகள்!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவில்லை என்றால், இது பல்வேறு உடல் நல உபாதைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம், ரத்த நாளங்களில் பாதிப்பு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உயர் ரத்த சர்க்கரை, சிறுநீரகங்களை சேதப்படுத்தி சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் கண் பார்வை இழப்பு மற்றும் கண் நரம்பு சேதம் போன்ற கண் பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிகப்படியான ரத்த சர்க்கரை அளவு நரம்புகளை சேதப்படுத்தி வலி, மரத்து போதல், அரிப்பு, குணமாகாத காயங்கள் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால், கால் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து, இறுதியில் காலையே துண்டித்து எடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லலாம்.
சர்க்கரை நோய்க்கான சிகிச்சை நபருக்கு நபர் வேறுபடும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பல்வேறு வகையான மருந்துகள் உள்ளன. சில நபர்களுக்கு இன்சுலின் ஊசி போட வேண்டி இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைந்த ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இத்துடன் முறையான உடற்பயிற்சி ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கால்களை நன்றாக பராமரிக்க வேண்டும்.
சரியான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மருந்துகள் மூலமாக சர்க்கரை நோயை நிர்வகிக்க முடியும். அவ்வப்போது மருத்துவரை சந்தித்து, அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி, ரத்த சர்க்கரை அளவை கண்காணித்து சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு முறையாக கட்டுப்பாட்டுடன் இருப்பதன் மூலம் நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.