

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கம் கெடும். இந்த நிலை நோக்டூரியா (nocturia) என்று அழைக்கப்படுகிறது. இது நம் தூக்கத்தை இடைஞ்சல் செய்வதுடன், பகலில் சோர்வு, நினைவாற்றல் குறைவு மற்றும் செயல் திறன் குறைவு போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இதற்கான காரணத்தை அறிந்து அதை போக்குவதற்கு இயற்கை வைத்தியம் (nocturia natural remedies) கைகொடுக்கும்.
காரணங்கள்:
தூங்குவதற்கு முன்பு குறிப்பாக காஃபின் அல்லது ஆல்கஹால் கொண்ட பானங்களை அதிகம் குடிப்பது இரவில் சிறுநீர் கழிக்கும் தேவையை அதிகரிக்கும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகள் காரணமாகவும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் ஏற்படும்.
சில மருந்துகள் குறிப்பாக உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் சிறுநீர்ப் பெருக்கிகளாக (diuretics) செயல்பட்டு இரவு நேர சிறுநீர் கழித்தலை அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருப்பையின் அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
வயதாகும் பொழுது ஹார்மோன் அளவுகள் மாறுபடும். இது சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை பாதிக்கும்.
அதிகப்படியான திரவங்களை பருகுதல் காரணமாகவும் இப்பிரச்னை தோன்றலாம்.
புரோஸ்டேட்டின் அளவு அதிகரிப்பதன் மூலம் சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி சிறுநீர் கழிக்க வழி வகுக்கிறது.
தீர்வுகளும் தடுப்பு முறைகளும்:
பகல் நேரத்தில் போதுமான அளவு திரவங்களை அருந்தி மாலையில் குறைவாக குடிக்கலாம். தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதிகப்படியான திரவங்களைப் பருகுவதை தவிர்த்து விடவும்.
காஃபின் மற்றும் மதுபானங்களை குடிப்பதை தவிர்ப்பதும், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவதும் இந்தப் பிரச்னையை குறைக்க உதவும்.
நீரிழிவு, சிறுநீரக நோய்கள், UTI போன்ற மருத்துவ நிலைமைகள் உள்ளதா என்பதை பரிசோதித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
கெமோமில் தேநீர் அல்லது குருதிநெல்லி (cranberry) தேநீர் குடிப்பது சிறந்த பலனைத் தரும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்றலாம். இடுப்பு தசைகளையும் சிறுநீர்ப்பையையும் வலுப்படுத்த உதவும் Kegel பயிற்சிகளை செய்யலாம்.
சாக்லேட், செயற்கை இனிப்புகள், காரமான உணவுகள் போன்ற சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டும் உணவுகளைத் தவிர்க்கவும்.
சில துளசி இலைகளை கசக்கி தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகமுள்ளது. இது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுவதுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தேவையையும் குறைக்கும்.
இரவில் இரண்டு முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.