நுங்கும் பதநீரும் கோடை காலத்தின் கொடைகள்!

நுங்கும் பதநீரும்...
நுங்கும் பதநீரும்...

னை மரம் நம் மண்ணுக்குப் பலமும் வளமும் சேர்க்கின்ற மரமாகும். அதிலிருந்து கிடைக்கின்ற எந்தவொரு பொருளும் வீணாவதில்லை. அதிலும் கோடை காலத்தில் மட்டும் பனை மரத்தில் இருந்து கிடைக்கின்ற நுங்கும் பதநீரும் நமக்கு அத்தனை நன்மைகளைப் பயக்கும் பொருட்களாகும்.

கோடை காலம் வந்துவிட்டாலே சாலையோரங்களில் நுங்கு மற்றும் பதநீர் விற்கும் கடைகள் தற்காலிகமாக முளைப்பதைக் காணலாம். கடுங்கோடையின் அதீத வெப்பத் தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஆற்றல்கொண்டவை நுங்கும் பதநீரும்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா, எருமப்பட்டி பாளையம் எனும் கிராமத்தில் அகிலன் என்பவர், தனக்கான நிலத்தில் சுமார் ஐநூறு பனை மரங்கள் வைத்து பராமரித்து வருகிறார். சோழவரத்தில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்திலும், ரெட் ஹில்ஸ் எனப்படும் செங்குன்றத்தில் இருந்து பதினைந்து கி.மீ. தூரத்திலும், பொன்னேரியில் இருந்து இருபது கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது அந்த எருமப்பட்டி பாளையம் கிராமம். கடந்த எட்டு ஆண்டுகளாக பனைத் தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார் அகிலன்.

அகிலன்
அகிலன்

“மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு நுங்கும் பதநீரும் கிடைத்து வரும். இயற்கை அந்தந்தப் பருவ காலங்களுக்கு என்று நமக்கான கனிகளை, காய்களை, திரவ வடிவப் பானங்களைத் தந்து வருகிறது. அதில் நமக்கு மிகவும் இன்றியமையாததுதான் இந்த நுங்கும், பதநீரும்” என்கிறார் அவர்.

நுங்கிலே அப்படி என்னென்ன நன்மைகள்?

“வைட்டமின் பி, இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், ஜிங்க் போன்ற சத்துகள் நிறைந்தது நுங்கு. அதிலும் கோடை காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.

கோடை வெயில் காலத்தில் உருவாகும் அம்மையைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. தினசரி நுங்கு சாப்பிடுவோர்க்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
சித்தர்கள் உலா வரும் சிவன்மலை!
நுங்கும் பதநீரும்...

மேலும், உடலில் கெட்ட கொழுப்பினைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கக் கூடியது நுங்கு.

வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் இரண்டுக்கும் சிறந்த மருந்தாகவும் அமைந்துள்ளது.

கோடை காலத்தில் பலருக்கும் உடலில் வியர்க்குரு அல்லது வியர்க்குரு கட்டிகள் உருவாகும். வியர்க்குரு மற்றும் வியர்க்குரு கட்டிகள் மேலே நுங்கு நீரையும் நுங்கின் மேல் ஓட்டினையும் வைத்துத் தேய்த்து வந்தால் அவை மறைந்து விடும்.

நுங்கு ...
நுங்கு ...

நுங்கினை மசித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து அருந்தி வர, அல்சர் மற்றும் வயிற்றுப் புண்கள் ஆகியனக் கட்டுப்படுத்தப்படும்.

நுங்கு சாப்பிடுபவர்கள் பெரும்பாலோர், நுங்கின் மேல் தோல் எனப்படும் அந்த ஓட்டினை நீக்கி விட்டு, நுங்கின் சதைப் பகுதியை மட்டுமே சாப்பிடுகிறார்கள். அது அப்படியல்ல. நுங்கின் ஓட்டுடன் சேர்த்து சுவைத்துச் சாப்பிடுவதே, நுங்கு சாப்பிடுகின்ற முறையாகும். காரணம், அந்த நுங்கு ஓட்டிலே, துவர்ப்பு சுவை இருக்கும். அந்தத் துவர்ப்பு சுவையுடன் சேர்த்து நுங்கு சாப்பிடுவதே நமது உடலுக்கு கூடுதல் நன்மையாகும். நுங்கு ஓட்டின் துவர்ப்புக்கு வயிற்றுப் புண்களை ஆற்றுகின்ற தன்மை உண்டு.“

பதநீர் நன்மைகள் என்னென்ன?

“கோடை காலத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த பானம். உடலில் செல்களை வளர்த்து புத்துணர்ச்சி தரக் கூடியது பதநீர். எலும்புகளுக்கு வலுவானது. பதநீர் குடித்தவர்கள் அன்று முழுவதும் சுறு சுறுப்பாக இருப்பார்கள். பதநீர் உடலைக் குளிர்ச்சி படுத்தக் கூடியது. ரத்த சோகையைப் போக்கும்.

தலையில் பேன் தொல்லை உள்ளவர்கள், தலைக்கு பதநீர் தேய்த்துக் குளித்தால் பேன் தொல்லை நீங்கி விடும்.”

பதநீர்...
பதநீர்...

வியாபாரம் எப்படி?

“பனை மரம் ஏறி நுங்குக் குலைகள் வெட்டிப் போடவும், பதநீர் இறக்கவும் நான்கைந்து தொழிலாளிகள் என்னிடம் இருக்கின்றனர். நுங்குக் குலைகளுடனும் அல்லது சீவிய நுங்குகளையும் இங்கு எருமப்பட்டி பாளையத்துக்கு நேரில் வந்து பலரும் வாங்கிச் செல்கின்றனர். தினசரி அறுபது லிட்டர் பதநீர் இறக்குகிறோம். விற்றது போக மீதமுள்ள பதநீரை அப்படியே பனங்கருப்பட்டியாகத் தயாரித்து விடுவோம். எங்களிடம் ஒரிஜினல் கருப்பட்டி மற்றும் ஒரிஜினல் கருப்பட்டித் தூள் கிடைக்கும்” என்கிறார் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி எருமப்பட்டி பாளையம் பனைத் தொழில் ஆர்வலரான அகிலன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com