
முந்திரி மரங்கள் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. போர்த்துகீசிய மாலுமிகள் வடக்கு பிரேசிலில் தோன்றிய மரத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். ஒரு முந்திரி மரம் பொதுவாக அது நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தி செய்யத் தொடங்குகிறது, ஆனால் அது உச்ச, அறுவடை செய்யக்கூடிய உற்பத்திக்கு எட்டு ஆண்டுகள் ஆகலாம். ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் தரும் இந்த முந்திரி மரங்களில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு தயாராக பழங்கள் கிடைத்து விடும்.
சாப்பிட்டால் தொண்டை கரகரக்கும் என்பதால் யாரும் முந்திரிப்பழத்தை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், முந்திரி பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு வைட்டமின்" சி " உள்ளது.
இதனை வெந்நீரில் கொதிக்க வைத்து சாப்பிட கரகரப்பு நீங்கும். உப்பு நீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம். முந்திரி பழத்தை சாப்பிட்டால், நம்ப முடியாத பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
முந்திரி பழத்தில் புரோட்டீன், பீட்டா கரோட்டின் என்ற ஆன்டிஆக்சிடன்ட், நார்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. நம் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம் போன்றவை முந்திரி பழத்தில் காணப்படுகின்றன. இனிப்பும், லேசான துவர்ப்பு சுவையும் இந்தப் பழத்தில் இருக்கின்றன. இந்தப் பழம் கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கிறது.
இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. குறிப்பாக, வைட்டமின் பி மற்றும் ஈ, இரும்புச் சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானவை. உடம்பில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் முந்திரி பழத்தினை சாப்பிடுவதால், ரத்த சோகையிலிருந்து விடுபட முடியும்.
இதிலுள்ள வைட்டமின் சி சத்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்களைப் பாதுகாத்து நோய் வராமல் தடுக்க உதவுகின்றன. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள் முந்திரிப் பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
முந்திரிப் பழத்தை மரத்திலிருந்து பறித்து 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அது அழுகி விடும். அதனால் இப்பழம் இந்தியாவில் மிகவும் விற்கப்படுவதில்லை.
இதன் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலம். இதை சாப்பிட்டால் நுரையீரல் செயல்பாடு சீராக இருக்கும். முந்திரி பழ சாற்றினை பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறலாம்.
முந்திரி பழத்தினை உண்ணும்போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. இதயத்தை காப்பதற்கு இது உதவுகிறது. முந்திரி பழத்தில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய அமிலங்கள் அதிக அலவில் காணப்படுகின்றன. இதனால் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
முந்திரிப் பழமானது, நமது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுத்து, கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. இந்த பழங்களிலுள்ள ப்ரோஆந்தோசயனின்கள் என்ற சேர்மமானது, பெருங்குடல் புற்றுநோயை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
முந்திரி பழத்தினை உண்ணும் போது அதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு வளர்ச்சியையும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சருமத்தில் உண்டாகும் வீக்கம், அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றைப் போக்குகிறது. முந்திரி பழத்தினை உண்ணும் போது மலச்சிக்கல் தீரும், நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற உதவுகிறது. முந்திரி பழத்தினை அடிக்கடி சாப்பிடுவதால் முடி உதிர்தல் குறையும்.
முந்திரி பழம் சாப்பிட, நரம்புகள் பலம் பெறும், கண் நோய்களை குணமாக்கும், பார்வை தெளிவடையும். மாணவர்களின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும், ரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
கோடை காலங்களில் இந்தப் பழத்தை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கவும் உதவி செய்கிறது. வித்தியாசமான சுவையையும், ஆரோக்கியத்தையும் ஒருங்கே வழங்கும் இந்தப் பழத்தை அளவாக சாப்பிடுவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)