உலகம் முழுவதும் உடல்பருமன் பல உடல்நல பிரச்னைகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பு உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தினை சீர்கெட வைக்கிறது. உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்னை மட்டுமல்லாது, பல கடுமையான நோய்களின் ஆபத்தும் அதன் பின்னால் உள்ளது.
உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது, கொழுப்பு செல்கள் தனி உறுப்பைப் போல செயல்பட ஆரம்பித்து பல வகையான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய தொடங்குகின்றன. இந்த ஹார்மோன்கள் புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன என்று மருத்துவ ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன.
உடல்பருமனால் பெரும்பாலான மனிதர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. கல்லீரல் செயல்பாடு குறைவது தான், உடலில் பல்வேறு நோய்கள் தாக்க காரணமாக உள்ளது. கல்லீரல் செயல்பாடு சர்க்கரையையும் , கொழுப்பையும் கட்டுப்படுத்தி உடலுக்கு நன்மை செய்கிறது. அது பாதிப்பு அடையும் போது இரண்டையும் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரை நோயையும், அதிக கொழுப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
உடல்பருமன் சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் , இதய நோய் உள்ளிட்ட நோய்களையும் தூக்கத்தில் மூச்சுத்திணறல், தசை பலவீனம் , நடக்க , உட்கார சிரமம் , மூச்சு வாங்குதல் போன்ற ஆரோக்கிய கெடுதல்களையும் கொண்டு வருகிறது. மேலும் வயிற்று புற்றுநோய் , பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற மிகவும் கொடுமையான நோய்களை உண்டாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
சரியான நேரத்தில் உடல் பருமனை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைத்தால் பல நோய்கள் வருவதிலிருந்து உடலை காப்பாற்றி ஆரோக்கியமாக வாழலாம். ஒருவரின் சரியான உடல் எடையை அவரது உயரத்தை வைத்து கணக்கிட வேண்டும். இதன் மூலம் உங்களின் உயரத்திற்கு ஏற்ப எடையை கொண்டு உள்ளீர்களா ? என்பதைக் கண்டறியலாம்.
இன்றைய வாழ்க்கை முறையில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உப்பு , சர்க்கரையின் அதிகப் படியான நுகர்வு உடல் ஆரோக்கியத்திற்கு விஷமாக இருக்கும். இவற்றை மிகவும் குறைவாக அளவில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு தீமை இருக்காது. சர்க்கரையை உணவுகளில் சேர்ப்பதை தவிர்க்கலாம். இதனால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காது என்று தவறாக நினைக்கலாம். ஆனால், உண்மையில் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் அரிசி , கோதுமை உள்ளிட்ட சர்க்கரை சேர்க்கப்படாத உணவுகளிலும் போதுமான அளவில் உள்ளது. அதிலிருந்து தேவையான சர்க்கரையை உடல் உறிஞ்சிக் கொள்ளும்.
உடல் எடையை குறைப்பது தான் பலவிதமான நோய்களிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் ஒரே வழிமுறையாகும். இதற்காக தினசரி உடற்பயிற்சி , நடைபயிற்சி , ஓட்டம் , சைக்கிளிங் போன்ற ஏதேனும் ஒன்றை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். உணவில் குறைந்த எண்ணெயை பயன்படுத்துவதும் , கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். நல்ல தூக்கமும் நல்ல மனநலனும் உடல் ஆரோக்கியத்தை திறம்பட நிர்வகிக்க செய்யும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)