
பொதுவாக, மக்களிடம் ‘கர்மா’ என்ற சொல்லிற்கு வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் பலவிதமான விளக்கங்கள் காணப்படுகின்றன. சிலர், அவர்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் செய்த செயல்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக கர்மாவை பார்க்கிறார்கள். இருப்பினும், மற்றவர்கள் நம்முடைய செயல்கள் நம் வாழ்க்கையை உண்மையிலேயே வடிவமைக்கிறதா அல்லது நமது தற்போதைய செயல்கள் நமது எதிர்காலத்தைப் பாதிக்குமா என்று தனக்குத்தானே கேள்விகளை எழுப்பி குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
எதுவுமே தற்செயலாக, விதியால் நடக்காது. உங்கள் செயல்களால் உங்கள் விதியை நீங்களே உருவாக்குகிறீர்கள். இதுதான் கர்மா. ‘நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்’, ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்கிற பழமொழிகளை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். இதைத்தான் பிரபல விஞ்ஞானி நியூட்டன், ‘ஒவ்வொரு செயலுக்கும், அதற்கு சமமான மற்றும் எதிர்எதிர்வினை உண்டு’ என்று எப்போதோ நமக்குக் கண்டுபிடித்து கூறி விட்டார். நாம் நல்லது செய்தால் அந்த கர்மாவே நமக்கு திரும்பி வரும். காலமும் கர்மாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒரு பறவை உயிரோடு இருக்கும் காலத்தில் எறும்புகளை உணவாக உண்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதே பறவை இறந்து விட்டால் அந்தப் பறவையை எறும்புகள் உண்ணும். இதுதான் கர்மா.
‘கர்மா’ என்ற சொல்லிற்கு சமஸ்கிருதத்தில் செயல் என்று பொருள். நாம் உண்ணும் உணவில் இருந்து நாம் நினைக்கும் எண்ணங்கள் வரை நாம் செய்யும் அனைத்தும், ஏதோ ஒரு வடிவத்தில் நமக்குத் திரும்பி வருவதற்கான ஆற்றலை உருவாக்குகின்றன. பகவத்கீதையின்படி, கர்மா என்பது ஒருவரின் செயல்களைப் பொறுத்து அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும். வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் பிரபஞ்சக் கொள்கையாகும்.
கர்மாவின் 12 விதிகள்:
1. காரணம் மற்றும் விளைவு விதி: இது மிகவும் அடிப்படையான விதி. பெரும்பாலும் கர்மாவுடன் நெருக்கமாக தொடர்புடையது. நாம் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்தும் ஆற்றல் அல்லது எண்ணங்களுக்கு ஏற்றவாறு அதே முறையில் திரும்பி நம்மிடமே வரும். நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும். தீங்கு விளைவித்தால் நமக்கு தீங்கு நேரும்.
2. படைப்பு விதி: வாழ்க்கை என்பது நமக்கு ஒரு தனித்துவமான அனுபவம் மட்டுமல்ல என்பதை படைப்பின் விதி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வாழ்க்கையில் நம்முடைய லட்சியங்களை அடைய வேண்டுமானால் நாம்தான் அவற்றை வெளிப்படுத்தி, அதற்கான உறுதியான செயல்களைச் செய்ய வேண்டும். நேரம் வரும்போது தானாக வரும் என்ற சிந்தனையோடில்லாமல் நமக்குத் தேவையானதை நாமேதான் உருவாக்க வேண்டும்.
3. பணிவு விதி: இந்த கர்ம விதியானது, ஒரு தனிநபர் தான் எதிர்கொள்ளும் எதையும் தனது கடந்த கால செயல்களின் விளைவு என்று ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு ஆணவம் கொண்டவராக இருக்கக் கூடாது என்று எடுத்துரைக்கிறது. உதாரணமாக, வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது பிசினசிலோ ஏதாவது தவறோ அல்லது நஷ்டமோ ஏற்பட்டால் அதற்கு மற்றவர்கள்தான் முழு காரணமென்று அவர்களை குறை கூறுவது தவறு. இதில் நாமும் நம் கடமைகளை நிறைவேற்றத் தவறியதால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்று ஏற்றுக்கொண்டு அடுத்தவர்களைப் பணிவோடு நடத்த வேண்டும். ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதை மாற்ற முடியும். அதற்கான பணிவு நம்மிடம் இருக்க வேண்டும்.
4. பொறுப்பு விதி: நம் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதற்கான பொறுப்பை நாமே ஏற்க வேண்டும். நம்முடைய பிரச்னைகளுக்கு மூல காரணமாக மற்றவர்களையோ அல்லது பொருட்களையோ குறை கூறக்கூடாது என்பதை இது உறுதி செய்கிறது.
5. கவனம் செலுத்தும் விதி: எப்போதுமே இருவேறு விஷயங்களைப் பற்றி ஒரே நேரத்தில் சிந்திக்க முடியாது. ஒரே நேரத்தில் பல விஷயங்களுக்கு இடையில் கவனத்தை செலுத்தும்போது, அது மனதை குழப்பமடையச் செய்து எதிர்மறை மற்றும் விரக்தியை ஏற்படுத்தும். அதனால்தான் கவனம் செலுத்தும் விதி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வருத்தம், கோபம் அல்லது பேராசை போன்ற உணர்வுகளை நீக்க விரும்பினால், அமைதி மற்றும் அன்பு செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
6. இங்கே, இப்போது என்று நினைக்கும் விதி: கடந்த காலத்தைப் பற்றி நினைத்தால் நிகழ்காலத்தில் வாழ முடியாது. நிகழ்காலத்தைத் தழுவுவது என்பது அமைதியை அனுபவிப்பதற்கும் உண்மையிலேயே உள் அமைதியை அடைவதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். கடந்த காலத்தில் நடந்த எதிர்மறை நடத்தைகளையும் சோகங்களையும் மனதிலிருந்து நீக்கினால்தான் நம்மால் தற்போதைய தருணத்தை முழுவதுமாக அனுபவிக்க முடியும்.
7. வளர்ச்சி விதி: உண்மையான, நீடித்த மாற்றத்திற்கான முயற்சி நம் உள்ளிருந்துதான் வர வேண்டும். தன்னைத்தானே மென்மேலும் வளர்த்துக் கொள்ளும் எண்ணங்கள் நமக்குள்ளிருந்து தானாகவே வர வேண்டும். ஏனென்றால், நம்முடைய வளர்ச்சி நம்மை சுற்றியுள்ளவர்களிடமிருந்து வருவதல்ல, நம்மிடம்தான் இருக்கிறது.
8. இணைப்பு விதி: நம்முடைய வாழ்க்கையானது கடந்த நிலை, தற்போதைய நிலை மற்றும் வரவிருக்கும் நிலை என அனைத்து நிலைகளோடும் சிக்கலான முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதையே இந்த விதி கூறுகிறது. இன்று நாம் அனுபவிக்கும் அனைத்தும் கடந்த கால வாழ்க்கையில் நாம் செய்த செயல்கள் மற்றும் நோக்கங்களின் விளைவாகும். அதைப்போல தற்போதைய செயலானது எதிர்காலத்தை தீர்க்கமாக வடிவமைக்கும்.
9. கொடுத்தல் மற்றும் விருந்தோம்பல் விதி: நாம் நம்பும் விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் விரும்பும் செயல்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு அதை அடுத்தவர்களுக்கும் விருந்தோம்பலாகக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, நாம் அமைதியான உலகில் வாழ விரும்பினால், மற்றவர்களுக்கும் நாம் அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும்.
10. மாற்றம் விதி: கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நாம் எதையாவது கற்றுக் கொண்டோமேயானால், அதை நிகழ்காலத்தில் கடைபிடித்து வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும். அவ்வாறு மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவமே மீண்டும் மீண்டும் நிகழும் என்று இந்த விதி நமக்குக் கூறுகிறது. மாற்றத்திற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்போது அதைத் தவற விடாமல் நம்மை நாமே திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.
11. பொறுமை மற்றும் வெகுமதியின் விதி: எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த, நிகழ்காலத்தில் நாம் நம்முடைய செயல்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று இந்த விதி கட்டளையிடுகிறது. ஒரு நாள் கடமைகளை நன்றாக செய்து விட்டு, அடுத்த நாள் நம் செயல்களுக்கு நாம் முரணாக இருந்தால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. செயல்களிலும் நோக்கங்களிலும் சீராக இருந்தால்தான் நாம் விரும்புவதை அடைய முடியும். மேலும், பொறுமையையும் கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
12. முக்கியத்துவம் மற்றும் உத்வேகத்தின் விதி: நாம் அனைவருக்குமே இந்த உலகத்தில் ஒரு பங்கு கண்டிப்பாக இருக்கிறது. இந்த உலகிற்கு நாம் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் நம் பங்கை அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். நம்முடைய பங்கு சில நேரங்களில் நமக்கு சிறியதாகத் தோன்றலாம். ஆனால், அது வேறொருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நமக்கு ஒரு ஊக்கம் தேவைப்படும்போது அல்லது ஒரு நோக்கமோ விஷயமோ நம் வாழ்க்கையில் இனி இல்லை என்று உணரத் தொடங்கும்போது கவனம் செலுத்த வேண்டிய ஒரு சிறந்த விதிதான் இந்த உத்வேக விதி.
நம் மனதில் தீய சிந்தனைகளையும் தவறுகளையும் திருத்திக்கொண்டு வாழ்ந்தால் கர்மா என்பது எளிமையாக இருக்கும். கர்மாவின் இந்த 12 விதிகளையும் நாம் புரிந்து கொண்டோமேயானால், நம் வாழ்க்கையை நாம் மாற்றலாம். நம்மை நாமே தெரிந்து கொண்டு நம்முடைய உந்துதல்களை ஆழப்படுத்தலாம். மேலும், எந்தவொரு கனமான கர்மாவிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொண்டு நன்மை பயக்கும் வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.